திணை : மருதம்.

     துறை : இது, சிறைப்புறமாக உழவற்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறிவுறீ இயது.

     (து - ம்.) என்பது, சிறைப்புறமாக வந்திருந்த தலைமகன் தலைமகளை இல்வயிற் செறித்தமையறிந்து விரைவில் வரையுமாற்றானே தோழி உழவனை நோக்கிச் சொல்லுவாள் போன்று 'உழவனே, நீ நாற்றுநடுமாறு உழச்சென்ற வயலிலுள்ள கோரையையும் குவளையையும்

     அழித்துவிடாதே யுழுவாய், அவற்றை இவள் வளையாகவும், உடையாகவும் கொள்ளு' மென இல்வயிற் செறித்தமை தோன்றக் கூறா நிற்பது.

     (இ - ம்.) இதனை "களனும் பொழுதும் . . . . . . . . .அனை நிலைவகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 22) என்னும் விதியின் கண் வகை என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின் 
    
பெருநெற் பல்கூட் டெருமை உழவ! 
    
கண்படை பெறாது தண்புலர் விடியல் 
    
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு  
5
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு  
    
கவர்படு கையை கழும மாந்தி  
    
1 நீருறு செறுவில் நாறுமுடி யழுத்தநின் 
    
2 நடுந ரோடுநீ சேறி யாயின்வண் 
    
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மின் 
10
மாயிருங் கூந்தல்3 மடந்தை 
    
ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே. 

     (சொ - ள்.) மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின் நெல் பல்பெரு கூடு எருமை உழவ-மலையைச் செய்து வைத்தாற் போன்ற நிலை பொருந்திய உயர்ச்சியையுடைய மிக்க நெற்களையுடைய பல பெரிய சேர்களைக் கட்டி வைத்திருக்கின்ற எருமையைப் பூட்டி உழுகின்ற உழவனே !; கண்படை பெறாது தண்புலர் விடியல் கருங் கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மல் பேருஞ் சோறு - நீ இரவிலே தூங்காது குளிர்ச்சியையுடைய இருள் நீங்கும் வைகறைப் பொழுதிலே கரிய கண்களையுடைய வரால் மீனைப் பெரியனவாகத் தடிந்த தசையாகிய ஆணத்திலே பிறழவிட்ட மிளிர்வையுடனே உணவுக்குரிய அரிசியாலாக்கிய மிக்க சோற்றுத்திரளையை; கவர்படுகையை கழும மாந்தி நீர் உறு செறுவில் நாறுமுடி அழுத்தநின் நடுநரொடு நீ சேறியாயின் - விருப்பமிக்க கையையுடையையாய் நிறைய மயக்கமேறவுண்டு நீர்மிக்க சேற்றிலே நாற்றுமுடிகளை நடுதற்கு நின் உழத்தியரோடு உடன் செல்லுவையாயின்; வண் சாயும் நெய்தலும் ஓம்புமதி - நீ உழுகின்ற வயலிலுள்ள வளமிக்க கோரைகளையும் நெய்தல்களையும் களையெனக் களையாது பாதுகாப்பாய்; எம்மின் மா இருங் கூந்தல் மடந்தை அவை ஆய்வளைக் கூட்டும் அணியும் - அங்ஙனம் பாதுகாத்து வைப்பது தான் எற்றிற்கோ எனக் கேட்டியாயின், எங்களுடைய மிக்க கரிய கூந்தலையுடைய தலைவி இப்பொழுது இற்செறிக்கப்பட்டாள், மற்றொரு பொழுது காப்புச்சிறை நீக்கப் பெறுவளேல் அவள் அவற்றுள் அழகிய கோரையை வளையமாகப் பூண்டுகொள்ளுவாள், நெய்தலந்தழையை உடையாக அணிந்து கொள்ளுவள் காண்; எ - று.

     (வி - ம்.) பல்கூடு - பல குதிர்களுமாம். மிளிர்வை - ஆணத்திலிடப்படுவது, இஃது இக்காலத்தில் "தான்" என வழங்கப்படுகின்றது. சாய் - கோரை. புகர்வு - உணவுக்குரிய பண்டம். நாறு - நாற்று. சாய் வளைக்கும் நெய்தல் உடையணிக்கும் நிரனிறையாகக் கொள்க. நீர்ச்சோற்றை யுண்ணிற் சிறிது மயக்கமுண்டாமாதலிற் கழுமமாந்தியென்றார். தொழின்மேற்செல்வார்க்கு மிக்க வன்மையளித்தலின் இன்றியமையாததாயிற்று. தாஞ்சென்று பறித்தற்கியலாது உழவனை யோம்புமதியென்றதினால் தலைவி இற்செறிக்கப்பட்டதை யுணர்த்தியதாம். வெயிலேறின் உழவெருமை மயங்குமாதலின் இரவிடைத் துயில் பெறாது விரைந்து செல்வதைக் குறித்தாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இற்செறிப்புரைத்து வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) நின் நடுநரொடு எனக் கண்ணழித்துக் கொள்க. நடுநர் - நாற்றுநடும் மகளிர். ஆய்வளைக் கூட்டும் : பண்புத்தொகை. ஒற்று மிகாது கொள்க. வளையாகக் கையிற்கூட்டும் ஆடையாக மெய்யில் அணியும் என்க. கவர்படுகை - மிகுதியாக அள்ளிக் கொள்ளுதலையுடைய கையுமாம்.

(60)
 (பாடம்) 1. 
நீலச்செறு.
 2. 
அடுநரோடு சேறியானவரை.
 3. 
மடந்தைக்கு.