திணை : நெய்தல்.

     துறை : இஃது, ஒரு வழித்தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாள் ஆகிநின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது.

     (து - ம்) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் யாதோ வொருகாரியமாக இறைமகளை யகன்று போகியகாலை மாலையம் பொழுது கண்டு அவ்விறைமகள் வருந்துவதறிந்த தோழி தான் அவளை ஆற்றுவிக்காது தனியே வருந்தலும், அதனை யறிந்த தலைவி தான்படுந் துன்பத்தை யடக்கிக்கொண்டு தோழியை நெருங்கித் 'தோழீ! நம்மை யகன்ற காதலரை நினைந்து நாம் வருந்துவதாயினும் அவரும் நாணும் படி அலரெழுமாதலிற் கரத்தல் வேண்டும் என்பதறிந்தே யான் வருந்துகிலே'னென ஆய்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
கானல் மாலைக் கழிநீர் மல்க 
    
நீல்நிற நெய்தல் நிறையிதழ் பொருந்த 
    
ஆனாது அலைக்குங் கடல்மீன் அருந்திப் 
    
புள்ளினம் குடம்பை யுடன்சேர்பு உள்ளார் 
5
துறந்தோர் தேஎத்து இருந்துநனி வருந்தி 
    
ஆருயிர் அழிவது ஆயினும் நேரிழை 
    
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்புநீர்த் 
    
தண்ணந் துறைவன் நாண 
    
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. 

     (சொ - ள்.) நேர் இழை பரப்பு நீர்த் தண் அம் துறைவன் - நேர்மையான கலன்களையுடைய தோழீ! பரவுதல் கொண்ட கடல்நீரின் தண்ணிய துறைக்குத் தலைவராகிய நங்காதலர்; நாண நண்ணார் தூற்றும் பழி உண்டு - களவொழுக்கம் மேற்கொண்டு பலகாலும் இங்கு வருதலால் அவரும் நாணமெய்தி இனி இவ்விடத்தை நோக்காதபடி நமக்குப் பகைவராயுள்ள ஏதிலாட்டியரும் சேரியம் பெண்டிரும் ஒருசேரத் தூற்றுகின்ற பழிச்சொல்லுத்தான் மிகுதியாக உண்டன்றே!; மாலைக்கானல் கழி நீர் மல்க - ஆதலின் மாலைப் பொழுதிலே கடற்கரைச் சோலை சூழ்ந்த கழியிடத்து நீர் (உவா) வெள்ளமாகிப் பெருக; நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த - நீல நிறத்தையுடைய நெய்தலின் நிரையாகிய இதழ்கள் குவிய; ஆனாது அலைக்கும் கடல் மீன் அருந்திப் புள் இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் - அமைந்திராது அலையெழுந்துலாவுங் கடலகத்து மீன்களைத் தின்னுகின்ற பறவையின் கூட்டம் கானலின் கண்ணேயிருக்கின்ற தம்தம் கூட்டினிடத்தே ஒருசேரச் சென்று புகுதா நிற்றலையுடைய மாலையம் பொழுதை நினையாராய்; துறந்தோர் தேஎத்து - நம்மைக் கைவிட்டு அகன்ற அவர் முன்பு தங்கியிருந்த விடத்து; இருந்து நனி வருந்தி ஆர் உயிர் அழிவது ஆயினும் - நாம் இருந்து பிரிவுக்கு மிக வருந்திப் பெறுதற்கு அரிய வுயிர் அழிந்துபோவதாயிருப்பினும்; கரத்தல் வேண்டும் - அந் நோய் புறத்தார்க்குப் புலனாகாதபடி மறைத்துக்கொள்ளுதல் வேண்டும்; ஆதலால் யான் புலம்பாது ஆற்றியிருப்பேன்காண்!; அது காரணமாக நீ வருந்தாதேகொள்! எ - று.

     (வி - ம்) சேர்பு - சேர்தல். துறந்தோர், துறைவன்: பன்மை யொருமை மயக்கம்.

     இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடமாதலிற் கானலை முற்கூறினாள். அப்பொழுது துன்புறுங்காலம் மாலையாதலின் அதனையு முடன் கூறினாள். அலைக்குங் கடலில் மீனருந்திப் புள்ளினங் குடம்பைசேரு மென்றதனாலே அரிய நெறியிலே சென்று வினைமுடித்து மீண்டு வந்து கூறினாரில்லையே என்று குறிப்பித்தாளுமாம்.

     மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவி ஆற்றியதுகூறல்.

     (பெரு - ரை) நம்பெருமான் நம்மூ ரலர் மிகுதல் கண்டு அவ்வலர் குறைந்தொழிதற் பொருட்டே வாரா தொழிந்தனர். அவர் கருத்துக்கு நாமும் இயைந் தொழுகுகல் வேண்டுமன்றே ஆதலால் ஆற்றுவலென்பாள் "துறைவன் நாண நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே" என்றும், துறந்தோர் தேஎத்து உயிர் அழிவதாயினும் கரத்தல் வேண்டும் என்றும் கூறினாள். அவனுடைய அளியுடைமையைத் 'தண்ணந் துறைவன்' என இறைச்சியால் உணர்த்தினள்.

(382)