(து - ம்) என்பது, தலைமகன் வரைவொடு வருதலை யறிந்த தோழி, தலைவியை நெருங்கி மகிழ்ந்து கூறுகின்றாள், 'நம் காதலர் நாம் உய்யுமாறு புதியராகி வரும் வருகையும் நாணம் மீதூர்தலான் நாம் ஒருங்குவதும் காண்பாராயின், அவர் வரைய வந்ததற் கேற்ப நமர் உடன்படுவரோ?" 'உடன்படின் காதலரோடு மகிழ்ந்து பேசுவரோ?' என ஆய்ந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "ஆங்கதன் தன்மையின் வன்புறை யுளப்பட" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின் |
| கடுஞ்சூல் வயப்பிடி கன்றீன்று உயங்கப் |
| பாலார் பசும்புனிறு தீரிய களிசிறந்து |
| வாலா வேழம் வணர்குரல் கவர்தலின் |
5 | கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி |
| வேய்பயில் அடுக்கஞ் சுடர மின்னி |
| நிலைகிளர் மின்னில் தோன்றும் நாடன் |
| இரவின் வரூஉம் இடும்பை நாம்உய |
| வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப |
10 | நமர்கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் |
| நேர்வர்கொல் வாழி தோழிநம் காதலர் |
| புதுவர் ஆகிய வரவுநின் |
| வதுவைநாண் ஒடுக்கமுங் காணுங் காலே. |
(சொ - ள்) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின் - நீண்ட மூங்கிலுயர்ந்த நிழல் மிக்க மலையில்; கடுஞ்சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க - முதிர்ந்த சூலினையுடைய வலிய பிடியானை தான் கன்றையீன்று வருந்தாநிற்ப; பால் ஆர் பசும் புனிறு தீரிய - பால் மடி சுரந்த பசிய ஈன்ற அணிமையினாலுண்டாகிய பசிநோயைத் தீர்க்க வேண்டி; களி சிறந்து வாலா வேழம் வணர்குரல் கவர்தலின் - மகிழ்ச்சி மிக்குக் கரிய களிற்றியானை வளைந்த தினைக்கதிரைக்கொய்து கொண்டு போதலாலே; கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி - கானவன் கண்டு எறிந்த விரைந்த செலவினையுடைய எரி கொள்ளி; வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி - மூங்கில் நிரம்பிய மலைப்பக்கமெங்கும் விளங்கும்படி மின்னி; நிலை கிளர் மின்னில் தோன்றும் நாடன் நம் காதலர் - விசும்பினிடத்தில் நிலை பெற்றிராது தோன்றி மறைகின்ற மின்னலைப்போலத் தோன்றாநிற்கும் மலை நாட்டினராகிய நம் காதலர்; இரவின் வரூஉம் இடும்பை நாம் உய - இரவில் வருதலாலாகிய துன்பத்தினின்று நாம் பிழைக்கவேண்டி; புதுவர் ஆகிய வரவும் நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்கால் - அவர் புதியராய் வரும் வருகையும் நின் வதுவைக்காக நீ நாணி ஒடுங்கியிருக்கும் ஒடுக்கமுங் கண்டக்கால்; வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப - அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து வரைவதற்கு வந்த வாய்மொழிக்கு ஏற்குமாறு; நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் - நம் சுற்றத்தார் மகட்கொடைக்கு உடன்படுவர் போலும், அங்ஙனம் உடன்படுவாராயின்; அவருடன் நேர்வர்கொல் - அவர்தாம் நம் காதலரொடு மகிழ்ந்து பேசுவரோ?; நேர்ந்து பேசுவரெனின் அது மிக்க நன்மையாகுங் காண்; எ-று.
(வி - ம்) வாலாவேழம் - வெண்மையில்லாத (கரிய) வேழம்.
உள்ளுறை:- ஈன்ற பிடியின் பசியைப் போக்க வேண்டிக் களிறு தினைக் கதிரை அழிப்பக் கண்ட கானவன் எறிந்த கொள்ளி எங்குஞ் சுடர மின்னித் தோன்று மென்றது, நீ படுங் காமநோயை யாற்ற வேண்டி யான் இயற்பழித் துரைப்பக் கேட்டு ஆற்றாத தலைமகன் நின்பால் அன்பு கொண்டு நமர்பெறுமாறு முன்றிலிற் குவித்த நிதியமுங் கலனும் எங்குஞ் சுடரொளி வீசாநின்றன வென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - கேட்ட தலைவி மகிழ்தல்.
(பெரு - ரை) வாலா வேழம் - வாலாமையுடைய வேழம். அணித்தாகப் பிடி கன்றீன்றமையின் களிறு வாலாமையுடைத் தாயிற்று என்றபடியாம். 'நிலைகிளர் மீனின் தோன்றும்' என்றும் பாடம். இதுவே சிறந்த பாடமாம். 'தன் நிலையிலே ஒளி வீசுகின்ற விண்மீன் போலத் தோன்றும்" என்றவாறு.
இனித் தினைகவர்ந்த களிற்றின்மேல் கானவன் எறிந்த ஞெகிழி ஒளியுடைய விண்மீன் போலத் தோன்றும் என்றது வரைவுகடாதற் பொருட்டு நாம் நம் பெருமான் திறத்துக் கூறிய சுடுசொல்லின் பயன் எல்லோரும் மகிழும் வரைவாகிவிட்டது என்னுங் குறிப்புடையது எனினுமாம்.
(3")