திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாமை வேறுபடநின்ற தலைமகளைத் தோழி எம்பெருமான் இதற்காய நல்லது புரியுமென்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.

     (து - ம்) என்பது, தலைமகன் நெடுங்காலம் வரைந்து கொள்ளாது களவின்வழி வந்து ஒழுகலும் அது பொறாது வேறுபாடெய்திய தலைமகளருகிலே தோழி சென்று 'நீ வருந்தாதே கொள்; தலைமகன் நீ வருந்துவது அறிந்தால் இதற்கு இயைந்தவாறு செய்வேன்' என்பாள், சிறைப்புறத்தானாகிய அவன் கேட்டு விரைய வரையும்படி 'மலைநாடன் தானே நயந்து வரத் தகுந்த பெருமையையுடையை யென்பதை நினது நெற்றியினழகு தராநிற்குமன்றோ' என்று சூழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதுவுமது.

     துறை : (2) இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம்வேண்டு மென்றாற்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.

     (து - ம்) என்பது, வெளிப்படை. (உரை தலைமகள் கூற்றாகக் கொள்ள இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்) இதனை, "மறைந்தவற் காண்டல்" (தொல். கள. 20) என்னும் நூற்பாவின்கண் "அன்னவும் உள" என்பதனாற் கொள்க.

    
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்துக் 
    
குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள் 
    
வரியணி சிறகின் வண்டுண மலரும் 
    
வாழையஞ் சிலம்பின் கேழல் கெண்டிய 
5
நிலவரை நிவந்த பலவுறு திருமணி  
    
ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி  
    
களிறுபுறங் காப்பக் கன்றொடு வதியும 
    
மாமலை நாடன் நயந்தனன் வரூஉம் 
    
பெருமை உடையள் என்பது 
10
தருமோ தோழிநின் திருநுதற் கவினே. 

     (சொ - ள்) தோழி நின் திருநுதல் கவின் - தோழீ! நின் சிறப்புடைய நெற்றியின் அழகானது; அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து - அருவியொலிக்கின்ற பெரிய மூங்கில் மிக்க சாரலில்; குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் வரி அணி சிறகின் வண்டு உண மலரும் - இரத்தம் போன்ற கமழ்கின்ற காந்தளம்பூ வரிகள் பொருந்திய அழகிய சிறகையுடைய வண்டுகள் உண்ணும்படி மலராநின்ற; அம் சிலம்பில் - அழகிய சிலம்பின் கண்ணே; கேழல் கெண்டிய நிலவரை நிவந்த பலஉறு திருமணி ஒளிதிகழ் விளக்கத்து - பன்றி பறித்தலானே நிலத்திலே கிடந்து வெளியிற்போந்து விளங்கிய பலவாய மிக்க அழகிய மணிகளின் ஒளிவிடுகின்ற விளக்கத்திலே; ஈன்ற மடப்பிடி களிறு புறங் காப்பக் கன்றொடு வதியும் - கன்றையீன்ற இளைய பிடியானை தன்னைக் களிற்றியானை அயலிலே காத்துநிற்பத் தன் கன்றொடு வதியா நிற்கும்; மா மலை நாடன் - கரிய மலை நாடன்; நயந்தனன் வரூஉம் பெருமை உடையள் என்பது தரும் - தானே விரும்பினனாகி வருகின்ற பெருமையுடையள் என்பதைத் தராநிற்குமன்றோ? அங்ஙனந் தருமாதலின் அதனை வேறுபடுத்துக் கொள்ளாது விரைய வரையுங்காண்; எ - று.

     (வி - ம்) நினது நெற்றியினழகு மலைநாடனைத் தானே மணம் புரிந்து கூட்டுவிக்குமென்பது.

     உள்ளுறை:- மணிவிளக்கத்து ஈன்ற பிடியானை களிறு புறங்காப்பக் கன்றொடுவதியு மென்றது, நின்னை மலைநாடன் வரைந்து, இல்லறம் நிகழ்த்த அவனது மாளிகையில் நீ புதல்வரை யீன்று நின் காதலன் நின்னைப் பாதுகாப்ப மக்களொடு மகிழ்ந்து வைகுவை காணென்றதாம்.

     இறைச்சி:- வண்டுவந் துண்ணக் காந்தள் மலருமென்றது, காதலன் நின் நலனை நுகரவருங்கால் நீ வெறாது மகிழ்ந்துறைவாயாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை) இச் செய்யுளைத் தலைவி கூற்றாக்குங்கால் "தாயத்தினடையா..................என்றும்" (தொல். பொருளியல். 27) நூற்பாவின்கண் 'புல்லுவவுள' என்ற இலேசானே சிறுபான்மை தலைவி தன்னுறுப்பினைத் தோழி யுறுப்பாகக் கோடலும் உண்டெனக் கொண்டு இதன்கண் தலைவி தன் நுதலையே நின்றிருநுதல் என்றாளாகக் கொள்க.

(399)