(து - ம்) என்பது, வெளிப்படை
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்பொறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே |
| புலிப்பொறி அன்ன புள்ளியம் பொதும்பின் |
| பனிப்பவர் மேய்ந்த மாயிரு மருப்பின் |
| மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை |
5 | ஒண்தொடி மகளிர் இழையணிக் கூட்டும் |
| பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு |
| ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின் |
| யாரோ பிரிகிற் பவரே குவளை |
| நீர்வார் நிகர்மலர் அன்னநின் |
10 | பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே. |
(சொ - ள்) மடந்தை குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன நின் பேர் அமர் மழைக் கண் தெள் பனி கொளவே ஆழல் - மடந்தாய்! குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் போன்ற நின்னுடைய பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தெளிந்த நீர் வடியும்படி நீ அழாதேகொள்!; பொருள்வயின் செலவு அழுங்குவர் - அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொணருமாறு செல்லுவதனை இன்னே ஒழிகுவர்காண்; புலிப்பொறி அன்ன புள்ளி அம் பொதும்பில் - புலியினது புள்ளி போன்ற புள்ளிகளமைந்த நிழலையுடைய மரங்கள் செறிதலினிடையே; பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர்தலைக்கார் ஆன் - படர்ந்த ஈரிய கொடியை மேய்ந்த நெடிய கரிய கொம்பையும் பருத்த தலையையுமுடைய எருமைமாடு; அகற்றிய தண்ணடை ஒள் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும் - அக்கொடியினின்று தின்றொழித்த மலைப்பச்சையின் இலைகள் ஒள்ளிய தொடியையுடைய மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு கூட்டாநிற்கும்; கொண்கான நன்னன் நல்நாட்டு பொன்படு ஏழிற் குன்றம் பெறினும் - கொண்கானத்தின்கணுள்ள நன்னனது நல்ல நாட்டிலிருக்கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும்; யார் பிரிகிற்பவர் - நின்னைவிட்டுப் பிரிபவர் யார்? எ - று.
(வி - ம்) காரான் - எருமை. தண்ணடை - மலைப்பச்சை. புள்ளி - இலையடராது புள்ளிப்பட்ட நிழல். நிகர் - ஒளி. இழையணிக்கூட்டும் - கலன்களாக அணியும்படி கூட்டாநிற்கும் எனவுமாம்.
உள்ளுறை:- எருமை தின்றொழித்த மலைப்பச்சை மாதர் இழையணியாகக் கூட்டுமென்றது, அவர் ஈட்டிக் கொணர நீ இல்லறம் நிகழ்த்தி எஞ்சிய பொருள் உலகத்துக்குப் பயன்படுங்கா ணென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை) பொருள்வயின் செலவு என்றும், 'பொன் படு ஏழிற் குன்றம்' என்றும் இயைத்துக்கொள்க. ஏழிற்குன்றம் என்பது கொண்கானத்துள்ள ஒரு மலையின் பெயர் என்க.
உள்ளுறையால் பொருள் இன்றியமையாமை யுணர்த்தி நீ செலவுடன்படுதலே அறிவுடைமையாம், அழல் அறிவாகாது என்றாளாயிற்று. நிகர்மலர் - ஒளியையுடைய மலர்.
(391)