(து - ம்) என்பது, களவின்வழி வந்தொழுகுந் தலைமகனை நெறியினது ஏதங் கருதியஞ்சுவது கூறித் தோழி இறைச்சியாலே வரைவுடன் படுத்துகின்றாள். மலைநாடனே! எம் தலைவிபால் அருளுடையை யாயிருப்பினும் இன்னதொரு கொடிய நெறியில் வருதலானே நீ அருளுடையையல்லை என நொந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| கல்லயல் கலித்த கருங்கால் வேங்கை |
| அலங்கலம் தொடலை அன்ன குருளை |
| வயப்புனிற்று இரும்பிணப் பசித்தென வயப்புலி |
| புகர்முகஞ் சிதையத் தாக்கிக் களிறட்டு |
5 | உருமிசை உரறும் உட்குவரு நடுநாள் |
| அருளினை போலினும் அருளாய் அன்றே |
| கனையிருள் புதைந்த அஞ்சுவரும் இயவில் |
| பாம்புடன் றிரிக்கும் உருமோடு |
| ஓங்குவரை நாடநீ வருத லானே. |
(சொ - ள்) ஓங்கு வரை நாட அருளினை போலினும் - உயர்ந்த மலை நாடனே! நீ எம் தலைமகள்பால் மிக்க அருளுடையை போலுகின்றனை யாயினும்; கல் அயல் கலித்த கருங்கால் வேங்கை அலங்கல் அம் தொடலை அன்ன குருளை - மலையின் தாள்வரையிலே தழைந்த கரிய அடியையுடைய வேங்கை மலராலே தொடுக்கப்பட்ட அசைதலையுடைய மாலைபோன்ற குட்டிகளை; புனிற்று வயஇரும் பிணப் பசித்து என - அணித்தாக ஈன்ற வயாநோய் பொருந்திய கரிய பெண்புலி பசியுழந்ததாக ; வயப்புலி புகர் முகம் சிதையத் தாக்கிக் களிறு அட்டு - அதனை அறிந்த வலிய ஆண்புலி புள்ளிகளையுடைய முகம் பிளவுபடுமாறு மோதிக் களிற்றியானையைக் கொன்று; உரும் இசை உரறும் உட்குவரும் நடுநாள் - இடியினுங் காட்டில் மேலாக முழங்காநிற்கும் அச்சமிக்க நடுயாமத்திலே; கனை இருள் புதைந்த அஞ்சு வரும் இயவில் - செறிந்த இருளான் மூடப்பட்ட கருதினார்க்கு நடுக்கம் வருகின்ற நெறியின்கண்ணே; பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு நீ வருதலான்-பாம்பின்மீது சினந்து விழுந்து கொல்லுகின்ற இடி இடிக்கும் பொழுது நீ எங்களை நினைத்து வருதலானே; அருளாய் அன்று - அருளுடையை அல்லை காண்! எ - று.
(வி - ம்) அவனது அன்பின் மிகுதி புலப்படுத்துவாள் அருளினை போலினும் எனவும், பிரிதலானே தாங்கள் துன்புறுவதும் நெறியின தேதமுங் கூறுவாள் அருளாயன்றே யெனவுங் கூறினாள். இஃது அழிவில் கூட்டத்தவன் புணர்வுமறுத்தல்.
இறைச்சி :- பெண்புலி பசியுடையதென்றறிந்து ஆண்புலி களிற்றை அட்டுமுழங்குமென்றது, நின் காதலி வரைந்துகொள்ள விரும்புதலை அறிந்து நீ அயல்நாடு சென்று பகைவென்று பொருள் கொண்டு வலம்புரி முழங்க வருவாயாகவென்றதாம்.
மெய்ப்பாடு - பெருமிதம்.
பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை) அருளாய் - அருள்செய்யாயே ஆகின்றனை என்று பொருள் கூறி அன்று அசையெனினுமாம்.
(383)