திணை : குறிஞ்சி.

    துறை : இது, சேட்படுக்கப்பட்டதுகேட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழிகேட்பச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைவி கிடைத்தற்கரியளாமென அவளைச் சேட்படுத்திக் கூறுந்தோழி நகையாடிக் கூறக்கண்ட தலைமகன் அந்நகைபொறாதுஅவளை நோக்கி இது தகாது கண்டாய்: அத்தலைமகளுடைய நோக்கம் பட்ட என்னுள்ளமுய்யுமாறு நகைசெய்யாதுரைப்பாய்: இன்றேல் எனனெஞ்சுடையுமெனப் புலம்பிக் கூறா நிற்பது.

    (இ - ம்.) இதற்குப் "பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்" (தொல்-கற்- 12 ) என்னும் நூற்பாவின்கண் வரும் "அன்புற்று நகினும்" என்னும் விதிகொள்க.

    
நயனின் மையிற் பயனிது வென்னாது 
    
பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் 
    
பாம்புயி ரணங்கி யாங்கும் ஈங்கிது 
    
தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது 
5
உரைமதி உடையுமென் உள்ளஞ் சாரல் 
    
கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் 
    
பச்சூன் பெய்த பகழி போலச் 
    
சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் 
    
உறாஅ நோக்கம் உற்றஎன் 
10
பைதல் நெஞ்சம் உய்யு மாறே. 

    (சொ - ள்.) குறுமகள் வாழி - இளமகளே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக !; நயன் இன்மையின் இது பயன் என்னாது - உன்னிடத்திற் சிறிதும் நன்மை யில்லாமையால் இதுதான் பயன் என்று கருதாமல்; பூ பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை பாம்பு உயிர் அணங்கி ஆங்கு - பொலிவு பெற்ற புள்ளிகள் அமைந்த அழல் போன்ற நஞ்சை உமிழ்கின்ற அகன்ற படத்தையுடைய பாம்பு உயிர்களைக் கொல்லும் பொருட்டுக் கடித்து வருத்தினாற்போலும்; ஈங்கு இது தகாஅது இங்கு நகைத்துரைப்பதாகிய இது தகுதியுடையதொன்றன்று சாரல் கொடுவில் கானவன் கோட்டு மா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சே அரி பரந்த ஆயிழை மழைக் கண் மலைச் சாரலின்கண்ணே வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை எய்து கொன்று, அதன் பசிய தசையிற் பாய்ச்சியதனாலே சிவந்த அம்பைப் போலச் செவ்வரி பரந்த ஆராய்ந்த இழையை அணிந்த தலைவியின் குளிர்ச்சியுற்ற கண்களினுடைய; உறாஅ நோக்கம் உற்ற என் பைதல் நெஞ்சம் - பொருந்தாப் பார்வையுற்ற எனது வருந்திய நெஞ்சம்; உய்யும் ஆறு நகாஅது உரைமதி-உய்யும் வண்ணம் இங்ஙனம் நகை செய்யாது உரைப்பாயாக !; என் உள்ளம் உடையும் - நகைத்துக் கூறின் என் உள்ளம் கலங்காநிற்கும்; எ - று.

    (வி - ம்.) கோட்டுமா - பன்றி. பயனிதுவென்னாது நகையாடிக் கூறுமிது பாம்பு அணங்கியதுபோலுமெனவுமாம். வாழி - இகழ்ச்சிக் குறிப்புமாம். உறாநோக்கம் - செவ்வனேபாராது கடைக்கண்ணானோக்கிய நோக்கம். பைதல் - வருந்துதல்.

    தான்படுந்துன்பத்தை யாற்றுவித்தலை விடுத்து அசதியாடலின் நயனுடையயையல்லையென்றான். இரக்கங்கூருதற்பொருட்டு வாழியோவென்றான்: என் வருத்தமறியுந் திறத்தினை யல்லைபோலுமென்பான் குறுமகளென்றான்: இளமையோர் பிறவுயிர்படுந் துன்பத்தைக் கருது மறிவு வாய்ந்திலராதலின் : உறாஅநோக்கந் தன்னுயிரை வாட்டலின் கோட்டுமா தொலைச்சி ஊன்பெய்த பகழியை உவமித்தான். மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாதுரைத்தல்.

    (பெரு - ரை.)கோட்டுமா தொலைச்சி என்பதைத் தொலைச்ச எனச் செயவெனெச்சமாக்கிப் பொருள் கூறுதல் நன்று.

(75)