திணை : பாலை.

    துறை : இது, பிரிவுணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது.

    (து - ம்.) என்பது, தலைவனாற் பிரிவுணர்த்தப்பட்ட தலைவி வருந்தியபொழுது முன்னாள் நின் குறுநடைக் கூட்டம் விரும்பிப் பிரியாதிருந்தவர் இப்பொழுது பொருளீட்டுமாறு சேணிடைச்சென்று வருந்துவதானது, பின்னர் நின்னோடு இல்லறம் வழுவாது நடத்தற் பொருட்டன்றோவென இவள் விருந்தெதிர்கொள்ளும் உலகியலையெடுத்துக் காட்டித் தோழி வற்புறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 9) என்னும் நூற்பாவின்கண் 'மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்' என்புழி வரும் பிற என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
பைங்கண் யானைப் பரூஉத்தா ளுதைத்த 
    
வெண்புறக் களரி விடுநீ றாடிச் 
    
சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப் 
    
பாரம் மலிசிறு கூவலின் தணியும்  
5
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ 
    
எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக் 
    
கிளரிழை அரிவை நெய்துழந் தட்ட 
    
விளரூன் அம்புகை எறிந்த நெற்றிச்  
    
சிறுநுண் பல்வியர் பொறித்த 
10
குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே 

    (சொ - ள்.) கிளர் இழை அரிவை எல்லி வந்த நல் இசை விருந்திற்கு - விளங்கிய கலன் அணிந்த அரிவையே; இரவின்கண் வந்த நல்ல புகழையுடைய விருந்தினர் உண்ணவேண்டி; நெய் துழந்து அட்ட விளர் ஊன் அம்புகை எறிந்த நெற்றிச் சிறுநுண் பல் வியர் பொறித்த - நீ நெய்யை அளாவவிட்டுக் கொழுவிய தசையைச் சமைத்ததனாலாகிய புகைபடிந்த நெற்றியின்கண் சிறிய நுண்ணிய பலவாய வியர்வை நீர் தோன்றப் பெற்ற; குறுநடைக் கூட்டம் வேண்டுவோர் - குறுகிய நடையொடு சென்ற நின் புணர்ச்சியை அக்காலத்து விரும்பினவர்; பைங் கண் யானை பரூஉத் தாள் உதைத்த வெள் புறக் களரி விடு நீறு ஆடி - பசிய கண்களையுடைய யானை தன் பருத்த காலால் உதைத்தலிற் பொடிபட்ட வெளிய மேலிடத்தையுடைய பாழ்நிலத்திலுள்ள விடு புழுதி மூழ்கப்பெற்று; சுரன்முதல் வருந்திய வருத்தம் - சுரத்தின்கண் வந்து வருந்திய வருத்தமெல்லாம்; பைபயப் பாரம் மலி சிறு கூவலில் தணியும் - மெல்ல நடந்து பருத்திகள் சூழ முளைத்திருக்கின்ற சிறிய கிணற்றிற் சென்று தணித்துக் கொள்ளா நிற்கும்; நெடுஞ்சேண் சென்று வருந்துவர் - நெடிய மிக்க சேணிடத்தேகி வருந்தாநிற்பர் போலும்; அங்ஙனம் போய் வருந்துவதும் பின்னர் நின்னொடு இல்லறம் வழுவாது நடத்தற் பொருட்டு அன்றோ? இதனை ஆராயாது வருந்துவது என்னை ? எ - று.

    (வி - ம்.) பாரம் - பருத்தி. இது பருத்திவாணிபர் அந்நெறியிற் சென்று கூவலருகில் தங்குழி ஆண்டு அவ்வித்துதிர்ந்து முளைத்திருப்பது. விளர் - கொழுப்பு. விருந்தெதிர்கொண்டமை கூறலின் உலகியலாயிற்று; இஃது ஒப்புரவெனவும்படும். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) இனி, இச் செய்யுளின்கண் சுரன்முதல்வருந்திய வருத்தம் கூவலிற்றணியும் என்றதன்கண் இக்காலத்தே நம் பெருமான் பிரிவினால் நீ எய்தும் துன்பம் அவன் ஈட்டிவரும் பொருளால் நீ இல்லிருந்தியற்றும் அறத்தினாலே சிறந்த பயன்றரும் என இறைச்சி தோன்றுதல் உணர்க. அம்புகை எறிந்த நெற்றி என்புழி அம் நெற்றி, புகை எறிந்த நெற்றி எனத் தனித்தனி இயைத்து அழகிய நெற்றி எனினுமாம். இவ்வுரையாசிரியர் இசைநிறையாக்கினர். பாரமலி சிறுகூவல் என்பது பாஅர் மலி சிறுகூவல் என்றும் காணப்படுகின்றது.

(41)