(து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தன்குறை கூறிச்சென்றிரந்த தலைவனைத் தோழி நோக்கி நீ உயர்குலத்தரசன் மகனாதலின் தாழ்ந்த பரதவர் குலத்தாளை மணக்கற்பாலையல்லை, எமக்கு நலன் என்ன வேண்டிக் கிடந்தது? நாற்றத்தேமாகலின் அகன்று நில்; எம் வாழ்க்கை நும்மோடொத்த தன்றெனக் குலமுறை கூறி மறுத்துச் சேட்படுத்தா நிற்பது.
சேட்படுத்தலென்பது - தோழியானவள் தலைமகளது பெருமையும் தனது முயற்சியினருமையும் தோன்றுதல் காரணமாகவும்; இவ்வளவருமையுடையாள் இனி நமக்கு எய்துதற் கருமையுடையாளென இக்களவுப் புணர்ச்சி நீட்டியாது விரைய வரைந்துகோடல் காரணமாகவும் தலைமகனுக்கியைவதை மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "பெருமையிற் பெயர்ப்பினும்" (தொல்-கள- 23) என்னும் விதிகொள்க.
| இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி |
| நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு |
| மீனெறி பரதவர் மகளே நீயே, |
| நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் |
5 | கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே |
| நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி |
| இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ |
| புலவு நாறுதும் செலநின் றீமோ |
| பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை |
10 | நும்மொடு புரைவதோ அன்றே |
| எம்ம னோரின் செம்மலு முடைத்தே. |
(சொ - ள்.) இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள் புக்கு மீன் எறி பரதவர் மகள் - நின்னாற் காதலிக்கப்படும் இவள்தான், கடற்கரைச் சோலையிற் பொருந்திய அழகிய சிறுகுடியின்கண்ணே இருக்கின்ற, நீலநிறத்தையுடைய பெரிய கடலுங் கலங்குமாறு அதன்மேற்சென்று வலைவீசி மீனைப் பிடிக்கின்ற பரதவர் புதல்விகண்டாய்; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந் தேர்ச்செல்வன் காதல் மகன் - நீதானும் நெடிய கொடிகள் காற்றாலசைந்து நுடங்குங் கடைத் தெருக்களையுடைய பழைய ஊரின்கணுள்ள கடிய செலவினையுடைய தேரையுடைய செல்வ மன்னன் காதலிற் பெற்றுவளர்த்த புதல்வனாயிராநின்றனை, ஆதலிற் குலத்திற்கே பொருத்தமில்லை; நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவன் ?- அங்ஙனம் மணப்பதாயினும், நிணத்தையுடைய சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தல் வேண்டி வெயிலிற் போகட்டு அத்தசைகளைக் கூட்டமாகிய காக்கைகள் கவராதவாறு அவற்றை ஓட்டிப் பாதுகாக்கின்ற எமக்கு நின் சிறந்த நலந்தான் யாது வேண்டிக் கிடந்தது ? ஒன்றும் வேண்டா !; புலவு நாறுதும் செலநின்றீ - சுறா நிணத்தைத் தடிந்து பரப்புதலானே யாம் புலவு நாற்றம் நாறுகின்றேம்; இந்நாற்றம் நீ பொறாயாகலின், எம்மருகில் வராதேகொள் ! அகன்றுபோய் நிற்பாய்மன்; பெருநீர் விளையுள் எம்சிறு நல் வாழ்க்கை நும்மொடு புரைவது அன்று - கடனீரை விளைவயலாகக் கொள்ளுகின்ற எமது சிறிய வாழ்க்கையானது நும்மோடு ஒக்க வுயர் வுடைத்தன்று; எம்மனோரில் செம்மலும் உடைத்து - எம்போன்ற பரதவரில் நின் போன்ற செல்வமாக்களையும் எங்கள் மரபுடைத்தாயிராநின்றது; எ - று.
(வி - ம்.) புள் - காக்கை.
கடலைக் கலக்கும் வன்மையரென்றது எமர் மூர்க்கராதலின், நின்னைக் காணின் ஏதமிழைப்பரென அஞ்சியச்சுறுத்தியதாம். மீனெறிவார் மகள் என்றது இரக்கமின்றி மீனையெறிந்து கொல்லும் பரதவர் மகளாதலின் நீ படுந்துன்பத்துக் கிரங்காளெனக் கூறியதாம். உணக்கல் வேண்டிப் புள்ளோப்புவேமென்றது, நீ இங்ஙனம் வரினுடம்பட வொட்டாது போக்குவே மென்றதாம். இது தோழி தனது காவலொடு மாறு கொள்ளாமை கருதியென்க. புலவு நாறுதுமென்றது எம்போலப் புலவு நாற்றத்தொடு வரின் இயையுமென்றதாம்; இது, முன்பு கூறியவற்றைக் கேட்ட தலைவ னாற்றானாக, அவனாற்றுதல் வேண்டிக் கூறப்பட்டது. செலநின்றீ யென்றது குறியிடமிது தகுதியுடையதன்றென மறுத்ததாம்.
இதனுட் 'கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே' என்றது அவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு இவர்களைச் சின்னாள் மறந்திருத்தலானே அவனை இகழ்ச்சிக் குறிப்பாற் றலைவனாகக் கூறினாளெனவுமாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - செவ்வி பெறுதல்.
(பெரு - ரை.) நிணச்சுறா அறுத்த என்புழி அறுத்த பலவறி சொல்லாகக் கோடலுமாம். பெருநீர் என்பது அன்மொழித்தொகை. கடல் என்பது பொருள்; எனவே, கடலை விளையுளாகக் கொள்ளுகின்ற எனலே அமையும், நீர் எனல் வேண்டாவென்க. எம்மனோர் இல் எனக் கண்ணழித்துப் பரதவராகிய எம்மனோருடைய குடி செம்மலும் உடைத்து என இல்லினை எழுவாயாக்கினுமாம்.
நிணச் சுற வுறுத்த, நிணச்சுறாவுறுத்த, என்பவும் பாடவேற்றுமைகள்.
(45)