(து - ம்) என்பது, களவின்வழி வந்தொழுகுந் தலைமகன் ஒரு சிறைப் புறமாக வந்திருப்பதை யறிந்த தோழி, தலைமகளை இல்வயிற் செறித்ததை அவன் அறிந்து மணஞ் செய்துகொள்ளுமாற்றானே கிளிகளை நோக்கிக் 'கிளியின் கூட்டமே, அன்னை எம்மை இல்வயிற் செறித்திருப்பதனை நீயிர் அறிந்தீரன்றே! இனி வெறியு மெடுக்கும் போலும்; இவற்றை எம் காதலனைக் காண்பீரேல் நன்றாக அவனுக்கு அறிவியுங்கோள்' என்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதுவுமது.
| முறஞ்செவி யானைத் தடக்கையில் தடைஇ |
| இறைஞ்சிய குரல பைந்தாள் செந்தினை |
| வரையோன் வண்மை போலப் பலவுடன் |
| கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம் |
5 | குல்லை குளவி கூதளங் குவளை |
| இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் |
| சுற்றமை வில்லன் செயலைத் தோன்றும் |
| நற்றார் மார்பன் காண்குறின் சிறிய |
| நன்கவற்கு அரிய உரைமின் பிற்றை |
10 | அணங்கும் அணங்கும் போலும் அணங்கி |
| வறும்புனங் காவல் விடாமை |
| அறிந்தனிர் அல்லிரோ அறனில் யாயே. |
(சொ - ள்) முறம் செவி யானைத் தடக்கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைந் தாள் செந்தினை - முறம்போலுஞ் செவியையுடைய யானையினது வளைந்த கைபோல வளைந்து தலைசாய்ந்த கதிர்களையும் பசிய அடித்தண்டினையும் உடைய செவ்விய தினையை; வரையோன் வண்மை போலப் பல உடன் கிளையோடு உண்ணும் வளை வாய்ப் பாசினம் - வரையாது கொடுப்பவனது கைவண்மைக்கு ஈண்டும் பரிசிலர்போலப் பலவாகிய சுற்றத்தொடு நெருங்கிவந்து உண்ணாநின்ற வளைந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டமே!; அறன் இல் யாய் அணங்கி - தலைவனை முன்பு முயங்கி அவனை நீங்கிய பின்னர் அறநெறியிலே நில்லாத எம் அன்னை எம்மை வருத்தி; வறும் புனம் காவல் விடாமை அறிந்தனிர் அல்லிரோ - காவலின்றி அழிகின்ற தினைப்புனத்தினை யாங் காவல்செய்யவிடாது இல்வயிற் செறித்திருப்பதனை நீயிர் அறிந்தீரன்றே; பிற்றை அணங்கும் அணங்கும் போலும் - இதன்பின்பு வெறியெடுத்தலாலே முருகவேளும் எம்மை வருத்தும் போலும்; குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - ஆதலின் குல்லை மலைப்பச்சை கூதாளி குவளை தேற்றா என்பனவற்றின் மலராற் புனைந்த மிகக் குளிர்ந்த பூமாலையை யுடையவனும்; சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும் நல் தார் மார்பன் காண்குறில் - வரிந்து கட்டிய அமைந்த வில்லையுடையவனுமாகி அசோகமரத்தின்கீழ் வந்துநிற்கும் நல்ல மாலையணிந்த மார்புடைய அவனை நீயிர் காண்பீராயின்; சிறிய அரிய நன்கு அவற்கு உரைமின் - இங்கு நிகழ்ந்த எல்லாவற்றினையும் கூறாது விடினும் சிறிய சிலவற்றையேனும் அறிந்து கொள்ளுமாறு நன்றாக அவனுக்கு உரையுங்கோள்! எ - று.
(வி - ம்) குல்லை - கஞ்சா; துழாயுமாம். இல்லம் - தேற்றாமரம். யாய் அணங்கிப் புனங்காவல் விடாமை அறிந்தனிர் அல்லிரோ வென்க. இமையார் என்னும் எதிர்மறை வினையாலணையும் பெயர் இமையோரெனத் திரிந்தது போல வரையானென்பது வரையோனெனத் திரிந்து நின்றது; இது, தூதுமுனிவின்மை. ஏனை மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரவுகடாதல்.
(பெரு - ரை) யாம் எத்துணை கூறினும் அவன் அறிகின்றிலன் என்பது தோன்ற நீயிரேனும் அவற்கு நன்கு அறிய உரைமின் என்றாள்.
(376)