திணை : குறிஞ்சி.

     துறை : இது, பிரிவிடைத் தலைவியதருமைகண்டு தூது விடக்கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைமகன் பிரிந்தவிடத்துத் தலைமகள் வருந்தியதறிந்த தோழி அவன்பால் தூதுவிடக் கருதுதலும் அதனையறிந்த தலைவி தோழியை நோக்கி, 'நம்மைக் கைவிட்ட அவரைக் கருதா தொழிக; உள்ளம் அவர்பாற் சென்றமையால் என்னுடம்பு வறிதாயிரா நின்றது; இனி வரினும் நமது நோய்க்கு மருந்தாக மாட்டார், ஆதலின், அவர் அங்கேயே இருப்பாராக; நம் நோயை நமர்காணா தொழிவாராக' வென வருத்தமிகுதி தோன்றக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனைக் "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை; வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல்-கற்- 6) என்னும் விதியின் கண் காய்தலின்பாற் படுத்துக.

    
என்ன ராயினும் இனிநினை வொழிக 
    
அன்ன வாக இனையல் தோழியாம் 
    
இன்ன மாகநத் துறந்தோர் நட்பெவன் 
    
மரனா ருடுக்கை மலையுறை குறவர்  
5
அறியா தறுத்த சிறியிலைச் சாந்தம் 
    
வறனுற் றார முருக்கிப் பையென 
    
மரம்வறி் தாகச் சோர்ந்துக் காங்கென் 
    
அறிவும் உள்ளமு மவர்வயிற் சென்றென 
    
வறிதால் இகுளையென் யாக்கை யினியவர் 
10
வரினும் நோய்மருந் தல்லர் வாராது 
    
அவண ராகுக காதலர் இவண்நங் 
    
காமம் படரட வருந்திய 
    
நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே. 

     (சொ - ள்.) தோழி என்னர் ஆயினும் நினைவு இனி ஒழிக-தோழீ ! நம் காதலர் எவ்வளவு சிறப்புடையராயினும் அவர்பால் தூதுவிடக் கருதுவதனை இனி நீ ஒழிப்பாயாக!; அன்ன ஆக இனையல் - நம்மைக் கைவிட்டாரென்று அத்தன்மையாக வருந்தாதே கொள்!; யாம் இன்னம் ஆக நத் துறந்தோர் நட்பு எவன் ? - நாம் இத்தன்மையேமாகி வருந்தும் வண்ணம் நம்மைத் துறந்த அவர் நட்புத்தான் நமக்கு யாது பயன்படும் ?; மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் அறியாது அறுத்த சிறி இலைச் சாந்தம் - மரற்பட்டையின் நாராலே பின்னிய உடையினையுடைய மலையிலிருக்கிற குறவர் தாம் அறியாமையினாலே மேற்பட்டையை அறுத்த சிறிய இலையையுடைய சந்தன மரத்தில்; வறன் உற்று ஆரமுருக்கிப் பை என மரம் வறிது ஆகச் சோர்ந்து உக்காங்கு - வற்றல் தொடங்கி மிகக் கெடுத்து மெல்லென அந்த மரம் வறிதாமாறு அதன்கண் உள்ள நீர் அறுபட்ட வாயின் வழியே சோர்ந்து வடிந்தாற் போல; அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென இகுளை என் யாக்கை வறிது - என் அறிவும் உளமும் அவரிடத்துச் சென்றொழிந்தன வாதலின் இகுளாய் ! என் உடம்பு உள்ளில் யாதும் இல்லையாய் நின்றது காண்!; இனி அவர் வரினும் நோய் மருந்து அல்ல - இனி அவர் இங்கு வந்தாலும் என் நோய்க்குரிய மருந்தாகார் ஆதலின்; காதலர் அவணர் ஆகுக ! வாராது - காதலர் வாராது அங்கேயே உறைவாராக; இவண் காமம் படர் நம் அட வருந்திய நோய்மலி வருத்தம் எமர் காணன் மார்-இங்குக் காமமும் அதனாலுண்டாகிய நினைவும் நம்மை யொறுத்தலாலே வருந்திய நோய் மிக்க ஏதப்பாட்டினை நம் சுற்றத்தார் காணாதொழிவாராக! எ-று.

     (வி - ம்.) நத்துறந்தோர் - நம்மைத் துறந்தோர் : இரண்டன்றொகை. நம் துறந்தோர் என்பது (தொல்-எழுத்- 157) சூத்திரத்தில் அன்ன பிறவுமென்றதனால் வலிந்து நின்றது. காணன்மார்: இது மாரீற்று எதிர்மறைவியங்கோள். அல் : எதிர்மறை யுணர்த்தியது. மேற்பட்டை சீவியதன்வழியாலே நீர்வடிந்து சந்தனமரம் படுவது போலப் புணர்ச்சி நசையின்வழியாலே என்னறிவும் உள்ளமும் அங்கே செல்ல உடம்பு இறக்குந் தன்மையையுடையதென உவமையோடு பொருளைப் பொருத்திக் காண்க. இஃது அழிவில் கூட்டத்துக் காதல் கைம்மிகல்.

    ஆற்றாமை மிகுதியால் இருகால் விளித்தாள். நோய்முற்றி இறந்துபடுந்தன்மை வந்துற்றதெனக் கொண்டுவரினு நோய் மருந்தல்ல ரென்றாள். சுற்றத்தார் கண்டுவைத்துப் பழியேற்றாதபடி இறப்பதே நலனெனக் கொண்டு எமர் காணாதொழிக வென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) "களவுங் கற்பும் அலர்வரை வின்றே" (தொல்-கற்- 21) என்பது பற்றித் தலைவி கற்புக் காலத்தும் எமர் காணன் மார் என அலரஞ்சுவா ளாயினள்: அலரிற் றோன்றும் காமத்து மிகுதி (தொல்-கற்- 22) என்பதனால். இதனாற் றலைவியின் காமஞ் சிறத்தலறிக.

(64)