திணை : பாலை.

     துறை : இது, வரைவிடை மெலிவாற்றுவிக்குந் தோழிக்குத் தலைவி சொல்லியது.

     (து - ம்.)என்பது, வரைபொருட் பிரிந்தோன் வருமளவும் மெலியாவண்ணம் ஆற்றுவிக்குந் தோழியைத் தலைவி நோக்கி 'யான் ஆற்றுவேனாயினும் என்னுள்ளம் என்பாலில்லாது வரைபொருட்குப் பிரிந்த அவர்பாற் போகியது தான் இனி அவருடன் வருகின்றதோ? அவர் அருளாமையால் மீண்டுவந்து அப்பொழுதைக்குள் வேறுபட்ட என்னுடம்பை நோக்கி இவள் அயலிலுள்ளாளெனப் போயொழிந்ததோ' என்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்குப் "பிரிந்தவழிக் கலங்கினும்" (தொல்-கள- 20) என்னும் விதி கொள்க,

    
குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ 
    
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் 
    
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை 
    
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் 
5
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய் 
    
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ  
    
அருளா னாதலின் அழிந்திவண் வந்து 
    
தொன்னலன் இழந்தவென் பொன்னிற நோக்கி 
    
ஏதி லாட்டி இவளெனப்  
10
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே. 

     (சொ - ள்.) குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டு தருநாற்றம் வளி கலந்து ஈய - குறிதாக நிற்றலையுடைய குராமரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறியமலரில் வண்டு விழுதலா னெழுந்த மணத்தைத் தென்றற் காற்றுப் புகுந்து கலந்துவீச; கண்களி பெறூஉம் கவின்பெறு காலை - கண்கள் அவற்றைநோக்கி மகிழ்வடைகின்ற அழகமைந்த அத்தறுவாயில்; எல்வளை நெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇயர் சென்ற என் நெஞ்சம் - ஒளி பொருந்திய வளையை நெகிழ்வித்தோரைக் கருதித் துன்பமுறுதலின் அவர்பாற் சென்ற என் நெஞ்சமானது; செய்வினைக்கு உசா ஆய் ஒருங்கு வரல் நசையொடு வருந்தும் கொல்லோ - ஆண்டு அவர் செய்யும் வினைக்குச் சூழ்ச்சி சொல்லும் துணையாயிருந்து முற்றுவித்து அவருடன் ஒருசேர வருதற்கு விருப்பமுற்று வருந்தியிருக்கின்றதோ ?; அருளான் ஆதலின் - அன்றி அவர் அருள் செய்யாமையாலே; அழிந்து இவண் வந்து தொல் நலம் இழந்த என் பொன் நிறம் நோக்கி - கலங்கி இங்கு வந்து அஃது என்னைப் பிரியுமுன்னிருந்த நலன் இழந்துவிட்டதனாலாகிய எனது பொன்னிறமான பசலையை நோக்கி; இவள் ஏதிலாட்டி என நோய் தலை மணந்து போயின்று கொல்லோ - 'இவள் அயலிலாட்டியாகும் என்னை விடுத்தவளைக் காண்கிலேன்மன் !' என்றெண்ணி நோய்மிகக் கொண்டு என்னைத் தேடிச் சென்றொழிந்ததோ? அறிகிலேன்; ஆதலின், யான் எங்ஙனம் ஆற்றுகிற்பேன்; எ - று.

     (வி - ம்.) எல் - ஒளி. உசாத்துணை - சூழ்ச்சி வினாவுந்துணை. அருளான் : பன்மை ஒருமை மயக்கம். இனி, அவ்விடத்துச் சினமூளுதலின் ஒருமையாக விளித்துக் கூறினாளுமாம். போயின்றுகொல் என்றது ஆங்கு நெஞ்சழிதல்.

     செய்வினைக்கென அவன் பொருள்வயிற் சென்றதும், ஒருங்குவரல் நசைஇயென இன்னும் அவன் வாராமையும், வளைநெகிழ்த்தோரென அவன் பிரிவாலுண்டாகிய மெய்வாட்டமும,் அல்லலுறீஇயர் சென்ற நெஞ்சமெனத் தன்னெஞ்சழிந்தமையும், என்பொன்னிறமெனப் பசலை பூத்தமையுங்கூறி வருந்தியது காண்க, மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) இஃது "நோயும் இன்பமும்" (தொல்-பொருளியல்- 2) என்னும் வழுவமைதி நூற்பா பற்றி நெஞ்சினை உணர்வுடையதுபோல் உறுப்புடையதுபோல் வேறு நிறுத்தித் தலைவி கூறியதாம். பாடபேதங்கள்: வண்டுக்க நாற்றம்; அல்லல் உறீஇ; செய்வினைக்கு அசாவா; உசாவா; நேர்தலையிழந்தே.

(56)