(து - ம்.) என்பது, இருவகைக் குறியானும் வந்தொழுகுந் தலைமகன் இடையீடுபட்டு வாராதொழியக் கண்ட தலைமகள், வரைதல் விருப்பினளாய் வேட்கை பெரிதுஞ் சிறப்பச் சிந்தித்து நாரையை நோக்கிச் "சிறிய வெளிய நாராய், தலைவர்க்கு யான்படுந் துன்பத்தைச் செப்பாதோய், எம்மூரின் இரையை அருந்தியபின் அவரூர்க்கேனுஞ்செல்; அதனையு மறப்பையோ' வென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித்தோழிக்கு 'நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தலும்" (தொல்-கள- 20) என்னும் விதிகொள்க. இது தோழி கேட்ப நாரைக்குக் கூறுவாள் போற் கூறியது என்க.
| சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே |
| துறைபோகு அறுவைத் தூமடி அன்ன |
| நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே |
| எம்மூர் வந்தெம் ஒண்டுறை துழைஇச் |
5 | சினைக்கெளிற் 1 றார்கையை அவரூர்ப் பெயர்தி |
| அனையஅன் பினையோ பெருமற வியையோ |
| ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங் |
| கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் |
| இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே. |
(சொ - ள்.) சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங் குருகே துறை போகு அறுவைத் தூமடி அன்ன நிறம் கிளர்தூவிச் சிறு வெள்ளாங்குருகே-சிறிய வெளிய குருகே ! சிறிய வெளிய குருகே ! நீர்த்துறையிலே கழுவிய வெள்ளாடையின் மாசற்ற மடிபோன்ற நன்னிறம் விளங்கிய சிறகினையுடைய சிறிய வெளிய குருகே !; ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு - அவ்விடத்துள்ள இனிய புனல் இவ்வூரின்கண்ணே வந்து பரக்கின்ற கழனியையுடைய நல்ல ஊரினையுடைய என் காதலர் பாலேகி; என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோய் - என்னுடைய கலன்கள் கழலுகின்ற துன்பத்தை இதுகாறுஞ் சொல்லாதோய்; எம் ஊர் வந்து எம் ஒண் துறைத் துழைஇ சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி - நீ எம்மூரினையடைந்து எமது ஒள்ளிய பொய்கையினது துறையிலே புகுந்து துழாவிச் சினையுள்ள கெளிற்றுமீனைத் தின்றனையாகி அப்பால் அவருடைய ஊர்க்குச் செல்வாயாக; அனைய அன்பினைமோ பெருமறவியையோ-எம்மூர் வந்துண்ட நன்றி மறவாமல் இனி அவரிடம் கூறுதற்குத்தக்க அனைய அன்பினையுடையையோ ? அன்றேல் பெருமறதியையோ ? ஒன்றினை ஆராய்ந்து கூறிக்காண் !; எ - று.
(வி - ம்.) குருகு-நாரை; கொக்குமாம். அறுவை - ஆடை. தூவி - சிறகு. மறவி - மறதி. பருவரல் - துன்பம். வெள்ளாங்குருகு, ஆம் : சாரியை. இஃது அழிவில் கூட்டத்தின் கண்ணதாகிய தூது முனிவின்மை.
ஆங்கண் தீம்புனல் ஈங்கண்பரக்குங் கழனி என்றது அவரூரிலுள்ள இனியபுனலே இங்கு வருதலால் நீ சென்றக்கால் அங்கும் இரையைப் பெறுதற்கியலு மென்றும், கழனியின்புன லீண்டு வருதலால் ஊரும் அணித்தேயாமாதலின் வருந்தா தேகுதற்கியலு மென்றுங் கூறியதாம். அனைய அன்பினையோ வென்றது எம்மூர்வந்துண்ட நன்றிமறவாமல் இனி அவரிடங் கூறுதற்குத் தக்க அத்தகைய அன்புடையையோ வென்றதாம். மெய்ப்பாடு -அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) இஃது இற்செறிக்கப்பட்டுழிக், காப்புச் சிறைமிக்கமையால் தலைவி கையற்றுக் கூறியது என்க. இதனோடு,
| "கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த |
| ஆரல் இரைகருதி நித்தலும் நிற்றியால் |
| ஏரிணர்ப் புன்னைக்கீழ்க் கொண்கன் வருமெனப் |
| பேருண்கண் நீர்மல்க நின்றாள்மற் றென்னாயோ" |
| (தொல்-கள- 20 நச், உரை) |
எனவரும் பழம்பாடலையும் நினைக.
(70)