திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரைவிடை மெலிவாற்றுவிக்குந் தோழி தலைவற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, வரைபொருட் பிரிந்துவந்த தலைவனைத் தோழி நீ முன்னர் இரவின் வந்து முயங்கியதனாலாய குறிப்புக்களைக் கண்ட அன்னை வினவலும் இவள் விடைகூற அறியாளாய் என்னை நோக்கினளாக, யான் சந்தனவிறகின் கொள்ளியைக் காட்டி இதனாலுண்டாயினவென் றுய்வித்தே னெனத் தானாற்றுவித்திருந்த அருமை தோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவுடம் பட்டோற் கடாவல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க,

    
ஓங்குமலை நாட ஒழிகநின் வாய்மை 
    
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி 
    
உறுபகை பேணாது இரவின் வந்திவள் 
    
பொறிகிளர் ஆகம் புல்லத் தோள்சேர்பு 
5
அறுகாற் பறவை அளவில மொய்த்தலிற் 
    
கண்கோ ளாக நோக்கிப் பண்டும் 
    
இனையை யோவென வினவினள் யாயே 
    
அதனெதிர் சொல்லா ளாகி அல்லாந்து 
    
என்முக நோக்கி யோளே அன்னாய் 
10
யாங்குணர்ந் துய்குவள் கொல்லென மடுத்த 
    
சாந்த ஞெகிழி காட்டி 
    
ஈங்கா யினவால் என்றிசின் யானே. 

     (சொ - ள்.) ஓங்கு மலை நாட நின் வாய்மை ஒழிக - ஓங்கிய மலைநாடனே ! நீ கூறும்வாய்மைகள் எல்லாம் இப்படியே பொய்த்தொழிவனவாகுக !; காம்பு தலை மணந்த கல் அதர்ச் சிறுநெறி உறுபகை பேணாது - மூங்கில்கள் நெருங்கிய கற்பாறை நெறியாகிய சிறிய வழியில் இரைதேடியுழலுகின்ற வேங்கை முதலாயமிக்க பகையைப் பொருட்படுத்தாது; இரவின் வந்து இவள் பொறி கிளர் ஆகம் புல்லத் தோள் சேர்பு அறுகால் பறவை அளவு இல மொய்த்தலின் - இரவிடைவந்து இவளது திருவிளங்கிய மார்பை முயங்கி மகிழ, அதனால் உண்டாகிய புதுமணத்தைக் கருதி இவளுடைய தோளைச்சார்ந்து வண்டுகள் அளவில்லாதன மொய்த்தலினாலே; யாய் கண் கோள் ஆக நோக்கிப் பண்டும் இனையையோ ? என வினவினள் - எம் அன்னை தன் கண்களாலே கொல்லுபவள் போல் நோக்கி "நீ இதன் முன்னும் இப்படி வண்டுகளால் மொய்க்கப்பெற்ற தோளினையுடையையோ?" என்று வினவினள்; அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து என்முகம் நோக்கியோள் - அங்ஙனம் வினவலும், இவள் அதற்கு எதிர்மொழி சொல்ல அறியாளாய் வருத்தமுற்று என் முகத்தை நோக்கி நின்றாள்; யாங்கு உணர்ந்து உய்குவள் கொல் என - அதனை அறிந்த யான் இவள் எப்படி ஆராய்ந்து மறைத்துக் கூறி யுய்குவள் என்றெண்ணி அன்னையை நோக்கி; மடுத்த சாந்தம் ஞெகிழி காட்டி-அடுப்பிலிட்ட சந்தன விறகின் கொள்ளியை எடுத்துக் காட்டி; அன்னாய் ஈங்கு ஆயின என்றிசின் - அன்னாய் ! இவ்விறகினை அடுப்பிலிடுதலும் இதிலுள்ள சுரும்புகள் இவளுடைய தோளில் மொய்க்கின்றன காண் ! என மறைத்துக் கூறினேன்; இங்ஙனம் எத்துணை நாள் நீ வரைந்து கொள்ளுதல் காரணமாகப் பொய்கூறி யுய்விப்பது ? (எ - று)

     (வி - ம்.) காம்பு - மூங்கில். ஞெகிழி - கொள்ளி. கோள் - கொலை, வாய்மை - இகழ்ச்சிக் குறிப்பு; குறித்த பருவங்கடந்து வருதலின். இஃது அழிவில் கூட்டத் தவன்புணர்வு மறுத்தல்.

     புதுமண நோக்கி வண்டு மொய்த்தலை அன்னை யறிந்துடையளாதலிற் கண்கோளாக நோக்கி எனக் கூறினாள். களவொழுக்கம் நீட்டித்திருக்குங் கொலென்னும் ஐயமுடையாளாதலிற் பண்டும் இனையையோவென வினவினளென்றாள். இவை படைத்து மொழி கிளவி; விரைவில் வரைந்து கொள்ளவேண்டி யென்க. பின்னது செவிலி தோழியை வினாயதைக்கொண்டு கூறியது. மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

     (பெரு - ரை.) தலைவன், உதோ அணுமையிலேயே வரைந்து கொள்வல் வரைந்து கொள்வல் என்று பின்னரும் வரைந்து கோடலிற் கருத்தின்றிக் களவின்பமே காமுற்று வருதலின் நின் வாய்மை ஒழிக என்றாள். என்முக நோக்கினள் என்றது கட்டுரையின்மை என்னும் மெய்ப்பாடு.

(55)