திணை : குறிஞ்சி.

     துறை : இஃது, இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன் தோழி கேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, இரவுக்குறி வேண்டிச் சென்ற தலைவன், தோழிகேட்டு உடன்படுத்துமாறு யாம் வந்திருக்கின்றே மென்று தலைவியிடத்து ஒருவர் சென்று கூறினால் யாரோ வென்னாளாய் யாம் வந்துளே மென்று மகிழ்ந்து களிப்பால் மயங்குவள்; அங்ஙனங் கூறுவாரைப் பெற்றிலேமே யென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, “பண்பிற் பெயர்ப்பினும்” (தொல்-கள- 12) என்னும் நூற்பாவின்கண் வரும் “பரிவுற்று மெலியினும்” என்னும் விதி கொள்க.

    
நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்  
    
நாருரித் தன்ன மதனின் மாமைக்  
    
குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண்  
    
திதலை யல்குற் பெருந்தோட் குறுமகட்  
5
கெய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,  
    
இவர்யார் என்குவள் அல்லள் முணாஅ  
    
தத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி  
    
எறிமட மாற்கு வல்சி யாகும்  
    
வல்வில் லோரி கானம் நாறி  
10
இரும்பல் ஒலிவருங் கூந்தல்  
    
பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே. 

     (சொ - ள்.) நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால் நார் உரித்து அன்ன - நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளிற் புழையுடைய திரண்ட தண்டை நாருரித்தாற் போன்ற; மதன் இல்மாமை - அழகு குறைந்த மாமையையும்; குவளை அன்ன ஏந்து எழில் மழைக்கண் - குவளை போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியுடைய கண்ணையும்; திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு - திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவியிடத்து; எய்தச் சென்று செப்புநர்ப் பெறின் - நெருங்கச் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின்; இவர் யார் என்குவள் அல்லள் - அவரை நோக்கி இவர் யாவரென்று கேட்பாளல்லள்; அத்தக் குமிழின் கொடு மூக்கின் விளைகனி எறிமடமாற்கு முணாது வல்சி ஆகும் - சுரத்திலுள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து ஆங்குக் குதித்து விளையாட்டயர்கின்ற இள மானுக்கு வெறுப்பில்லாது உணவாகாநிற்கும்; வல்வில் ஓரி கானம் நாறி - வலிய வில்லையுடைய ஓரி என்பவனது கானம்போல நறுநாற்றமுடையவாகி; இரும்பல் ஒலிவரும் கூந்தல் - கரிய பலவாகித் தாழ்ந்த கூந்தலையுடைய அவள்தான்; யாம் வந்தனம் என - யாம் வந்திருக்கின்றேம் என்பதைக் கேட்டவுடன்; பெரும்பேது உறுவள் - களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பள்; அங்ஙனம் சென்று கூறுவாரை யாம் பெற்றேமில்லையே ! எ-று.

     (வி - ம்.) தூம்பு - துளை. ஆம்பல் - அல்லியென்று வழங்கப் படுவது. மதன் - அழகு. மாமை - மாந்தளிரின் தன்மை. வல்சி - உணவு. ஒலிதல் - தாழ்தல். பேது - மயக்கம். முணாது - வெறுப்பெய்தாது.. முணைதல் - வெறுத்தல்.

    பகற்குறிக்கண்ணே தான்கண்டுவைத்து, முயங்கியவழி நீங்குதலின் இப்பொழுதும் உளதாயிருக்குமெனக்கொண்டு மாமையுடைமை கூறினான்; இதனால் அதனை நீக்கத் தோழி முயலுகவென்றானுமாம். முதலிற் கூட்டத்திற்குக் குறிப்புணர்த்தியது நோக்கமேயாதலின், அதனை மழைக்கணெனச் சிறப்பித்து முற்கூறினான். அணைந்தவழி இன்பஞ் செய்தலின் திதலையல்குலென அடைகொடுத்துக் கூறினான். இடந்தலை பாங்கற்கூட்டம் பாங்கியிற் கூட்டத்து முயங்கிக் கிடந்தவழி இன்பஞ் செய்தலின் தோளையுங் கூந்தலையும் பிற்கூறினான். மதனின் மாமை யென்றது பசலைபாய்தல். பெரும்பேதுறுவளென்றது கண்ட வழி உவத்தல்.

     இறைச்சி :- :- குமிழின் கனி மானுக்கு உணவாகுமென்றது, யாம் வந்திருக்கின்றேமென்று கூறும் அச் சொல்லானது நம் தலைவிக்கு மகிழ்வளிக்கு மென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன். அயர்வுயிர்த்தல்.

     (பெரு - ரை.) எறிமடமான் என்புழி எறிதல் - பகையைப் பின்காற்குளம்பால் உதைத்தல், மான் அங்ஙனம் உதைக்கும் இயல்புடையது. முனாது என்றும் பாடம். இதனை, குறுமகட்கு எய்தச் சென்று முனாது செப்பு நர்ப் பெறின் எனக் கூட்டிக்கொள்க. முனாது-முன்னதாக மானுக்கு எனல் வேண்டிய சொல் சாரியையின்றி மாற்கு என உருபு புணர்ந்து நின்றது.

(6)