(து - ம்) என்பது, பாங்கியிற் கூட்டத்துக் கண்ணே தலைமகனைக் குறை நயப்பித்த தோழி நீட்டியாது வரைந்துகொள்ளுதல் முதலாய காரணங்களைக் கொண்டு தலைமகனுக்கு மறுத்துக் கூறுதலும், அதனை ஆற்றானாகிய தலைமகன் தோழி அறிந்து விரைவிலே தன் குறைமுடிக்கு மாற்றானே 'தலைவியை உள்ளுந்தோறும் அவள் என்னை வினாவி மெலிவிக்கும்; நோய் பெருகாநின்றது; அதுதீர மடலேறாது இறந்துபடேமோ'வென்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதனை, "மடன்மா கூறும் இடனுமா ருண்டே" (தொல். கள. 11) என்பதனாற் கொள்க.
| மடல்மா ஊர்ந்து மாலை சூடிக் |
| கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும் |
| ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப் |
| பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று |
5 | அதுபிணி ஆக விளியலங் கொல்லோ |
| அகலிரு விசும்பின் அரவுக்குறை படுத்த |
| பசுங்கதிர் மதியத்து அகனிலாப் போல |
| அளகஞ் சேர்ந்த சிறுநுதல் |
| கழறும் மெலிக்கும் நோயா கின்றே. |
(சொ - ள்) அகல் இரு விசும்பின் அரவுக் குறை படுத்த பசுங் கதிர் மதியத்து அகன் நிலாப் போல - அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல; அளகம் சேர்ந்த சிறு நுதல் - ஒளி வீசுகின்ற கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றியையுடையாள்; கழறும் மெலிக்கும் நோய் ஆகின்று - யாம் நினைக்குந்தோறும் எம்மெதிரே தோன்றி எம்மை வினாவி மெலியப் பண்ணாநிற்கும், அதனால் எமக்குக் காமநோய் நனி மிகாநின்றது; மடல் மா ஊர்ந்து மாலை சூடிக் கண் அகல் வைப்பின் நாடும் ஊரும் ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி - அது தீருமாறு பனை மடலாலே செய்த குதிரையேறி நடத்தி ஆவிரை எருக்கம் பூளை உழிஞை என்பனவற்றின் மலரை விரவித் தொடுத்த மாலையணிந்து இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுகள்தோறும் ஊர்கள் தோறும் சென்று ஒள்ளிய நெற்றியையுடைய அவளது அழகைச் சிறப்பித்துக் கூறி; பண்ணல் மேவலம் ஆகி - அம் மடலேறுந் தொழிலில் செல்லேமாகி; அரிது உற்று அது பிணி ஆக - எம் முள்ளத்தை அரிதாக நிலைநிறுத்தி அதுவே நோயாகக் கொண்டு கிடந்து; விளியலங்கொல்லோ - இறந்துபோக மாட்டேமோ? அங்ஙனம் மடலேறிப் பலராலும் இகழப்பட்டுத்தான் முடிய வேண்டும் போலும்! மடலேறுதலினும் உயிர்துறந்தொழிதல் நலனன்றோ? எ - று.
(வி - ம்) பண்ணல் மேவலம் என்பன ஒரு சொல்லாகிப் பாராட்டி என்பதற்கு முடிபாயின. அகனிலாவையுடைய மதியம்போல வென மாறிக்கூட்டினும் அமையும். எதிர் தோன்றுதல் - உருவெளித் தோற்றம். இது, துன்பத்துப் புலம்பல்.
அவளைச் சிறப்பித்துக் கூறுவான்போலத் தான் அவள்பால் வைத்த அன்பின் நிலைமை புலப்படுத்தினான். நோய்கொண்டு இறவேமோ என்றதனால் மடலேறி வரைபாய்ந்து முடியவேண்டும் போலும் என்றான். இதனால் அவள் காரணமாக உயிர்விடத் துணிந்தமையும் அவ்வாறு உயிர்விடும் பழி நும்மை விடாதென்பதையும் அறிவுறுத்தினானாயிற்று. மெய்ப்பாடு - தன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - தோழி குறை முடிப்பது; அன்றேல் தானே கூறியாறுதல்.
(பெரு - ரை) நலம் பாராட்டிப் பண்ணலாகிய அத் தொழிலை மேவலம் ஆகி என்க.
(377)