(து - ம்.) என்பது, தலைமகன் வினைவயிற் பிரிந்து போதலையறிந்த தலைவி, அவன் கேட்டுச் செலவழுங்குமாற்றானே தோழியை நோக்கித் "தலைவரோடு முயங்கிக் கிடப்பினும் கொடிய மாலைப்பொழுதில் அஞ்சுகின்ற யான் இங்கே தனிமையிற் றங்கி வாடும்படி அவர் நம்மைக் கைவிட்டு செல்லுகிற்பரெனச் சொல்லுவராதலின் யான் எங்ஙன மாற்றுமே "னென வருந்திக் கூறாநிற்பது,
(இ - ம்.) இதனை "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல்-கற்- 6) என்னும் நூற்பாவினுள் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| வேனில் முருக்கின் விளைதுணர் அன்ன |
| மாணா விரல வல்வாய்ப் பேஎய் |
| மல்லன் மூதூர் மலர்ப்பலி உணீஇய |
| மன்றம் போழும் புன்கண் மாலைத் |
5 | தம்மொடும் அஞ்சும் நம்மிவண் ஒழியச் |
| செல்ப என்ப தாமே செவ்வரி |
| மயிர்நிரைத் தன்ன வார்கோல் வாங்குகதிர்ச் |
| செந்நெலஞ் செறுவின் அன்னந் துஞ்சும் |
| பூக்கெழு படப்பைப் சாய்க்காட்டு அன்னஎன் |
10 | நுதல்கவின் அழிக்கும் பசலையும் |
| அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. |
(சொ - ள்) வேனில் முருக்கின் விளை துணர் அன்ன மாணா விரல வல்வாய்ப் பேஎய் - வேனிற் காலத்துச் செம்முருக்கின் பூங்கொத்தில் காய்த்து முற்றிய நெற்றுப்போன்ற மாண்பில்லாத விரல்களையுடைய பூசலிடுகின்ற வலிய வாயையுடைய பேய்; மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீஇய மன்றம் போழும் புன்கண் மாலை - வளப்பத்தையுடைய பழைமையாகிய ஊரின்கண்ணே தெய்வத்தின்முன் னிடப்படும். அருச்சனையுடனாகிய ஊன்மிடைந்த பலிச் சோற்றையுண்ண வேண்டித் தான் நிலைபெற்றிருக்கின்ற பாழ்மன்றத்தை மோதியெழுகின்ற பிரிந்தாரைத் துன்புறுத்து மாலைப் பொழுதிலே; தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய - நம் தலைவரொடு முயங்கிக் கிடப்பினும் அஞ்சுகின்ற நாம் தனியே இங்குத் தங்குமாறு நம்மைக் கைவிட்டு; செவ் அரி மயிர் நிரைத்து அன்ன வார்கோல் வாங்கு கதிர்ச் செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் பூகெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன - செவ்விய ஐதாகிய மயிரை நிரைத்து வைத்தாற்போன்ற நீண்ட திரட்சியையுடையனவாய் வளைந்த செந்நெற் கதிர்களையுடைய வயல்களில் அன்னப் பறவை துஞ்சா நிற்கும் பொலிவு பெற்ற விளங்கிய கொல்லைகளையுடைய திருசாய்க் கானத்தைப் போன்ற; என் நுதல் கவின் அழிக்கும் பசலையும் அயலோர் தூற்றும் அம்பலும் அளித்து - எனது நெற்றியின் அழகை அழிக்கும் பசலையையும் அதனை நோக்கி அயலிலாட்டியர் தூற்றும் பழிச் சொல்லையும் எனக்குக் கொடுத்து; தாம் செல்ப என்ப தாம் செல்கிற்பத்தேரன்று உழையர் கூறாநிற்பர்; இனி எங்ஙனம் ஆற்றுவிப்பது ? எ-று.
(வி - ம்.) மயிர் - நெல்வாலுக்குவமை. கோல் - திரட்சி. இனியான் என்பது முதற்குறிப்பெச்சம்.
இறைச்சிகள்:- (1) பேய் மலர்ப்பலியுண்ணவேண்டி மன்றத்தைப் புடைத்தெழு மென்றது, பசலையானது என்னலத்தையுண்ணவேண்டி நெஞ்சைப் புடைத்து நெற்றியிலெழுமென்றதாம்.
இறைச்சிகள்:- (2) செறுவில் அன்னந்துஞ்சுமென்றது, யானும் சேக்கையின்கண்ணே அவர் மார்பிற் றுஞ்சியிருந்தேன்; இப்பொழுது அஃதில்லை போலுமென்றிரங்கியதாம். மெய்ப்பாடு - அழுகை பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) செவ் வரி மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர் என்பதற்கு, சிவந்த சிங்கத்தின் பிடரிமயிரை நிரைத்துனவத்தாற் போன்று சிவந்த நெடிய வைக்கோலையுடைய வளைந்த கதிர் எனினுமாம்.
(73)