(து - ம்.) என்பது, தலைமகன் பகற்குறி வந்தொழுகுநாளுள் ஒருநாள்! யாதோ ஒரு காரணத்தாற் பிரிதலும் வேறுபட்ட தலைவியின் வேறுபாடறிந்த செவிலி அவளை இற்செறித்தபின் மற்றைநாட் குறியிடத்து வந்த தலைவன் தன் நெஞ்சை நோக்கி 'நீ மலைநாடன் மகளை முன்னரே கருதித் துய்த்து மகிழாமல் மனைவயிற்செறிக்கப்பட்ட பின்பு கருதிய நின்னாலோ அவள் அறியத்தக்கவ' ளென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பரிவுற்று மெலியினும்" (தொல்-கள- 11) என்னும் விதிகொள்க.
| பொருவில் ஆயமோ டருவி யாடி |
| நீரலைச் சிவந்த பேரமர் மழைக்கண் |
| குறியா நோக்கமொடு முறுவல் நல்கி |
| மனைவயிற் பெயர்ந்த காலை நினை இய 5 | நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த | | நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக் | | கொழுங்குரல் கோடல் கண்ணிச் செழும்பல | | பல்கிளைக் குறவர் அல்கயர் முன்றில் | | குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய | 10 | பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச் | | செல்மழை யியக்கங் காணும் | | நன்மலை நாடன் காதன் மகளே. | |
(சொ - ள்.) நெஞ்சே நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக் கொழுங் குரல் கோடல் கண்ணி - நெஞ்சே ! கொல்லையிலுள்ள நீண்ட இலையையுடைய முற்றிய கதிரைத் தாங்கமாட்டாமே சாய்ந்த தினையின் வளைந்த தாள் நிமிர்ந்துநிற்குமாறு அவற்றின் கொழுவிய கதிர்களைக் கொய்துகொண்டு போதலைக் கருதி; செழும்பல் பல்கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில் - செழுவிய மிக்க பல கூட்டமுடைய குறவர்கள் சிறார் கூடித் தங்கி விளையாட்டு அயர்கின்ற முன்றிலின்கண் இருந்து; குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச் செல்மழை இயக்கம் காணும் - குடம் போன்ற காயையுடைய ஆசினிப் பலாவையுடைய தோட்டத்தில் நீண்ட பலவாய மரங்களினுயர்ந்த கிளைகளிலுள்ள மின்மினியை விளக்கமாகக் கொண்டு விசும்பு செல்லுகின்ற மழை முகிலினியக்கத்தை அறியாநிற்கும்; நல் மலை நாடன் காதல் மகள் பொரு இல் ஆயமோடு அருவி ஆடி - நல்ல மலைநாடன் அன்புள்ள புதல்வி, ஒப்பில்லாத தோழியர் கூட்டத்துடன் அருவியினீராடி; நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக்கண் குறியா நோக்கமொடு முறுவல் நல்கி - அங்கு நீரான் அலைக்கப்படுதலாலே சிவந்த பெரிய அமர்த்த குளிர்ச்சி்யையுடைய கண்களின் குறிக்கப்படாத பார்வையையும், புன்னகையையும் நமக்குத் தந்து; மனைவயின் பெயர்ந்த காலை - தனது மனையிடத்துச் சென்றுவிட்ட பிற்பாடு; நினைஇய நினக்கோ அறியுநள் - கருதிவந்த நின்னாலோ அவள் அறியத் தக்காள் ! முன்னரேயன்றோ கைப்பற்றிக் கொண்டிருக்க வேண்டும் ! எ - று.
(வி - ம்.)கால் - தாள். குரல் - கதிர். இயக்கம் - சஞ்சாரம். நினக்கு : உருபு மயக்கம். இதனால் ஆண்டுப்போந் தின்பந்துய்த்தாயில்லை; பின்னர்வந்து புலம்புதி யென்றவாறு குறவர் தினைகொய்தலைக் கருதி யுறையு முன்றிலென்னுங் குறிப்பால் தினைகொய்யப்பட்டதும் தலைவி பின்னர்ச் சுனையாடி மனைவயிற்புக்கதுங் கூறியவாற்றால் இற்செறிப்புண்ட பின்னர்த் தலைவன் கூற்று நிகழ்ந்ததெனக் கூறினால் மனைவயிற்புக்கபின் இரவுக்குறி வேண்டற்பாற்றேயன்றி யிதுநிகழாதெனவும், அலரானும் பிறவற்றானுமறிந்துழிச் செவிலி இற்செறிக்குமெனவும,் அவ்வயின் இக்கூற்று நிகழ்ந்ததெனவுங் கூறிவிடுக்க.
துய்க்குந்தோறும் புதுமை பயத்தலின் முன்பு நுகர்ந்தன கனவே போலுமெனக் கருதித் தான் துய்த்திலனேபோலக் கூறினான்; நோக்கும் முறுவலுமட்டுமே நல்கினா ளென்றமையின்.
உள்ளுறை :-குறவர் மின்மினியை விளக்காகக் கொண்டு மழையியக்கத்தை நோக்கி்யிருத்தல்போல நீயும் தோழி கூற்றால் தலைவியினியக்கத்தைக் காண முயலுகின்றனைபோலு மென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய அவலம்பற்றிய இளிவரல். பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) இனி, இச்செய்யுளின்கண் குறவர் முன்றிலின்கண் நின்று இரவின்கண் வானிலே இயங்கும் முகிலின் இயக்கத்தைக்கண்டு நாளை மழைபெய்யும் அல்லது பெய்யாது என்று அறியும் நுண்ணறிவு உடையோர் ஆகலின் அங்ஙனமே நம்முடைய களவொழுக்கத்தினையும் இவர் மறைவிருந்து ஒற்றியுணர்ந்து தலைவியை இற்செறித்தனர் போலும் என்று பரிவுற்று மெலிந்தான் என இறைச்சிப் பொருளாகக் கோடல் சிறப்புடையதாம் என்க. இக் கருத்து இதன் பொருட்புறத்தே தோன்றுதலின் இஃதிறைச்சியேயாம்.
(44)