(து - ம்.) என்பது, தலைவன் வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிந்ததாலே தலைவி வருந்தியது கண்ட தோழி, நீ வருந்துவது புறத்தார்க்குப் புலனாயின் அலராகுமென்று வற்புறுத்துவது கேட்ட தலைவி, நம்மூர் இனிமையுடையதாயினும் நம் தலைவன் பிரிந்தவுடன் வெறுப்பாகத் தோன்றுகின்றதாதலின் யான் எங்ஙனம் வருந்தா தொழிவனென அழுங்கிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "வரைவிடைவைத்த காலத்து வருந்தினும்" (தொல்-கள- 21) என்னும் விதி கொள்க.
| வேட்டம் பொய்யாது வலைவளஞ் சிறப்பப் |
| பாட்டம் பொய்யாது பரதவர் பகர |
| இரும்பனந் தீம்பிழி யுண்போர் மகிழும் |
| ஆர்கலி யாணர்த் தாயினுந் தோடுகெழு |
5 | மெல்லம் புலம்பன் பிரியிற் புல்லெனப் |
| புலம்பா கின்றே தோழி கலங்குநீர்க் |
| கழிசூழ் படப்பைக் காண்ட வாயில் |
| ஒலிகா வோலை முள்மிடை வேலிப் |
| பெண்ணை யிவரு மாங்கண் |
10 | வெண்மணற் படப்பையெம் அழுங்க லூரே. |
(சொ - ள்.) தோழி ! கலங்கு நீர்க் கழி சூழ் படப்பைக் காண்ட வாயில் - தோழீ ! கலங்கிய நீரையுடைய கடற்கழி சூழ்ந்த தோட்டங்களையுடைய 'காண்ட வாயில்'என்னும் ஊரிலுள்ள; ஒலிகா ஓலை முள் மிடை வேலி - தழைந்த முற்றிய பனையோலையோடு முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலியகத்து; பெண்ணை இவரும் ஆங்கண் வெள் மணல் படப்பை எம் அழுங்கல் ஊர் - பனைமரங்கள் உயர்ந்த பெரிய மணல்மேட்டினையுடைய பக்கஞ் சூழ்ந்த ஒலிமிக்க எம்மூரானது; வேட்டம் பொய்யாது பாட்டம் பொய்யாது வலைவளம் சிறப்ப - கடலிடத்து மீன்வேட்டைமேற் சென்றார்க்கு ஆங்குத் தப்பாது பெறவேண்டி மழைபொய்யாது பெய்தலானே வலைவளம் சிறப்ப; பரதவர் பகர - அவ்வலை வளத்தால் வந்தபொருளைப் பிற நாட்டிற்சென்று பரதமாக்கள் விலைக்குவிற்றுவர, இரும்பனந் தீம்பிழி யுண்போர் மகிழும் - அப்பொருளை ஈந்து கரிய பனையின் இனிய கள்ளைப் பெற்றுண்பவராய் மகிழ்ந்திருக்கும், ஆர் கலி யாணர்த்து ஆயினும் - நிரம்பிய ஒலியையுடைய புதுவருவாயினையுடைய தாயினும்; தோடு கெழு மெல்லம் புலம்பன் பிரியின் புல் எனப் புலம்பு ஆகின்று - தொகுதி விளங்கிய நமது மெல்லிய கடற் சேர்ப்பன் நம்மைவிட்டுப் பிரிந்தகாலத்தில் நம்மூரானது பொலிவழிந்தாற் போல வருத்தமுடையதா யிராநின்றது; ஆதலின் யான் எங்ஙனம் வருந்தாது ஆற்றியிருப்பேன் ?; எ - று.
(வி - ம்.)பாட்டம் - மேகம்; "வெண்பாட்டம் வெள்ளந்தரும்" என்றார், (71) பழமொழியினும். "நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி, தானல்கா தாகி விடின்" (குறள்- 17)என்பதனாலும் கடல்படுபொருளுக்கும் மழை இன்றியமையாமையறிக. தோடு-படை முதலியவற்றின் தொகுதி. ஆங்கண் - அவ்விடம்; அசையுமாம். காவோலை - முற்றிய ஓலை; முற்றிக் காய்ந்த ஓலையுமாம். "தோழி, ஊர் யாணர்த்தாயினும் புலம்பன் பிரியிற் புலம்பாகின்று' எனக் கூட்டுக. ஆதலின் என்பது முதற் குறிப்பெச்சம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) தேர் கெழு மெல்லம் புலம்பன் என்றும் பாடம்: இதற்குத் தேர்கள் பொருந்திய மெல்லம் புலம்பினை யுடையோன் என்க. இனி, பரதவர் பகராநிற்பப் பிழி உண்போர் மகிழும் யாணர்த்து எனினுமாம்.
(38)