(து - ம்.)என்பது, சிறைப்புறத்தானாகிய தலைமகனுக்கு இற்செறிப்புணர்த்தி அவன் வரையுமாற்றானே, "அவர்மலையில் மழை பெய்து வெள்ளம் வாரா நின்றது, நம்மை இல்வயிற்செறித்திருப்பதை விட்டு விடும்படியாக யாரேனுஞ் சென்று கூறினால் அன்னை விடுவாளோ? விடுவளாயின் நமது நோய் நீங்கும்படி ஆடுகிற்பேம்; அங்ஙனங் கூறுவாரைப் பெறாமையின் அது கழிந்த" தெனத் தோழி தலைவியை நோக்கி வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கும் மேலைச் செய்யுட் கோதிய இலக்கணமே அமையும்.
| விளையா டாயமொடு ஓரை யாடாது |
| இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல் |
| அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக் |
| குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப் |
5 | பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம் |
| வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே |
| செல்கென விடுநள்மன் கொல்லோ எல்லுமிழ்ந்து |
| உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள் |
| கொடி நுடங் கிலங்கின மின்னி |
10 | ஆடுமழை இறுத்தன்றவர் கோடுயர் குன்றே. |
(சொ - ள்.) அவர் கோடு உயர் குன்று எல் உமிழ்ந்து உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள் - அவரது சிகரம் உயர்ந்த குன்றம் ஒளியை எங்கும் பரப்பி வலிய இடி முழங்குகின்ற இரவிருளில் நடுயாமத்திலே; கொடி நுடங்கு இலங்கினமின்னி ஆடு மழை இறுத்தன்று - கொடி நுடங்கினாற் போன்றிலங்கினவாய் மின்னி இயங்குகின்ற முகில் தங்கி மழையைப் பெய்யாநின்றது; இளையோர் விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இல்லிடத்தில் செறிந்திருத்தல் அறனும் அன்று ஆக்கமும் தேய்ம் என - இப்பொழுது இளமங்கையர் தாம் விளையாடுகின்ற தோழியர் கூட்டத்தோடு ஓரையாடாமல் வீட்டில் இற்செறிக்கப்பட்டிருத்தலான அற நெறியன்று அன்றிச் செல்வமுந் தேய்ந்துவிடும்' என்று; வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறின் செல்கென விடுநள் கொல் - விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரை நாம் பெறுவேமாயின், அவ்வன்னை நம்மை நோக்கி நீயிர் செல்வீ்ராக என்று விடுப்பாளோ ?; குறு நுரை சுமந்து நறுமலர் உந்திப் பொங்கி வரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம் - அங்ஙனம் விடுப்பின் அவர் மலையிற் பெய்யுமழை குறிய நுரைகளைச் சுமந்து கொண்டு நறிய மலர்களுடனே யாற்றிற் பொங்கி வருகின்ற புதுநீரை உள்ளம் மகிழ யாம் ஆடாநிற்போம்; அங்ஙனம் கூறுவாரைப் பெற்றிலே மாதலால் யாங்கொண்ட அவா வீணே கழிந்தது; எ - று.
(வி - ம்.) ஓரை - பஞ்சாய்ப்பாவை கொண்டு மகளிராடும் விளையாட்டு. உந்தி - யாறு. ஆக்கம் - செல்வம். குன்றம்முகில் மழையிறுத்தன்று என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேலேற்றிக் கூறப்பட்டது. மன்-கழிவுப்பொருளது. எல்லுமிழ்ந்து மின்னியெனக் கூட்டுக. நறுமலருடனே பொங்கி வருமெனக் கூட்டுக.
இளையோர் ஆடவரெனக் கொண்டு இளையோரில்லாதவிடத்திருத்தல் அறனுமன்று என்றவழி தங்கருத்துத் தலைவி காதலனை முயங்க வேண்டினும் பாதுகாப்பா ரில்லாதவிடமென்று அன்னை கொள்ளுதற் பொருட்டெனவுமாம்.
வரைவுநீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமை மறையுமென்னுங் கருத்தால், அவர் மலையினின்று வருகின்ற நீரினாடுகமென்றாள். இற்செறித்திருத்த லென்றதனால் செறிப்பறிவுறுத்தியதாயிற்று.
மெய்ப்பாடு : அழுகை. பயன் - தலைவியை யாற்றுவித்தல்.
(பெரு - ரை.) இன்றிரவு அவர் குன்றத்தே மழை பெய்தலான் நாளைப் பகற்பொழுதிலே அன்னை விடுவாளாயின் நெஞ்சுண ஆடுகம் என்பது கருத்து. தலைவி தலைவன் மலையிடை நின்றும் வரும் ஆற்றிலாடுதற்குப் பெரிதும் அவாவுவள் என்பதனை,
| "எற்றொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைக் |
| கற்றீண்டி வந்த புதுப்புனல் |
| கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் |
| உற்றாடின் நோந்தோழி நெஞ்சன்றே" |
என்றற் றொடக்கத்துச் சிலப்பதிகாரச் செய்யுள்களானும் (குன்றக்குரவை - 4: 13) உணர்க.
விடுநள்மன் கொல்லோ என்பதன்கண் உள்ள மன்னைப் பிரித்து நெஞ்சுண ஆடுகம்மன் எனக் கூட்டுக. மன் ஈண்டு ஒழியிசை. அதன் பொருள் "அங்ஙனம் கூறுவாரைப் பெற்றிலேமாதலால் யாங்கொண்ட அவா வீணே கழிந்தது" என்பதாம்.
இனி ஆசிரியர் நக்சினார்க்கினியர் இச்செய்யுளை, "இது வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும்? இங்ஙனம் கூறுவாரைப் பெறின் எனக் கூறி வற்புறுத்தது" என வேறோர் துறையாகக் கொண்டு 'என்புநெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்புதலையடுத்த வன்புறைக் கண்ணும்" என்னும் விதிக்கு எடுத்துக்காட்டுவர், இதற்குப் பயன் தோழி தலைவியை ஆற்றுவித்தல், முன்னதற்குப் பயன் வரைவு கடாதல் என்று நுண்ணிதின் வேற்றுமை யுணர்க.
இச்செய்யுட்கு உரையாசிரியர் பயன் தலைவியை யாற்றுவித்தல் என்பது, அவர் கொண்ட துறைக்கு ஒவ்வாமையுமுணர்க.
(68)