(து - ம்.) என்பது, இருவகைக் குறியானும் வந்தொழுகும் தலைமகன் இடையீடுபட்டு வாராதொழியக்கண்ட தலைவி வரைதல் வேட்கையளாய் வேட்கை பெரிதுஞ் சிறப்பச் சிந்தித்து நாரையை நோக்கி நாராய்! நும் துறைவனுக்கு யான் மாலைப்பொழுதில் வருந்துகின்றதனை அவனுணருமாறு சொல்லுதியென இரந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "காமம் சிறப்பினும்" (தொல்-கள- 20) என்னும் விதி கொள்க.
| வளைநீர் மேய்ந்து கிளைமுதற் செலீஇ |
| வாப்பறை விரும்பினை ஆயினுந் தூச்சிறை |
| இரும்புலா அருந்துநின் கிளையொடு சிறிதிருந்து |
| கருங்கால் வெண்குருகு எனவ கேண்மதி |
5 | பெரும்புலம் பின்றே சிறுபுன் மாலை |
| அதுநீ அறியின் அன்புமார் உடையை |
| நொதுமல் நெஞ்சங் கொள்ளாது என்குறை |
| இற்றாங்கு உணர உரைமதி தழையோர் |
| கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் |
10 | தெண்டிரை மணிப்புறந் தைவருங் |
| கண்டல் வேலிநும் துறைகிழ வோற்கே. |
(சொ - ள்.) கருங்கால் வெண் குருகு கிளை முதல் செலீஇ வளை நீர் மேய்ந்து வாப பறை விரும்பினை ஆயினும் - கரிய காலையுடைய வெளிய நாராய்! நீ நின் சுற்றம் முதலாயவற்றோடு சென்று வளைந்த நீர்ப்பரப்பிலுள்ள இரையை அருந்தித் தாவிப் பறந்து வருதலை விரும்பி்னையாயினும், இரும்புலா அருந்தும் தூச் சிறை நின் கிளையொடு சிறிது இருந்து எனவ கேள்மதி - மிக்க புலவைத் தின்னுகின்ற தூய சிறகுகளையுடைய நின் சுற்றத்தோடு சிறிது பொழுது ஈண்டுத் தங்கியிருந்து என்னுடைய சொற்களைக் கேட்பாயாக!; சிறு புன் மாலை பெரும் புலம்பின்று - சிறிய புல்லிய மாலைப்பொழுதானது எனக்குப் பெரிய வருத்தஞ் செய்தலை உடையதாயிராநின்றது; அது நீ அறியின் அன்பும் உடையது நொதுமல் நெஞ்சம் கொள்ளாது - அதனை நீ அறியின்; என்மாட்டுப் பெரிதும் அன்புடையையாதலால் வேறுபட்ட மனங்கொள்ளாமல்; என்குறை இற்று தழையோர் கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் தெள் திரை மணி புறம் தை வரும் கண்டல் வேலி நும் துறைகிழவோற்கு ஆங்கு உணர உரை மதி - என்குறை இத்தன்மையதென்று தழை யுடுப்பவர் கொய்தற்குரிய குழை தழைந்த இளைய ஞாழல் தெளிந்த திரையின் புறத்தைத் தடவாநிற்கும் கண்டல் மர வேலிகளையுடைய நுங்கடற்றுறைச் சேர்ப்பனிடஞ் சென்று அவன் உணருமாறு உரைப்பாயாக ! எ - று.
(வி - ம்.) புலம்பு - வருத்தம். வாப்பறை - தாவிப் பறத்தல்; வரவும் என்னும் செய்யுமென்னெச்சத் தீற்றுயிர் மெய்கெட்டு வலிக்கும் வழி வலித்தல் பெற்றது. ஆர் : அசை. மதி இரண்டும் முன்னிலையசை. கண்டல் - நெய்த னிலத்திலுள்ளதொரு மரம். எனவ, அ: விரித்தல் விகாரம்; எழுத்துப்பேறுமாம்: பின்னுள்ளோர் பன்மையுணர்த்தும் விகுதியென்ப. இது, தூதுமுனிவின்மை.
சிறிது பொழுதகத்துள்ளே தோன்றி மறையினும் அதனிடை ஆடவரில் வழி மகளிரை வருத்துந்தன்மை நோக்கிச் சிறுபுன்மாலையென்றாள். ஒன்று மறப்பினும் ஒன்று நினைப்பூட்டுமாதலிற் கிளையோடிருந்து கேட்டியென்றாள். ஞாழலந்தழை திரைப்புறந் தைவரு நாடனென்றது, அவன் என்னை முயங்கி முதுகைத் தைவர யான் புலம்பொழிவனென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) வளைநீர் - கடல்; அன்மொழித்தொகை, கருங்கால் வெண்குருகு என்புழியும், பெரும்புலம்பின்றே சிறுபுன்மாலை என்புழியும் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. நொதுமல் நெஞ்சம் - அன்புத் தொடர்பற்ற வறுநெஞ்சம். கூறுதற்குரிய உரிமையுடைமையை எடுத்துக்காட்டுவாள் எந்துறைவற்கென்னாது நுந்துறைவற்கு என்றாள். நுந்துறைவன் என்றது அவன் தன்பால் ஏதிலன் போல் ஒழுகுகின்றான் என்பதும் தோற்றி நின்றது.
(54)