(து - ம்) என்பது, தலைமகன் பிரிதலானே மெலிவடைந்த தமைகளைத் தோழி நெருங்கிச் 'சுரத்தின்கண்ணே சென்ற காதலர் குறித்த கார்ப்பருவம் வந்திறுத்த தாதலின் அவர் இன்னே விரைந்து வருவர் காண்; அங்ஙனம் வருவதன்முன் நினது நலன் சிதைந்தழியுமாறு வருந்தாதே கொள்' என்று கூறிப் பருவங்காட்டி வலியுறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைப்பட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.
| நெறியிருங் கதுப்பும் நீண்ட தோளும் |
| அம்ம நாளும் தொன்னலஞ் சிதையேல் |
| ஓராச் செந்தொடை ஒரீஇய கண்ணிக் |
| கல்லா மழவர் வில்லிடை விலங்கிய |
5 | துன்னரும் கவலை அருஞ்சுரம் இறந்தோர் |
| வருவர் வாழி தோழி செருவிறந்து |
| ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த |
| வேல்கெழு தானைச் செழியன் பாசறை |
| உறைகழி வாளின் மின்னி உதுக்காண் |
10 | நெடும்பெருங் குன்றம் முற்றிக் |
| கடும்பெயல் பொழியுங் கலிகெழு வானே. |
(சொ - ள்) தோழி வாழி அம்ம - தோழி! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக; அஞ்சுவர செரு விறந்து ஆலங்கானத்து இறுத்த வேல் கெழு தானைச் செழியன் பாசறை - யாவரும் அஞ்சும்படி போர் வென்று தலையாலங்கானத்துச் சென்று தங்கிய வேற்படை பொருந்திய சேனைகளையுடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தனது பாசறையிலேயிருந்து ; உறை கழி வாளின் மின்னி - உறையினின்று நீக்கிய வாள் போலமின்னி; உதுக்காண் - உவ்விடத்தே பாராய்; நெடும் பெருங்குன்றம் முற்றிக் கலி கெழு வான் - நெடிய பெரிய மலையைச் சூழ்ந்து முழக்கம் மிக்க மேகம்; கடும் பெயல் பொழியும் - விரைந்து மழையைப் பெய்யாநின்றது; ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர் ஓராஅச் செந்தொடை வில் இடை துன் அரும் விலங்கிய கவலை - இப் பருவத்தினை நோக்கியவுடன் வெறுத்தொழிந்த மாலையையுடைய தந்தொழிலன்றிப் பிற கல்லாத வீரர் பயிலாது ஏந்திய செவ்விய அம்பினை வில்லினின்றும் விடுதலானே அஞ்சி யாரும் நெருங்குதற்கரிய குறுக்கிட்ட கவர்த்த வழியையுடைய; அரும் சுரம் இறந்தோர் - சென்று சேர்தற்கியலாத சுரத்தின்கண்ணே முன்பு சென்ற காதலர்; (விரைவில்) வருவர் - விரைவில் வாராநிற்பர்; நெறி இருங் கதுப்பும் நீண்ட தோளும் நாளும் தொல் நலம் சிதையேல் - அங்ஙனம் அவர் வருதற்குள்ளாக நீ வருத்தமுற்று நெறித்த கரிய கூந்தலினும் நெடிய தோளினும் நாள்தோறும் பழமையாயுள்ள அழகெல்லாவற்றையுங் கெடுத்துக்கொள்ளாதொழிவாய்; எ - று.
(வி - ம்) மழவர் - வீரர். உதுக்காணென்றது பருவங்காட்டியது. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை) ஒல்லாச் செந்தொடை என்றும் பாடம்; இதுவே சிறந்த பாடம். அறத்தொடுபடாத செந்தொடை என்றவாறு. செருவிறந்து - போரின்கட் செறிந்து என்க. இறந்து எனப் பிரிப்பாரும் உளர்.
(387)