திணை : மருதம்.

     துறை : இது, தோழி பாணர்க்கு வாயின் மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிவின்கண்ணே சிறைப்புறத்தானாகிய தலைமகனால் விடுக்கப்பட்டு வாயில்வேண்டிச் சென்றபாணனை மறுக்கின்ற தோழி அத்தலைமகன் கேட்குமாறு தலைவியை நோக்கி 'ஊரன் துணங்கையாடுங் களவைக் கைப்படுக்க யான் சென்ற பொழுது அவன் மகளிர் வடிவந் தாங்கித் தெருக்கடை வரக்கண்டு வினாவ அவன் தான் மகளிரெனக் கொள்ளுமாறு கூறிப்போயினான; என்னறியாமையால் யானும் அவனை இகழ்ந்து வந்தே'னெனக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்," (தொல்-கற்- 9) என்னும் விதி கொள்க.

     
அறியா மையின் அன்னை யஞ்சிக் 
     
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் 
     
விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல 
     
நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை 
5
நொதும லாளன் கதுமெனத் தாக்கலின் 
     
கேட்பார் உளர்கொல் இல்லைகொல் போற்றென 
     
யாணது பசலை யென்றனன் அதனெதிர் 
     
நாணிலை எலுவ என்றுவந் திசினே 
     
செறுநரும் விழையுஞ் செம்ம லோனென 
10
நறுநுத லரிவை பாற்றேன் 
     
சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே. 

    (சொ - ள்.) அன்னை நறுநுதல் அரிவை அறியாமையின் அஞ்சி - அன்னாய் ! நறிய நுதலையுடைய தலைவி ! என் அறியாமையாலே நின்னை அஞ்சி; குழையன் கோதையன் குறும் பைந்தொடியன் விழவயர் துணங்கை தழூஉகம் செல்ல - குழை பெய்து மாலைசூடிக் குறிய பசிய தொடியணிந்தவனாகி விழாக் களத்து அவன் துணங்கையாடுதலைக் கையகப்படுப்பேமாகி யாங்கள் செல்லா நிற்கையில், நொதுமலாளன் நெடு நிமிர் தெருவின் கைபுகு கொடு மிடை கதுமெனத் தாக்கலின் - நமக்கு அயலானாகிய அவன்தான் அவ்வணிகளையுடையனாய் நெடிய நிமிர்ந்த தெருமுடிந்த வேறொரு வழி வந்து புகுந்த வளைந்த விடத்தே விரைவின் வந்து எதிர்ப்பட்டானாக; கேட்பார் உளர்கொல் போற்று என - இங்ஙனம் செய்யும் நின்னைக் கேட்பார் உண்டோ? இல்லையோ? அறிந்துகொள் என்று யான் கூற; பசலை யாணது என்றனன் - அவனும் அவ்வறியாமையுடையான் போல என்கட்பசலை அழகுடையது என்றனன்; அதன் எதிர் செறுநரும் விழையும் செம்மலோன் என - அதனுக் கெதிர்மொழி கொடுத்தற்காக அவன் பகைவராலும் விரும்பப்படும் செம்மாப்புடையான் எனக் கொண்டு; போற்றேன் - வணங்கிச் செல்லாது, சிறுமை பெருமையின் - என் சிறுமை பெரிதாகலான்; காணாது துணிந்து எலுவ நாணிலை என்று வந்திசின் - ஆராயாதே துணிந்து 'எலுவ நீ நாணுடையை அல்லை" என்று கூறிவந்தேன்; எ - று.

     (வி - ம்.) நொதுமலாளன் என்றது பாணன் கேட்டு நீங்குதற்கு, பசலை யாணது என்றது தலைவன் தன்னைப் பெண்பாலொருத்தி இவளெனத் தோழி கருதுதற்பொருட்டு, துணங்கை ஆடியதையும் மகளிர் வடிவம் பூண்டதையும் கூறியது சினமாறாளெனப் பாணன் கருதுதற்பொருட்டு. தலைவியின் முன்னிலையில் தலைவனது கொடுந்தொழிலைக் கூறுதல் வாயில்கட்கில்லையாயினும், புலந்த தலைவியை அவன் கூடுதற்கு மருந்தாயமையப் பெறுதலில் தோழி கூற்றமைந்ததென்க; (தொ-பொ-சூ- 166) தலைமகன் சிறைப்புறத்தானாகக் கூற்றமைந்ததற்கு விதி (தொ-பொ- 179) மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின் மறுத்தல்.

     (பெரு - ரை.) கைபுகு கொடும் இடை என்பதற்கு எதிரெதிர் வருவோர் ஒருவர் கையுள் ஒருவர் புகுதற்குக் காரணமான வளைந்த விடத்தே எனப்பொருள்கோடல் தகும். என்னை? வளைந்த விடத்தே எதிர் எதிர் வருவோர் ஒருவர் ஒருவரைக் காணாமே நெருங்கிவிடுதல் இயல்பாகலின் என்க. தாக்கலின் என்றது மிகவும் அணுக்கமாய் வருதலின் என்பதுபட நின்றது. யாண்டையது பசலை என்றும் பாடம்.

(50)