(து - ம்) என்பது, வெளிப்படை
(உரை இரண்டற்கு மொக்கும்). (இ - ம்) இதுவுமது.
| அம்ம வாழி தோழி நன்னுதற்கு |
| யாங்கா கின்றுகொல் பசப்பே நோன்புரிக் |
| கயிறுகடை யாத்த கடுநடை எறிஉளித் |
| திண்திமில் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ |
5 | நடுநாள் வேட்டம் போகி வைகறைக் |
| கடல்மீன் தந்து கானல் குவைஇ |
| ஓங்கிரும் புன்னை வரி நிழல் இருந்து |
| தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்திப் |
| பெரிய மகிழுந் துறைவன்எம் |
10 | சிறிய நெஞ்சத்து அகல்வுஅறி யானே. |
(சொ - ள்) தோழி வாழி அம்ம - தோழி வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; நோன் புரிக் கயிறு கடையாத்த எறி உளிக் கடு நடைத் திண் திமில் பரதவர் - வன்மைமிக்க புரிகளான் முறுக்குண்ட கயிற்று நுனியிலே கட்டிய திமிங்கிலத்தின்மீது எறிகின்ற ஈட்டியையுடைய நீரில் விரைந்து செல்ல வல்ல திண்ணிய மீன்படகிலே செல்லுகின்ற பரதவர்; ஒள் சுடர்க் கொளீஇ நடுநாள் வேட்டம் போகி - ஒள்ளிய விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு நடுயாமத்து வேட்டைமேற்சென்று; கடல் மீன் வைகறைத் தந்து - கடலிலே பிடித்த மீன்களை விடியற்காலையில் கொண்டுவந்து; கானல் குவைஇ - கழிக்கரைச் சோலையின்கண்ணே குவித்து; ஓங்கு இரும் புன்னை வரிநிழல் இருந்து - உயர்ந்து கரிய புன்னை மரங்களின் வரியமைந்த நிழலிலிருந்து; தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி - தேன் மணம் வீசும் தெளிந்த கள்ளை அருகிலே தம் உறவினருடன் கூடிப்பருகி; பெரிய மகிழும் துறைவன் - அளவில்லாது மிகவும் மகிழ்ந்து வைகும் கடலின் துறையையுடைய தலைமகன்; என் சிறியநெஞ்சத்து அகல்வு அறியான் - எமது சிறிய உள்ளத்தினின்று நீங்குதல் கற்றறிந்திலனாதலின் எப்பொழுதும் எம்முள்ளத்தூடே இராநின்றனன்; நல் நுதற்குப் பசப்பு யாங்கு ஆகின்று - அங்ஙனம் அவன் எம்மைப் பிரியாது உறைதலானே எமது நல்ல நுதலின் கண்ணே பசலை எவ்வாறு உண்டாகாநிற்கும்; அதனை ஆராய்ந்து கூறிக் காண்! எ - று.
(வி - ம்) கடுநடைத் திமிலென்க. உளி: எஃகினாலாகிய ஈட்டிக்கு ஆகுபெயர்.
அவனது உயர்வுந் தனது தாழ்வுந்தோன்றச் சிறிய நெஞ்மென்றாள். காதலன் கையகன்றதனால் செயலறவுகொண்டு அவனைக் கருதியுறைகின்றே னெனவும். அங்ஙனங் கருதுவதொன்றனால் என் நுதலின் பசலை நீங்குவதன்றி அவன் வந்து முயங்கலான் நீங்குவது கண்டிலேனெனவுங் கூறினாளாயிற்று.
உள்ளுறை:- பரதவர் திமிலொடு சென்று மீன்பிடித்துக் கானலின்கண்ணே குவித்துப் புன்னையி னிழலிலிருந்து கிளையொடு தேறலை மாந்தி மகிழுந் துறையென்றது, தலைமகன் தேரொடு வேற்றுநாட்டுச் சென்று பொருளீட்டிவந்து முன்றிலிலே குவித்து எம்மனைக்கட் சுற்றத்தாரொடு மகிழ்ந்து என்னை மணந்து எனது நலனை நுகர்ந்து மகிழ்வானாக வென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - வரைவுடன் படுத்தல்.
(பெரு - ரை) அகல்வு அறியான் ஆதலின் பசப்பு யாங்கு ஆகின்று? எனக் கூட்டுக.
(388)