திணை : முல்லை.

     துறை : இது, வினைமுற்றி மீள்வான் இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.

     (து - ம்) என்பது, சென்று வினைமுடித்து மீளுந் தலைமகன், தான் காதலியைக் கண்டு மகிழ்வதனை நினைந்து விரைய வருகின்றான் நெறியில் வந்து கண்ட அயலாரொடு, 'அயலீர், எம் காதலி எமக்கு விருந்தயரும் விருப்பினளாய் உணவு அமைக்கும் நிலைமையை இதன் முன்னம் முழுமையும் பெற்றுடையேமோ? இல்லையே! இப்பொழுது பெறலாகியதே! இஃது என்ன வியப்பு," என மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "அருந்தொழின் முடித்த செம்மற்காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்” (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.

    
முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்  
    
ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக் 
    
களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப 
    
உச்சிக் கொண்ட ஓங்குகுடை வம்பலீர் 
10
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை 
    
வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல் 
    
நீர்வார் புள்ளி ஆகம் நனைப்ப 
    
விருந்தயர் விருப்பினள் வருந்துந் 
    
திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே. 

     (சொ - ள்) முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின் ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடி - பரல் நிரம்ப மேலே பொருந்திய சென்று சேர்தற் கியலாத நெறியில் உயர்ந்து தோன்றும் உப்பு வாணிப மக்கள் நிறைந்திருக்கின்ற சிறிய குடிகளையுடைய; களரிப் புளியின் காய்பசி பெயர்ப்ப - களர்நிலத்தில் விளைந்த புளியின் கனியைச் சுவைத்து உண்டு நும்மை வருத்துகின்ற பசியைப் போக்குதலானே; உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர் - மீட்டும் நெறியிலே செல்லும் வன்மை மிக்குடையீராய் உச்சி மேற் கொண்ட உயர்ந்த குடையையுடைய புதிய மாந்தர்காள்; பிற்றை நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப - இது காறும் பிரிந்ததனால் பிரியும் பொழுதின்றி அதன்பின்பு வருந்திக் கண்ணீர் வடிந்து விழுதலாலாகிய புள்ளி கொங்கையை நனையா நிற்ப; விருந்து அயர் விருப்பினள் - யாம் புதியேமாகி வருதலின் எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய்; வருந்தும் வீழ் மாமணிய புனை நெடுங் கூந்தல் திருந்து இழை - அட்டிற்சாலை புகுந்து உணவு அமைக்குந் தொழிலில் வருந்துகின்ற விரும்பிய கரிய மணியின் தன்மையுடைய அலங்கரித்த நெடிய கூந்தலையும் திருந்திய கலன்களையும்; தேம் மொழி அரிவை நிலை முற்றையும் உடையமோ - இனிய மொழியையுமுடைய மடந்தையினிலையை இதன்முன்பும் இவ்வாறிருக்க முழுதும் பெற்றுடையேமோ? இல்லைகண்டீர்! இப்பொழுதுதான் பெறலாகியதே! இஃதென்ன வியப்பு; எ - று.

     (வி - ம்) காய்செவி பெயர்ப்ப எனவும் பாடம். அதற்குப் பசியாலாய செவி அடைப்புத் தீர என்க.

     பின்பு பிற்றை யென்பது போல முன்பு முற்றையெனத் திரிந்தது போலும்; அருகிய வழக்கு. மற்று : அசைநிலை. கூந்தல் திருந்திழைத் தேமொழி அரிவை யெனக் கூட்டுக.

     இதன்முன் அட்டிற்சாலை புகுந்தறியாதாள் எம்பாலுள்ள அன்பால் இன்று புகுந்து வருந்தா நிற்குமென்று மகிழ்கின்றான் 'முற்றையுமுடையமோ'வென்றான். தனக்கு அன்பு மீதூர்ந்து வாய் சோர்ந்து சொல்லி விரைந்து தோன்றலின் யாதொரு தொடர்பு மில்லாத நெறிவரும் அயலாரை விளித்துக் கூறினான்.

     மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

(374)