(து - ம்) என்பது, வெளிப்படை.
(இ - ம்) இதற்கு, ''நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்'' (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து |
| அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை |
| பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப் |
| பெய்ம்மணி ஆர்க்கும் இழைகிளர் நெடுங்தேர் |
5 | வன்பால் முரப்பின் நேமி அதிரச் |
| சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே |
| இடைச்சுரத்து எழிலி உரைத்தென மார்பின் |
| குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு |
| நறுந்தண் ணியன்கொல் நோகோ யானே. |
(சொ - ள்) மரம் தலை மணந்த நனந்தலைக் கானத்து அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை - மரங்கள் மிக நெருங்கிப் பொருந்திய இடமகன்ற காட்டின்கண்ணே வாடிய ஞெமையின் மீதிருந்த பேராந்தை; பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப - பொற் கொல்லன் தொழில் செய்வதினெழுகின்ற ஒலிபோல இனியவாய் ஒலியாநிற்ப; பெய்ம் மணி ஆர்க்கும் இழைகிளர் நெடுந் தேர் நேமி - பூட்டிய மணிகளொலிக்கும் அருங்கலம் விளங்கிய தேரினுருள்; வன்பால் முரம்பின் அதிர - சுரத்தினுள்ள மேட்டு நிலத்தின்கண் அதிர்ந்து செல்லாநிற்ப; பனிக் கடுநாள் சென்றிசின் - முன்பு இத் தோன்றல் முன்பனி நாளிலே சென்றனன்; இடைச் சுரத்து எழிலி உரைத்து என - இப்பொழுது சுரத்திடையே மேகம் எழுந்து உலாயதெனக்கொண்டு கார்ப்பருவம் வந்திறுத்ததென; மார்பின் குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு நறுந் தண்ணியன்கொல் - தன் காதலியை ஆற்றுமாறு மீள்வானாகித் தன் மார்பிற் குறிய புள்ளிகளமைந்த பூசிய சாந்தத்தினுங் காட்டில் நறிய குளிர்ச்சியுடையனாய் வாரா நின்றான்கண்டீர்!; வாழிய யான் நோகோ - இவன் வாழ்வானாக! யான் இதற்கு நோவேனோ? நோவேனல்லேன்! மகிழ்வேன் மன்; எ - று.
(வி - ம்) அலந்தலை - துன்பம்; நீரின்றி வாடிய ஞெமைக்கு அடைமொழியாயிற்று. தெளிர்த்தல் - ஒலித்தல். வன்பால் - பாலை. உரைத்தல் - உலாவல். மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.
உரை:- (2) [திணை - குறிஞ்சி] நென்னல் என்பாற் குறையுற்றுக் கையுறை ஈந்துவிட்டுச் சென்ற தலைமகனாவான் இடைச்சுரத்து மேகம் இயங்கி மழை பெய்தாற்போலக் குளிர்ச்சியுற்றவனாய் இன்று மீண்டு வாரா நின்றான்; யான் வன்சொல்லாற் குறை நயப்பித்துவிட்டமையால் இனி இறைவியை முயங்கி வாழ்வானாக; இதற்கு யான் நோவேனல்லேன். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தோழி தானே மகிழ்ந்துரைத்தல்.
(பெரு - ரை) இரண்டாந்துறை ''வன்சொல்லால் குறைநயப்பித்த தோழி தந்தளித்ததூஉமாம்'' என்றும் காணப்படுகின்றது.
இனி, இரண்டாவது துறைக்கு, நீ அவனை ஏலாவிடின் அவன் மீண்டும் வருகின்றிலன். நீ உடன்படாமையின் அவன் தன் தேரைச் செலுத்தி வன்பால் முரப்பில் நேமி அதிரச் சென்றான்மன்! இடைச்சுரத்தே மழை துளித்து மார்பில் குறும் பொறிக்கொண்ட குளிர்ச்சியை யுடையன் ஆவனோ ஆகானே! அவன் நிலைமை கருதி யான் நோகுவல் என்று தலைவி கேட்பத் தனக்குட் கூறியதாக நுண்ணிதிற் பொருள் கோடல் நன்று.
(3")