(து - ம்.) என்பது, வினைவயிற் பிரிந்துபோன தலைவன் குறித்த பருவத்து வாராமையால் அதனை யாற்றாத தலைவி மாலைப்பொழுது வருதலும் மிகத் துன்புற்று இம்மாலைப்பொழுது அவர் சென்றநாட்டும் இத் தன்மையதாய் வருத்திப்புகுமாயின் அவர் தாமெடுத்துக்கொண்ட வினைமேற்செல்லும் பற்றுள்ளம் விடுத்து இன்னே வருகுவர்; அப்படியில்லைப் போலுமென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல்-கற்- 6) என்னும் நூற்பாவினுள் ஆவயின் வரும் பல்வேறு நிலையினும் என்பதன்கண் அமைத்து, அவர் சென்ற நாட்டில் இஃது இன்று கொல் என்று வருந்தினாள் என்க,
| பல்கதிர் மண்டிலம் பகல்செய் தாற்றிச் |
| சேயுயர் பெருவரைச் சென்றவண் மறையப் |
| பறவை பார்ப்புவயின் அடையப் புறவின் |
| மாயெருத்து இரலை மடப்பிணை தழுவ |
5 | முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் |
| தோன்றி தோன்றுபு புதல்விளக் குறாஅ |
| மதர்வை நல்லான் மாசில் தெண்மணி |
| கொடுங்கோற் கோவலர் குழலோ டொன்றி |
| ஐதுவந் திசைக்கும் அருளில் மாலை |
10 | ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
| இனைய ஆகித் தோன்றின் |
| வினைவலித் தமைதல் ஆற்றலர் மன்னே. |
(சொ - ள்.) பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச் சேய் உயர் பெருவரை சென்று அவண் மறைய - பல கதிர்களையுடைய ஆதித்த மண்டிலம் பகற்பொழுதைச் செய்து முடித்து மிகவுயர்ந்த பெரிய அத்தமயமலையிற்சென்று அங்கே மறையவும்; பறவை பார்ப்பு வயின் அடைய - பறவைகள் தம் பிள்ளைகளிருக்கும் கூட்டிற் சென்று தங்கியிருப்பவும்; புறவின் மா எருத்து இரலை மடப்பிணை தழுவ - காட்டின் கண்ணே கரிய பிடரியையுடைய கலைமான் இளைமையையுடைய தன் பெண்மானைத் தழுவியிருப்பவும்; முல்லை முகை வாய் திறப்ப - முல்லையரும்புகள் மலரவும்; பல்வயின் புதல் தோன்றி தோன்றுபு விளக்கு உறாஅ - பலவிடங்களிலுள்ள புதர் தோறும் காந்தள் தழைத்துத் தன் மலராகிய விளக்கேந்தி நிற்பவும்; மதர்வை நல் ஆன் மாசு இல் தெள்மணி கொடுங்கோல் கோவலர் குழலொடு ஒன்றி ஐதுவந்து இசைக்கும் அருள் இல் மாலை - செம்மாப்பையுடைய நல்ல பசுவின் குற்றமற்ற மணியின் தெளிந்த ஓசை வளைந்த கோலையுடைய ஆயர்தங் குழலோசையோடு சேர்ந்து மெல்லிதாக வந்து ஒலியாநிற்கும் அருள் இல்லாத இம்மாலைப் பொழுதானது; ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் இனைய ஆகித் தோன்றின் - பொருளீட்டு் முயற்சியால் நம்மைக் கைவிட்டு அகன்ற தலைவர் சென்ற நாட்டிலும் இத்தன்மையாகத் தோன்றுமாயின்; வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன் - அவர் தாம் ஏறட்டுக் கொண்ட செயலின் கண்ணே உறுதிகொண்டு தங்கியிருப்பாரல்லர்; அப்படி இல்லாமற் கழிகின்றது; எ - று.
(வி - ம்.) பார்ப்பு - இளம்பறவை. உறா : உடன்பாட்டெச்சம். தெண்மணி - மாலையிற்போதரும் பசுக்களை ஏறுசென்று புணர்தலாலே அப்பசுவின் கழுத்திட்ட மணி விரைந்தொலிக்கும் தெளிந்த ஓசை. ஐது - மெல்லிது. மன் : கழிவு.
மண்டிலம் ஆற்றி மறையவென்றது பகலின் வெம்மையடங்கியதும் காமக்களியாட் டயர்தற்குரிய பொழுது போதருகின்றதுங் குறிப்பித்தது. பறவை யடையவென்றது குடம்பையிற் பிரிந்துசென்ற புள்ளினம் மீண்டும் வந்து புகும்பொழுதத்துங் காதலர் வந்திலரேயென மாலை நோக்கி யிரங்கியதாம். இரலை பிணையைத் தழுவுங்காலம் அதுவேயாதலின் இங்ஙனம் காதலர் வந்தென்னைத் தழுவினாரிலரேயென இதுவும் அம்மாலையை நோக்கி வருந்திக் கூறியதாம். முல்லை முகைவாய்திறப்பவென்றது நறு மணங் கொடுக்கும் முல்லை மலருங்காலம் மாலையாதலின் இதுவும் அம்மாலையை நோக்கியதாயிற்று. காந்தள் புதலில் விளக்கெடுப்பவென்றது மாலைமறையின் விளக்கொடாயினும் போதரி னலனெய்துவேனென இதுவும் அதனையே நோக்கிற்று. ஏனைய வெளிப்படை. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) இச் செய்யுளோடு,
| ”இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே |
| களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ யுகுத்தனவே |
| தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டுளதாங்கொல் |
| வளைநெகிழ எரிசிந்தி வந்தவிம் மருண்மாலை” (கானல் வரி, 40-2) |
என்றற் றொடக்கத்துச் செய்யுள்களையும் நினைவு கூர்க. "காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்" என்றஞ்சுவாள் 'அருளில் மாலை' என்றாள்.
(69)