(து - ம்) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் வேண்ட நேர்ந்த தோழி தலைமகனைக் கண்ணாலே குறிப்பாகக் கூறி அறிவேனென வந்து அவன் பொய்கூறினானென இறைவி சினமாறாமை கண்டு வேறொரு காரியமாக அங்கு வந்தவள் போலக் காட்டிப் பின்னர் யான் இவள் கருத்தறியாது இறைவனுக்கு வாயில்நேர்ந்தேன்; அது கழிந்தது; இங்கு இவளது குறிப்பறிந்து அவ்வா றொழுகுவேன் என்று கருதி இறைவியை நெருங்கி மலைநாடன் களவின்கண்ணே நின்பால் சூளுறலும் நீ இழித்துக் கூறினையாகப் பின்னர் வரைவொடு புகுதக்கண்ட யான் அவர் பொய்யுரையாரென வியந்தேனென்பாள், உள்ளுறையால் அத்தகைய மெய்ம்மையுடைய தலைவர் இப்பொழுது நின் முன்றிலில் நிற்கின்றனர் காணென நயந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் |
| துறுகண் கண்ணிக் கானவர் உழுத |
| குலவுக்குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் |
| விடரளைப் பள்ளி வேங்கை அஞ்சாது |
5 | கழைவளர் சாரல் துஞ்சும் நாடன் |
| அணங்குடை அருஞ்சூள் தருகுவன் எனநீ |
| நும்மோர் அன்னோர் துன்னார் இவையெனத் |
| தெரிந்தது வியந்தனென் தோழி பணிந்துநம் |
| கல்கெழு சிறுகுடிப் பொலிய |
10 | வதுவை என்றவர் வந்த ஞான்றே. |
(சொ - ள்) தோழி சிறுகண் பெருஞ்சினப் பன்றி ஒருத்தல் துறுகண் கண்ணிக் கானவர் உழுத - தோழீ! சிறிய கண்ணும் பெரிய சினமுமுடைய ஆண்பன்றிகள் நிரம்பிய, மாலையணிந்த கானவர் உழுது விளைத்த; குலவுக் குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது - வளைந்த தினைக்கதிரைத் தின்று பக்கத்திலுள்ள மலைப்பிளப்பினைத் தனக்குத் தங்குமிடமாக உடைய புலிக்கு அஞ்சாது; கழைவளர் சாரல் துஞ்சும் நாடன் - மூங்கில் வளர்ந்த மலைச்சாரலில் உறங்காநிற்கும் மலைநாடன; அணங்கு உடை அருஞ் சூள் தருகுவன் என - ஒரு பொழுது நின்பாற் போந்து 'இன்னதொரு நாளில் வந்து நின்னை வரைந்து கொள்வேன் அதற்குச் சான்றாக முருகவேள் முதலாயினாரைச் சுட்டியுந் தொட்டும் யாருங் கருதலரிய சூள் செய்து தருவேன்' என்றலும்; நீ நும் ஓர் அன்னோர் இவை துன்னார் என - அதனைக் கேட்ட நீ அவரை நோக்கி, 'நின்னோடொத்த ஒருதன்மையோர் இத்தகைய சூள் புகலார் பெருந்தகைமை யென்பது நின் மாட்டில்லையாகலின் நீ சூளுறத் துணிந்தனை' என்று கூற; நம் கல் கெழு சிறு குடிப் பொலிய வதுவை என்று அவர் வந்த ஞான்று - அஃது உண்மையெனக் கொண்டிருந்த யான் பின்பு ஒருபொழுது நமது மலையகத்து விளங்கிய சிறுகுடி பெருகிப் பொலிவடைய அவர் அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து 'வதுவை யயர்தும்' என்றும் வந்தநாளில்; அது தெரிந்து வியந்தனென் - அதனையறிந்து இவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒருவர் என வியந்தனென்காண்! எ - று.
(வி - ம்) குலவுக்குரல் - வளைந்த கதிர். உலகத்துச் சூளுறுவார், அந்நிலத்துத் தெய்வம், பார்ப்பார், பசு, மகளிர் இவர்களைச் சுட்டியுந் தொட்டுஞ் சூளுறுவர். பரத்தையை முயங்கிவந்த தலைமகனைத் தலைமகள் வினாவப் பரிமாவூர்தன் முதலாய சிலவற்றைக் கூறி அவை காரணமாகப் பாணித்தேன் எனலும் தலைமகள் இவன் பொய்த்தான் மன்னோவெனத் துனி கூர்ந்தாளாக அதுகண்ட தோழி பண்டு நிகழ்ந்தது கூறிப் பொய்யாரென்று அறிவுறுத்தினாளாயிற்று.
உள்ளுறை :- பன்றி குறவருடைய ஏனற்கதிரைத் தின்று வேங்கைக்கு அஞ்சாது சாரலிலே துஞ்சுமென்றது, தலைமகன் பரத்தையரின்பந் துய்த்து உலகமிகழும் இகழ்ச்சிக்கு அஞ்சாது நின் முன்றிலிற்காத்து வைகினானென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஊடலைத் தணித்தல்.
(பெரு - ரை)பணிந்து என்னுஞ் சொல் உரையி்ல் வாளாவிடப் பட்டது. அதனை நமது ஏவற்குப் பணிந்து வதுவை என்று அவர் வந்த ஞான்றென இயைத்துக்கொள்க.
(386)