திணை : நெய்தல்.

     துறை : இஃது, அலரச்சத்தாற் றோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.

     (து - ம்.) என்பது, தலைமகன் ஒரு சிறைப்புறமாக வந்திருப்பதறிந்த தோழி அவன்கேட்டு விரைவில் வரையுமாற்றானே ஊரார்

     தூற்றிய பழிச்சொல்லால் அன்னை இல்வயிற்செறித்ததும் தலைவி நலன் பசலையாலுண்ணப்பட்டழிவதும் அறிவுறுத்துவாளாய்த் "தலைவன் தொடர்பானது இற்செறித்தலால் இப்படிப் பசலையாகியழியக் கடவது தானோ" வென வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதன்கண் வகையின்பாற் படுத்துக.

    
உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர் 
    
மிகுமீன் உணக்கிய புதுமண லாங்கண் 
    
கல்லென் சேரிப் புலவற் புன்னை 
    
விழவுநாறு விளங்கிணர் வியந்துடன் கமழும் 
5
அழுங்க லூரோ அறனி்ன் றதனால் 
    
அறனில் அன்னை யருங்கடிப் படுப்பப் 
    
பசலை யாகி விளிவது கொல்லோ 
    
புள்ளுற வொசிந்த பூமயங் கள்ளற் 
    
கழிச்சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி 
10
திரைதரு புணரியிற் கழூஉம் 
    
மலிதிரைச் சேர்ப்பனொ டமைந்தநந் தொடர்பே. 

     (சொ - ள்.) உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர் - வலிமையுடைய கடலிலே சென்று மீன் பிடித்தலில் வருந்திய பெரிய வலைகளையுடைய பரதவர்; மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - மிக்க மீன்களைக் காயப் போகட்ட புதிய மணற் பரப்பாகிய அவ்விடத்து; கல்லென் சேரி புலவல் புன்னை - கல்லென வொலிக்குஞ் சேரியை யடுத்த புலவு நாற்றத்திடத்துள்ள புன்னையின்; விழவுநாறு விளங்கு இணர் உடன் விரிந்து கமழும் அழுங்கல் ஊர் - விழாவுக்குரிய மணமுடைய விளங்கிய பூங்கொத்து ஒருசேர விரிந்து மணங் கமழா நிற்கும் அலரெடுக்கின்ற பேரொலியையுடைய இவ்வூரோவெனில்; அறன் இன்று - அறமுடையதில்லை; அதனால் புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் கழிச் சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி - அதனால் புட்கள் வந்திருத்தலா லுதிர்ந்த பூக்கலந்த சேற்றினையுடைய கழியாகிய இடத்தின் மீதோடும் தேரிற் பூட்டிய பெரிய பிணிப்பையுடைய குதிரைகள்; திரை தரு புணரியின் கழூஉம் மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பு -அலையெழுந்து வரும் கடனீராலே கழுவப்படுகின்ற மிக்க கடற் சேர்ப்பனொடு பொருந்திய நமது தொடர்ச்சியானது; அறன் இல் அன்னை அருங் கடிப்படுப்பப் பசலையாகி விளிவதுகொல் - அறனில்லாத அன்னை இற்செறித்து

     அரிய காவலிற் படுத்தலாலே இங்ஙனம் பசலையாகி விளிந்தொழியக் கடவதுதானோ? எ - று.

     (வி - ம்.) சுரம் - இடம். நிவத்தல் - ஓடுதல். புலவல், அல் : சாரியை,

     தன்னொழுகலாற்றைப் பொறாது அலர் தூற்றலால் ஊர் அறனின்றென்றாள். கேள்வனைக் கூடாதவாறு இற்செறித்தமையால் அன்னையும் அறனிலளென்றாள், களவொழுக்கம் எண் வகைமணத்தினு ளொன்றாதலின் அஃதறனேயாம்; அதனுக்கு ஊறுசெய்தல் அறனின்மையென்றவாறு. பசலையாகிவிளிவதோ என்றது பசலைபாய்தல்.

     உள்ளுறை :-கழிச்சேற்றிலோடுங் குதிரைகளினுடம்பிலே பட்ட சேறு கடல் நீரால் கழுவப்படுமென்றது - களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைமகள் மேலும் தலைமகன்மீதுமேறிய அலர் அவ்விருவரும் வரைந்துகொள்ளுதலால் நீக்கப்படவேண்டு மென்றதாம்.

     இறைச்சி :-மணற்பரப்பிலே பரதவர் மீனுணக்கலானாகிய புலவு நாற்றத்தைப் புன்னை மலர் மணம் வீசுதலாற் போக்கிக் கமழாநிற்குமென்றது - சேரியிடத்தே தலைவிக்காக எமர்பெறக் கருதிய பொருளாசையைத் தலைவன் சான்றோரை முன்னிட்டுத் தரும் அருங்கலமுதலியவற்றாலே போக்கி வரைவுமாட்சிமைப்பட முடிப்பானாகவென்றதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம.் பயன் - செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல்.

(63)