திணை : குறிஞ்சி

     துறை : இது, தலைவன் செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, வினைவயிற் செல்லுந் தலைமகனது குறிப்பறிந்த தலைவி தனித்து உறைதற்கஞ்சிக் கலுழ்ந்து வேறுபட்டுக்காட்ட, அதனையறிந்த தோழி தலைவியை நோக்கி, நின்கண்கள் குறிப்பாகிய மாறுபட்ட ஒரு தூதுவிடுத்தன; அத்தூதையறிந்து அவர் செல்லுதலொழிந்தனராதலின், இனி முன்பனிக்காலத்தும் அவரைப் பிரிதலரிதுகாண் எனத் தேற்றிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல்-கற்- 9) என்னும் நூற்பாவின்கண் வரும் “பிறவும் வகைபடவந்த கிளவி” என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
நிலநீர் ஆரக் குன்றங் குழைப்ப 
    
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்  
    
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் 
    
நறுங்காழ் ஆரஞ் சுற்றுவன அகைப்பப் 
5
பெரும்புயல் பொழிந்த தொழில எழிலி 
    
தெற்கேர் பிரங்கும் அற்சிரக் காலையு 
    
மரிதே காதலர்ப் பிரிதல் இன்றுசெல் 
    
இகுளையர்த் தரூஉம் வாடையொடு 
    
மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே. 

     (சொ - ள்.) இன்று செல் இகுளையர்த் தரூஉம் வாடையொடு மயங்கு இதழ் மழைக்கண் - தோழீ! இன்று பிரிந்து செல்லுகின்ற தோழியரை மீட்டும் நின்னை ஆற்றுவிக்குமாறு கூட்டுகின்ற வாடைக் காற்றினால் வருந்திய இமைகளையுடைய மழைபோல நீர்வடிக்கின்ற நின்கண்கள்தாம்; தூது பயந்த - அவர் செல்லாதவாறு ஒரு குறிப்பாகிய தூதைத் தோற்றுவித்து விடுத்தன, அங்ஙனம் விடுத்த தூதின் காரணமாக; நிலம் நீர் ஆரக்குன்றம் குழைப்ப அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால் யாப்ப - இனி மிக்க மழை பெய்தலாலே நிலம் நீரால் நிரம்பப் பெற்று நிறையவும், மலைமேலுள்ள மர முதலாயின தழைப்பவும், அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையில் நீர் நிறைதலால் அங்கு முளைத்தெழுந்த குளநெல் முதலிய பயிர்கள் நெருங்கி வளரவும்; குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப - கொல்லையின் கண்ணே குறவர் வெட்டியழித்தலானே குறைபட்ட மிக்க நறைக்கொடி மீண்டுந் தளிர்த்துக் கொடியாகி நறுமணங் கமழ்கின்ற வயிரமுற்றிய சந்தன மரத்தின் மீது படர்ந்து சுற்றியேறவும்; பெரும் புயல் பொழிந்த தொழில எழிலி - பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகமானது; தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக்காலையும் - தென்றிசையின் கண்ணே யெழுந்து செல்லுதலாலே பிரிந்தோர் இரங்குகின்ற முன்பனிக்காலத்தும்; காதலர்ப் பிரிதல் அரிது - நீ நின் காதலரைப் பிரிந்து உறைதல் அரியதாகும்; ஆதலின் மகிழ்வொடு முயங்கி இருப்பாயாக ! எ-று.

     (வி - ம்.) கால்யாத்தல் - நெருங்கல். நறைப்பவர் - வாசனைக்கொடி. கொடிப்பவர்: இருபெயரொட்டு. அற்சிரம் - முன்பனிக்காலம். இதழ் - இமை. காழ் - வயிரம். ஆரம் - சந்தனமரம். அகைத்தல் - உயர்ந்து படர்தல். வாடையொடு - வாடையால். ஏர்பு - எழுந்து: இதனைச் செயவெனெச்சத் திரிபாகக்கொண்டு எழுந்து செல்லுதலாலென ஏதுப்பொருட்டு ஆக்குக.

     ஏனை மரங் கொடிகளிவற்றின் வேர் சந்தனவேரொடு முயங்காத வழி, தனித்துள மரம் நறுமண மெய்தாமை கண்கூடாகக் காண்டலால், ஈண்டு நறைக்கொடி சுற்றுவது கூறி நறுங்காழ் ஆரம் என்றார். மழைக் கண் பயந்த தூது. அழிவில் கூட்டத்துப் பிரிவாற்றாமை. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) நீ அவர் பிரிவர் என்னுங் கருத்தான் மெலிந்த மெலிவகன்று நின் காதலனை இனி ஆரமுயங்கி உடல் பூரித்திடுக எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றுதல் காண்க. இவ்விறைச்சிப் பொருள் அன்புறுதகுநவாம். தலைவி வருந்திய பொழுது தோழி இவ்வாறு இறைச்சியிற் சுட்டுதல் அவளை வற்புறுத்து ஆற்றுதற் பொருட்டாம். இதனை,

  
“அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் 
  
 வன்புறை யாகும் வருந்திய பொழுதே”     (தொல்-பொ- 37) 

எனவரும் நூற்பாவான் உணர்க.

இனி, “இளையர்த் தரூஉம் வாடையொடு” என்பதும் பாடம்.இப்பாடமே சிறந்ததாம். இதற்கு இன்று “வினைவயிற் செலுத்தப்பட்ட ஏவலிளையரையும் செல்லாமற் றடுத்து மீட்டுத் தருகின்ற வாடைக் காற்று” எனப்பொருள் கூறுக.

(5)