திணை : பாலை.

     துறை : இது, தலைமகன் செலவழுங்கியது.

     (து - ம்.) என்பது, பொருள்வயிற்பிரியுந் தலைமகன் பிரிதற்கு உள்ளம் எழானாகி நெஞ்சைநோக்கி நெஞ்சமே ! யாம் இவளது முயக்கத்தைக் கைவிடக் கருதுகில்லேம்; நீ தானும் முயற்சியை மேற்கொண்டு பிரிந்துபோதலைக் கருதியமைகின்றிலை; இவளது முயக்கத்தினும் பொருள் மென்மையதாதலின் நீயே போவாயெனக் கூறிச் செலவழுங்கா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத் தானும்" (தொல்-கற்- 5) என்னும் விதி கொள்க.

    
மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரித் 
    
தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல் 
    
மணங்கமழ் நாற்றம் மரீஇ யாமிவள் 
    
சுணங்கணி ஆகம் அடைய முயங்கி 
5
வீங்குவர்க் கவவின் நீங்கல் செல்லேம் 
    
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் 
    
பிரிந்துறை வாழ்க்கை புரிந்தமை யலையே 
    
அன்பிலை வாழியெம் நெஞ்சே வெம்போர் 
    
மழவர் பெருமகன் மாவள் ஓரி 
10
கைவளம் இயைவ தாயினும் 
    
ஐதேகு அம்ம இயைந்துசெய் பொருளே. 

     (சொ - ள்.) எம் நெஞ்சே மா கொடி அதிரல் பூவொடு தூத் தகட்டுப் பாதிரி மலர் எதிர் வேய்ந்த கூந்தல் - எமது நெஞ்சமே ! கொடியையுடைய காட்டு மல்லிகைப் பூவுடனே தூய பொற்றகடு போன்ற பாதிரி மலரையும் சேர எதிர் எதிர் வைத்துத் தொடுத்துக் கட்டிய மலர் மாலையைச் சூடிய கூந்தலின்; மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லோம் - மணங்கமழும் நாற்றத்தைப் பெற்று, யாம் அவளுடைய சுணங்கமைந்த மார்பிற் கொங்கையை ஒருசேர அணைத்துக்கொண்டு மிக்க இன்சுவையையுடைய இவள் கையால் அணைத்திருத்தலினின்றும் நீங்க மாட்டுகிலேம், நீயே ஆள்வினை சிறப்ப எண்ணிநாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலை - நீ தானும் முயற்சியை மேம்படக் கருதி நாள்தோறும் (எம்மை) இவளைப் பிரிந்து தனித்து உறைகின்ற வாழ்வினை விரும்பிச் சிறிது பொழுதும் ஓய்கின்றனையல்லை; அன்பு இலை வாழி - ஆதலின் நீ என்மாட்டு அன்பினையுடையையல்லைமன் இங்ஙனமே நெடுங்காலம் வாழ்வாயாக !; இயைந்து செய்பொருள் - நீ உட்கொண்டு உடன்பட்டு ஈட்டும் பொருள்தான்; வெம்போர் மழவர் பெருமகன் மாவள் ஓரி கைவளம் இயைவதாயினும் - வெய்ய போர் செய்ய வல்ல போர்வீரர் தலைவனாகிய சிறந்த கொடையையுடைய ஓரி யென்பவனது கைவண்மைக்குப் பொருந்திய செல்வமே நீ ஈட்டும் பொருளாக நினக்குக் கிடைக்கப் பெறினும் அப்பொருள் இவளது முயக்கத்தினும்காட்டிற் சிறந்ததன்று கண்டாய் !; ஐது ஏகு - அது மிக மென்மையுடையதன்றோ அதனால் வேண்டுமெனில் நீயே ஏகுவாய் யாம் வாரகில்லேம்; எ - று.

     (வி - ம்.) கவவு - அகத்திடுவது. உவர் - இனிய சுவை. அம்ம : வியப்பு. ஐது - மெல்லிது; நுண்ணிதுமாம். ஆள்வினை - முயற்சி.

     உள்ளுதோறு மகிழ்ச்சி நல்கு முறுதியுடைய இவளின்பத்தினும் நிலைக்கும் வன்மையுடையதன்றென்பான் மெல்லிதென்றான். மெய்ப்பாடு -பிறன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - செலவழுங்கல்.

     (பெரு - ரை.) "செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றேவன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்"என்னும் விதியுண்மையாற் றலைவன் செலவழுங்குதலும் பாலைத்திணையே ஆகும். இதனை யுணர்ந்து யாண்டும் கடைப்பிடிக்க.

(52)