திணை : குறிஞ்சி.

     துறை : இது, விரிச்சிபெற்றுப் புகன்ற தோழி, தலைமகட்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவியைத் தோழி, "யானுங் கவலுகையில் நம் அயலகத்துமாது தான் வேறொருத்தியிடம் உரையாடும்பொழுது 'அவன் இப்பொழுதே வருகுவன்' என வாய்ச்சொற் கூறினளாதலின் அவள் அமிழ்த முண்பாளாக," வெனத் தான்பெற்ற நன்னிமித்தங் கூறித் தேற்றா நிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 9.) என்னும் நூற்பாவினுள் "பிறவும் வகைபடவந்த கிளவியெல்லாம்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
அமுதம் உண்கநம் அயலில் ஆட்டி 
    
கிடங்கில் அன்ன விட்டுக்கரைக் கான்யாற்றுக் 
    
கலங்கும் பாசி நீரலைக் கலாவ 
    
ஒளிறுவெள் அருவி 1 யொண்டுறை மடுத்துப் 
5
புலியொடு பொருத புண்கூர் யானை 
    
நற்கோடு நயந்த அன்பில் கானவர் 
    
விற்சுழிப் பட்ட நாமப் பூசல் 
    
உருமிடைக் கடியிடி கரையும் 
    
பெருமலை நாடனை வரூஉம்என் றோளே, 

     (சொ - ள்.) விட்டுக் கரை கான் யாற்றுக் கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ - விட்டு விட்டுக் கரைத்துச் செல்லுதலையுடைய கான்யாற்றின்கண்ணே கலங்கும் பாசியை நீர் அலைத்தலானே அவை யாண்டும் கலப்ப; ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து - விளங்கிய வெள்ளிய அருவியினது ஒள்ளிய துறையின் கண்ணே பாய்ந்து; புலியொடு பொருத புண் கூர் யானை நல்கோடு நயந்த அன்பு இல் கானவர் - புலியுடனே போர்செய்தலானாகிய புண்மிக்க யானையின் நல்ல தந்தத்தை விரும்பிய அன்பற்ற வேடரின்; வில் சுழிப் பட்ட நாமப் பூசல் உரும் இடை இடி கடிகரையும் - வில்லினின்றுவிடும் அம்புபட்டதனாலாகிய சுழன்ற அச்சத்தைத் தருகின்ற பிளிற்றலின் பேரொலியானது இடியிலுண்டாகு மிக்க முழக்கத்தைப் போல ஒலிக்கும்; பெருமலை நாடனை நம் அயல் இல்லாட்டி கிடங்கில் அன்ன வரூஉம் என்றோள் - பெரிய மலை நாடன் குறித்த பருவத்து வாராமையால் அவனை நாம் கருதியிருக்கும்பொழுது நம் அயல் வீட்டு மாதொருத்தி வேறொருத்தியிடம் உரையாடுகின்றவள் நமக்கு நன்னிமித்தமாகக் கிடங்கில் என்னும் ஊர் போன்ற சிறந்த இனிய சொல்லால் 'அவன் இன்னே வருகுவன்' எனக் கூறினள் காண்; அவ்வார்த்தை அசரீரியெனப் படுதலால் நம்மலை நாடன் இன்னே வரும் என யான் கருதுகின்றேன் நீ வருந்தாதேகொள் !; அமுதம் உண்க - இங்ஙனம் நமக்கு நன்னிமித்தமாகக் கூறிய அவ் வயல்வீட்டு மாது தேவருணவாகிய அமுதத்தினை ஈண்டுக் கைவரப் பெற்று இப்பொழுதே உண்பாளாக !; எ - று.

     (வி - ம்.) கிடங்கில் - ஓரூர். பொய்கையாரால் பாடப்பெற்ற சிறப்புடையது. விரிச்சி - நன்னிமித்தம். கான்யாற்றருவியென இயைக்க- விட்டுக்கரை - மலையொத்த கரை யெனினுமமையும். சுழி-சுழற்சி.

     உள்ளுறை :-புலிபொருதலாலே புண்மிக்க யானை காமநோய் பொருதலால் வருத்தமுற்ற தலைவியாயும், வேடர் யானையின் மருப்புப் போக அம்பு விடுவது ஏதிலாட்டியர் தலைவியினுயிருக்கே ஏதமுண்டாம் படி அலரெடுத்ததாகவும், அம்புபட்ட யானை பூசலிடுவது அலரைப் பொறாளாய தலைவி வருந்துவதாகவும், அப்பூசல் மலையிற் சென்று மோதுதலானது அவ்வருத்தச் செய்தி தலைவன்மாட்டுஞ் சென்றுவிட்டதாகவும், அத்தகைய மலைநாடனாதலின் இன்னே வருகுவனெனவுங் கொள்க. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியையாற்றுவித்தல்.

     (பெரு - ரை,) இட்டுக் கரை எனக் கண்ணழித்து இட்டிதாகிய கரை எனினுமாம். இட்டிது - சிறியது.

இனி, பண்டைக் காலத்தே ஒருவரை உவந்து வாழ்த்துவோர் 'அமுதம் உண்க' என வாழ்த்துவது ஒரு வழக்கம் என்று தெரிகிறது. இதனை, "அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதமாகப், பெரும்பெயர்

     உலகம் பெறீஇயரோ அன்னை" (குறுந் - 83) எனவரும் குறுந்தொகைச் செய்யுளினுங் காண்க.

(65)
  
 (பாடம்) 1. 
உண்டுறை.