திணை : பாலை.

     துறை : இஃது, உடன்போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

     (து - ம்) என்பது, தலைமகளை வைகிருளிலே கொண்டு தலைக்கழிந்து பரன் முரம்பாகிய பயனில் நெடுஞ்சுரஞ் செல்கின்ற தலைமகன் தன் நெஞ்சை நெருகி நெஞ்சமே! இம்மடவோளை வேங்கைமலர் உதிர்ந்து பரவ அதன்மீது அன்னப்பறவை நடந்தாற்போல நடக்க அதனை யாம் கண்டனம் இனி நீ காண்பாயாக வென்று மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, "ஒன்றாத் தமரினும்" என்னும் நுாற்பாவின்கண் "அப்பாற் பட்ட வொருதிறத் தானும்" (தொல். அகத். 41) என்பதனாற் கொள்க.

    
1 வண்புறப் புறவின் செங்கால் சேவல் 
    
களரி ஓங்கிய கவைமுட் கள்ளி 
    
முளரியம் குடம்பை ஈன்றிளைப் பட்ட 
    
வயவுநடைப் பேடை உணீஇய மன்னர் 
5
முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம் 
    
மாணில் சேய்நாட்டு அதரிடை மலர்ந்த 
    
நன்னாள் வேங்கைப் பொன்மருள் புதுப்பூப் 
    
பரந்தன நடக்கயாம் கண்டனம் மாதோ 
    
காணினி வாழியெம் நெஞ்சே நாண்விட்டு 
10
அருந்துயர் உழந்த காலை 
    
மருந்தெனப் படூஉம் மடவோ ளையே. 

     (சொ - ள்) எம் நெஞ்சே வாழி - எமது உள்ளமே நீ வாழ்வாயாக!; நாண் விட்டு அருந் துயர் உழந்த காலை மருந்து எனப்படும் - நாணமென்பது குறுக்கே தடுப்பின் அப்பொழுது காம நோயைத் தீர்க்கும் நெறியின்றி அரிய துன்பம் எய்தி யாம் வருந்தியவழி அத் துன்பநோய்க்கு மருந்தெனப்படாது நாணம் விட்டு நெருங்கிய காலத்து அக் காம நோய்க்கு மருந்தெனப்படுகின்ற; மடவோளை - மடப்பத்தையுடைய இவளை; வண் புறப்புறவின் செங்கால் சேவல் களரி ஓங்கிய கவை முள் கள்ளி முளரி அம் குடம்பை - வளவிய புறத்தையும் சிவந்த காலையுடைய புறவின் சேவல் களரியில் உயர்ந்து வளர்ந்து கவையாகிய முள்ளையுடைய கள்ளியின் தலையிலே சுள்ளிகளையடுக்கி அமைத்த குடம்பையின்கண்ணே; ஈன்று இளைப்பட்ட வயவு நடைப் பேடை - பிள்ளைகளை யீன்று அவற்றைக் காவல் செய்யுமாறு பொருந்திய வருந்திய நடையுடைய பேடையாகிய புறவு; உணீஇய - உண்ணும் பொருட்டு; மன்னர் முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம் மாண் இல்சேய் நாட்டு அதரிடை - வேற்றரசர் படையொடு வந்து பொருது பகைமுனையிலே சென்று எல்லாவற்றையும் கவர்ந்து சென்றொழிந்ததனாலே மாந்தர் யாருமின்றி முதிர்ந்த பாழ் நிலத்திலே தானே விளைந்து உதிர்ந்த நெற்கதிர்களைப் பெற்றுக் கொணர்ந்து கொடுக்காநின்ற மாண்பு சிறிதும் இல்லாத நெடுங்தூரத்திற்கு அப்பாலுள்ள நாட்டுக்குச் செல்லும் நெறியின்கண்; நல் நாள் மலர்ந்த வேங்கைப் பொன் மருள் புதுப்பூ - நல்ல நாட்காலையின் மலர்ந்த வேங்கை மரத்தின் பொன்போன்ற புதிய பூக்கள்; பரந்து அனம் நடக்க யாம் கண்டனம் - உதிர்ந்து பரவிக்கிடப்ப அப் பரப்பின்மீது அன்னப்பறவை நடப்பது போல நடக்க அதனை நாம் நேரே கண்டு மகிழ்ந்தோம்; இனிக் காண் - அவ்வாறே இனி நீயுங் காண்பாயாக! எ - று.

     (வி - ம்) களரி - பாலையிலுள்ள களர்நிலம். முளரி - சுள்ளி: விறகுமாம். இளைப்படல் - காவற்படல். பரந்து - பரவ எனக் திரிக்க.

     இறைச்சி :- பார்ப்பையீன்று காவலாயுள்ள புறவின்பேடை உண்ணுமாறு அதன் சேவல் முதுபாழில் விளைந்த நெற்கதிரைப் பெற்றுவந்து அளிக்குமென்றது, நெஞ்சமே! இவளைப்பெற்று இல்வயிற் செல்லுகின்ற யாம் ஆண்டு இவள் இல்லறம் நிகழ்த்துமாறு வேற்றுநாட்டுச் சென்று பொருளீட்டிவந்து கொடுத்து ஓம்புகிற்போமென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

     (பெரு - ரை) "அரணில் சேய் நாட்டு" என்றும் பாடம்; இதற்கு, 'காவலில்லாத தூரிய நாடு' என்க. இனி இவள் நமக்கு நாணம் விடாமலும் அருந்துயர் உழவாமலும் எப்பொழுதும் நுகரும் அமிழ்தமே ஆவள் என்பது குறிப்பு. நாண் விடுதல் - தன் தகைமைக் கேலாதன செய்தல்.

(384)
  
 (பாடம்) 1. 
பண்புறப் புறவு.