திணை : குறிஞ்சி.

     துறை : இஃது, ஆற்றது ஏதமஞ்சி வேறுபட்டாள் வெறியாடல் உற்றவிடத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, அறத்தொடு நிற்றலின் கண்ணதாகிய வெறியெடுக்கும் பொழுது சிறைப்புறமாகத் தலைமகன் வந்திருப்பதையறிந்த தலைவி, அவன் கேட்குமாற்றானே தோழியை நோக்கி மழை இடியொடு பெய்யா நின்றதெனத் தான் நெறியினது ஏதமஞ்சியதும், படிமத்தான் வந்ததனாலே முச்சி அளித்தலமையாதென வெறியயர்வதுஞ் சொல்லி இங்ஙனம் வெறியெடுத்தலானே, "நம் தலைவன் திறத்து நாம் செயற்பாலது யாதென" அழுங்கிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) "வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்" என்னும் விதிகொள்க.

    
யாங்குச்செய் வாங்கொல் தோழி யோங்குகழைக் 
    
காம்புடை விடரகஞ் சிலம்பப் பாம்புடன்று 
    
ஓங்குவரை மிளிர வாட்டி வீங்கு செலல் 
    
கடுங்குரல் ஏறொடு கனைதுளி தலைஇப் 
5
பெயலா னாதே வானம் பெயலொடு 
    
மின்னுநிமிர்ந் தன்ன வேலன் வந்தெனப் 
    
பின்னுவிடு முச்சி அளிப்பா னாதே 
    
பெருந்தண் குளவி குழைத்த பாவடி 
    
இருஞ்சே றாடிய நுதல கொல்களிறு 
10
பேதை ஆசினி ஒசித்த 
    
1 வீதா வேங்கைய மலைகிழ வோற்கே. 

     (சொ - ள்.) தோழி வானம் ஓங்கு கழைக் காம்பு உடை விடர் அகம் சிலம்ப - தோழீ ! மேகமானது உயர்ந்த அடித்தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி யெடுப்ப; பாம்பு உடன்று ஓங்குவரை மிளிர வாட்டி வீங்க செலல் கடுங்குரல் ஏறொடு கனை துளி தலைஇப் பெயல் ஆனாது - பாம்புகள் வருத்தமுற்று உயர்ந்த துறுகல்மீது புரளுமாறு துன்புறுத்தி விரைந்த செலவையுடைய கடிய முழக்கமிக்க இடியேற்றுடனே மிக்க துளியைப் பெய்யத் தொடங்கி அப் பெயலை நிறுத்துகின்றிலது. பெயலொடு மின்னு நிமிர்ந்து அன்னவேலன் வந்தென - அத்தகைய பெயலைக் கண்டு ஆற்றது ஏதம் அஞ்சி வேறுபட்ட என்னை உற்றதறியாது நற்றிறம் படர்ந்த அன்னை வெறியெடுத்தலும் அதற்காக மின்னலைச் செய்தமைத்தாற் போன்ற வேலைக் கையிலுடைய படிமத்தான் வந்தானாதலின்; பின்னுவிடு முச்சி அளிப்பு ஆனாது - இனிப் பின்னி விடுத்தற்குரிய கொண்டையிற் பூவைக் குலையாது காத்தலும் அரியதாயிரா நின்றது; பெருந் தண் குளவி குழைத்த பா அடி இருஞ் சேறு ஆடிய நுதல கொல் களிறு - ஆதலாற் பெரிய குளிர்ச்சியையுடைய பச்சிலை மரத்தை முரித்துழக்கின பரந்த அடிகளையுடைய கரிய சேற்றை யப்பிய நெற்றியையுடைய கொல்ல வல்ல களிற்றியானை; பேதை ஆசினி ஒசித்த வீ தா வேங்கைய மலைகிழவோற்கு - அறியாமையால் ஆசினியை முரித்து மலருதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின்கீழே தங்காநிற்கும் மலைகிழவோனுக்கு; யாங்குச் செய்வோம் - என்ன செய்ய மாட்டுவேம்; கூறாய், எ - று.

     (வி - ம்.) யாங்கு - என்னவண்ணம். கழை - மூங்கிலின் தண்டு. காம்பு - மூங்கில். குளவி - காட்டுமல்லிகையுமாம். மிளிர்தல் - புரளுதல். இடிமோதி மழைபெய்யும் நெறியில், காதலன் யாங்ஙனம் வருவனோவென்ற ஏக்கத்தினால் உடம்பு வேறுபட்டதை அன்னை முருகணங்கெனக் கொண்டனளென்க.

     வேலன் வருதலும் தலைவியை முன்னிறுத்தி அவள் கூந்தலிற் பூவையெடுத்துப் போகட்டுப் பரவுக்கடன் கொடுத்தல் இயல்பாதலின் முச்சியளிப்பானாதென்றாள்; இதனை "நெடுவே லேந்திய நீயெமக்கியாஅர் தொடுத லோம்பென அரற்றலும் அரற்றும், கடவுள் வேங்கையுங் காந்தளு மலைந்த, தொடலைக் கண்ணி பரியல மென்னும்'" (தொல்-பொ-சூ- 115, மேற்கோள்) என்பதனாலுமுணர்க.

     உள்ளுறை :- குளவியைக் குழைத்த களிறு தலைவியை நலனுண்டு வாடவிட்ட தலைவனாகவும், அது சேற்றை நெற்றியிலணிந்தது ஊரார் தூற்றும் பழிச்சொல்லைத் தலைவன் மேற்கொண்டதாகவும், அறியாமையால் ஆசினியை ஒசித்தது அவன் அறியாமையால் இதுகாறும் வரைந்தெய்து நெறியைக் கைவிட்டதாகவும், களிறு வேங்கையின் கீழே தங்கியிருப்பது தலைவன் ஒரு சிறைப்புறமாக வந்து தங்கியிருப்பதாகவுங் கொள்க. இது வினையுவமப் போலி. மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த அச்சம். பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) தலைவன் வரவினைத் தடைசெய்யுமாற்றால் என்னை வருத்தா நின்ற பெயல் வந்ததோடமையாது பின்னும் பெரிதும் வருத்துவான் வேலனும் வந்தான் என்பது கருத்து. பெயலொடு என்புழி ஒடுவுருபு - உடனிகழ்ச்சிப் பொருண்மைத்து.

(51)
  
 (பாடம்) 1. 
வீத்தர்.