திணை : நெய்தல்.

     துறை : இது, நலந் தொலைந்தது.

     (து - ம்) என்பது, ''வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினும்'' (தொல். பொ. 114) என்ற விதிப்படி தலைவி கொடுஞ்சொற் கூறி வரைவுகடாவ வேண்டிய வழி அதனையறிந்த தோழி தலைமகனை நெருங்கி ''அன்பனே, நீ அயலானா யிராநின்றனை; எமக்கு யாராந் தன்மையை; நின்னால் யான் நலனிழந்தேம்; அதனைத் தந்து அப்பாற் செல்லுவாயாக'' என்று உள்ளுறையால் வேற்றுவரைவு நேர்ந்ததுங்கூறி வரைவுகடாவா நிற்பது.

     (இ - ம்) (துறைவிளக்கத்திற் கூறப்பட்டது.)

    
யாரை எலுவ யாரே நீயெமக்கு 
    
யாரையும் அல்லை நொதும லாளனை 
    
அனைத்தாற் கொண்கஎம் இடையே நினைப்பின் 
    
கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன் 
5
வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன 
    
ஓங்ககல் புணரி பாய்ந்தாடு மகளிர் 
    
அணிந்திடு பல்பூ மரீஇ ஆர்ந்த 
    
ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக் 
    
கடல்கெழு மாந்தை அன்னஎம் 
10
வேட்டனை அல்லையால் நலந்தந்து செல்மே. 

     (சொ - ள்) எலுவ யாரை நீ எமக்கு யார் - நண்பனே! யாரை நட்பாகவுடையை? நீ எமக்கு யாராந் தன்மையுடையை?; யாரையும் அல்லை நொதுமலாளனை - ஆராயின் நட்புடையாரையும் போல்வாயல்லை! அயலானாயினை!; எம் இடையே நினைப்பின் அனைத்தால் - எம்மிடத்தில் நீ நடந்து கொள்ளும் இயலை ஆராயப் புகின் அஃது அத் தன்மையதேயாகும்; கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் - கடிய பகடாகிய யானையையும் நெடிய தேரையுமுடைய குட்டுவன்; வேந்து அடு களத்தின் முரசு அதிர்ந்து அன்ன - பகைவேந்தரைக் கொன்ற போர்க்களத்தின் கண்ணே அவனது வெற்றிமுரசு அதிர்ந்தாற்போன்ற ஒலியையுடைய; ஓங்ககல் புணரி பாய்ந்து ஆடும் மகளிர் - அலையுயர்ந்து வருகின்ற கடலிலே பாய்ந்து விளையாட்டயர்ந்து நீராடுமகளிர்; அணிந்து இடு பல் பூ மரீஇ ஆர்ந்த ஆ - அணிந்து கழித்தெறிந்த பலவாய மலர்களைப் பொருந்தித் தின்ற முதிர்ந்த பசு; புலம் புகுதரு பேர் இசை மாலை - மீண்டு தான் உறைகின்ற புலத்துட் புகாநின்ற பெரிய இசையையுடைய மாலைப்பொழுதை எதிர் கொள்ளுகின்ற; கடல் கெழு மாந்தை அன்ன எம் - கடற்கரையின்கண் விளங்கிய மாந்தை நகர்போன்ற எம்மை; வேட்டனை அல்லை - விரும்பி யொழுகுவாயல்லையாதலின்; நலம் தந்து செல் - நின்னாலிழந்த எமது நலனைக் கொடுத்துவிட்டு அப்பாற் செல்லுவாயாக! எ - று.

     (வி - ம்) அணிந்து இடு பூ - அணிந்து கழத்துப் போகட்ட மலர்.

    உள்ளுறை :- மகளிர் கழித்துப் போகட்ட பூவை முதிர்ந்த பெற்றம் தின்னுமென்றது, நீ களவொழுக்கத்துக்கூடிப் பின்பு கைவிட்ட தலைவியை ஏதிலார் போந்து மணம் நயவாநிற்ப ரென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - நலந்தொலைவுரைத்து வரைவு கடாதல்.

     (பெரு - ரை) 'கொண்க' என்னும் விளியை ஏற்ற இடத்தில் ஒட்டுக இனி இச்செய்யுளைக் கற்பாக்கி ''மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்'' என்னும் துறைக்குக் காட்டினுமாம். எனவே இதற்கு இருவகைக் கைகோளும் ஆம். 'நம்மிடையே நினைப்பின்' என்றும், 'வேந்தடு மயக்கத்து' என்றும் பாடம். 'ஆ' என்றதற்கு முதிர்ந்த என்னும் அடை மிகையாம்.

(395)