திணை : பாலை.

    துறை : இது, பிரிவுணர்த்தப்பட்ட தோழி, தலைவனைச் செலவழுங்குவித்தது.

    (து - ம்.) என்பது, தலைவன் தான் வினைவயிற் பிரிதலை அறிவிப்பக்கேட்ட தோழி, நீயிர் பிரிந்து சுரம்போகுதல் நுமக்கு உவகையுடைத்தாயிராநின்றது, அங்ஙனம் பிரிதலைக் கேட்டவுடன் இவட்குப் பெரியதோ ரழிவு வாராநின்றது, ஆதலின், ஏற்றது செய்ம்மினெனச் செலவழுங்கக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல்-கற்- 9) என்னும் விதி கொள்க.

    
துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின் 
    
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் 
    
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி  
    
ஆர்ந்தன வொழிந்த மிச்சில் சேய்நாட்டு 
5
அருஞ்சுரஞ் செல்வோர்க்கு வல்சி யாகும் 
    
வெம்மை யாரிடை இறத்தல் நுமக்கே 
    
மெய்ம்மலி யுவகை யாகின்று இவட்கே 
    
அஞ்ச லென்ற இறைகை விட்டெனப்  
    
பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்தலின் 
10
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் 
    
ஓரெயில் மன்னன் போல 
    
அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே. 

    (சொ - ள்.) துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் - வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் விளங்கிய வெப்பத்தையுடைய கோடை நீடிய மலைப்பக்கத்தில்; ஓய் பசிச் செந்நாய் உயங்கு மரை தொலைச்சி - நுணுகிய பசியையுடைய செந்நாய் வாடிய மரையாவைக் கொன்று போகட்டு; ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் - தின்றொழிந்த மிச்சில்; சேய் நாட்டு அருஞ் சுரஞ் செல்வோர்க்கு வல்சியாகும் - நெடுந்தூரத்திலுள்ள வேற்று நாட்டினின்று செல்லுதற்கரிய பாலைநிலத்தின்கண்ணே செல்லுகின்ற மாந்தர் உண்ணும் உணவாயிருக்கும்; வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கு மெய்ம்மலி உவகை ஆகின்று - வெப்பமுற்ற அரிய வழியிலே செல்லுதல் நுமக்கு உடம்பு நிறைவுற்ற மகிழ்ச்சியுடைத் தாயிராநின்றது; இவட்கு ஒழிதல் கேட்டு அஞ்சல் என்ற இறைகைவிட்டென - இவட்கோவென்றால் நீயிர் பிரிந்து போதலைக் கேட்டவுடன் - 'அஞ்சாதே கொள்' என்ற துணைவயின் வந்த அரசன் கைவிட்டானாக; பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலில் - அப்பொழுது பைங்கண்ணையுடைய யானைப் படையையுடைய பகைவேந்தன் தன் மதிற்புறத்து வந்து தங்கலும்; களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் ஓர் எயில் மன்னன் போல - தனக்கு வந்த துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் கலக்கமுற்ற உறுப்புக்கள் அமைந்த உடைந்த ஒரு மதிலையுடைய அரசனைப் போல; அழிவு வந்தன்று - அழிவு வராநின்றது; ஆதலின் ஏற்றதொன்றனைச் செய்ம்மின்; எ - று.

    (வி - ம்.)உருப்பு - வெப்பம். என்றூழ் - கோடை. ஒய்பசி - நுட்பமாகிய பசி. ஆரிடை - அரிய வழி. ஆகின்று - ஆகிற்று. எயில் - மதிலுறுப்பு; துணையரசன் காதலனாகவும், அவன் கைவிட்டவுடன் பகையரசன் புகுதல், தலைவன் பிரிந்தவுடன் காமந் தலையெடுத்துப் புகுதலாகவும், ஓருடைமதில் ஏனைய கழிந்து எஞ்சிய நாணமொன்றே அதுவுஞ் சிதைந்து நின்றதாகவும், மன்னன் தலைவியாகவும் உவமையும் பொருளு மொத்தவாறறிக.

    இறைச்சி :- செந்நாய்தின்ற மரையாவின் தசை நெறியிற் செல்வோர்க்கு உணவாகுமென்றதனானே, நீயுண்டெஞ்சிய தலைவியினது நலனைப் பசலை யுண்டொழிக்கு மென்றதாம். எனவே முற்பட இறைச்சியாற் பொருள் கொள்ளுமாறு கூறக்கேட்டும் தலைவன் பிரிதலே மேற்கோடலின் வெளிப்படை யுவமத்தானுங் கூறிச் செலவழுங்குவித்தாளாயிற்று. மெய்ப்பாடு - பிறன் கட்டோன்றிய அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.

    (பெரு - ரை.) மெய்ம்மலிதற்குக் காரணமான உவகை உண்டாகா நின்றது எனினுமாம். கலங்கிய மன்னன், ஓரெயில் மன்னன் எனத் தனித்தனி கூட்டுக.

(43)