(து - ம்) என்பது, இல்வயிற் செறித்துக் காவலோம்பிய பொழுது வருந்திய தலைவியை வினாவிய தோழிக்கு, அவள் இன்ன காரணத்தால் கண் நீலமொத்தன விரல் காந்தளொத்தன வென்று கூறாநிற்பதுமாகும்.
(இ - ம்) இதற்கு, "மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| புன்தலை மந்திக் கல்லா வன்பறழ் |
| குன்றுழை நண்ணிய முன்றில் போகாது |
| எரிஅகைந்து அன்ன வீததை இணர |
| வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய |
5 | தேம்பெய் தீம்பால் வௌவலின் கொடிச்சி |
| எழுதெழில் சிதைய அழுத கண்ணே |
| தேர்வண் சோழர் குடந்தை வாயில் |
| மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த |
| பெயலுறு நீலம் போன்றன விரலே |
10 | பாஅய் அவ்வயிறு அலைத்தலின் ஆனாது |
| ஆடுமழை தவழுங் கோடுயர் பொதியின் |
| ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த |
| காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே. |
(சொ - ள்) புன் தலை மந்திக் கல்லா வன் பறழ் குன்று உழை நண்ணிய முன்றில் போகாது - ஐயனே! புல்லிய தலையையுடைய பெண் குரங்கினது தன் தொழிலையும் முற்றக் கற்றறியாத வலிய குட்டி சிறிய குன்றினிடத்துப் பொருந்திய சிறுகுடியின்கணுள்ள மனைவாயினின்றும் போகாது; எரி அகைந்து அன்ன வீ ததை இணர வேங்கை அம் படு சினை - எரி கப்பு விட்டாற்போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளைமீது; பொருந்திக் கொடிச்சி கைய தேம் பெய் தீம் பால் வௌவலின் - மறைந்திருந்து நீ காதலித்த கொடிச்சி கையகத்திருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தொடு வலிந்து பற்றிக்கொண்டு சென்றுவிட்டதனால்; எழுது எழில் சிதைய அழுத கண்ணே - ஓவியர் எழுதுதற் குரிய அழகெல்லாம் கெடும்படி அழுத அவளுடைய கண்கள்; தேர் வண் சோழர் குடந்தை வாயில் மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயல் உறும் நீலம் போன்றன - இரவலர்க்குப் பரிசாகத் தேர்களைக் கொடுக்கின்ற வண்மையுடைய சோழமன்னவர்க்குரிய 'குடவாயில்' என்னும் ஊரகத்து மழைபெய்து நிரம்பப் பெற்ற அகழியிலே தண்ணியவாய் மலர்ந்த பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலர் போன்றன; அல் வயிறு பாஅய் அலைத்தலின் விரல் சிவந்து - அங்ஙனம் பாற்கலம் பறிபட்டதற்கு ஆற்றாது அழகிய வயிற்றிலே பரவ அடித்துக்கொண்டதனால் அவளுடைய விரல்கள் சிவந்து; ஆனாது ஆடும் மழை தவழும் கோடு உயர்பொதியின் ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த காந்தளம் கொழுமுகை போன்றன - அமையாது இயங்குகின்ற மேகந்தவழும் கொடு முடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் என்னும் உயர்ந்த பெரிய மலையில் மலர்ந்த கொழுவிய காந்தளின் மலரும் பருவமுகை போன்றன; இத்தகைய இளமைவாய்ந்த அறியாமடமையாள் நின்னை மயக்கினள் என்பதும் நின்காமந் தணிக்கு மென்பதும் எவ்வண்ணமோ? ஒன்று கூறுவாயாக! எ - று.
(வி - ம்) படுசினை - தாழ்ந்த கிளை. தேம்பெய்பால் - கண்ட சருக்கரையொடு கலந்த பால். குடந்தை: குடமென்பதன் திரிபு. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - பேதைமையூட்டல்.
உரை :(2) கொடிச்சியாகிய தோழீ! யான் மெய் துவண்டது தான் என்னென்றனையே! பால் வௌவலின்கண் அழுது நீலம் போன்றன; வயிறலைத்தலின் விரல் காந்தள் போன்றன; எ - று.
கொடிச்சி வயிறலைத்து அழுமாறு, மந்தியின் மகவு பாலை வௌவுதல் போல நீ மனந்தளருமாறு ஏதிலார் பொன்னணிந்து தலைவியைக் கைக்கொள்ளினுமாம்; ஆதலின், இன்னே வரைகவென் றுரைத்தாளென வேறு மொருபொருள் பயப்பது அறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(379)