திணை : பாலை.

    துறை : இது, புணர்ந்துடன் போகாநின்ற தலைவன் இடைச்சுரத்துத் தலைவிக் குரைத்தது.

    (து - ம்.) என்பது, உடன்கொண்டு செல்லுந் தலைவன் தலைவியைத் தன் ஆயத்தொடு செல்வாள்போல ஆற்றுவித்துக் கொண்டு செல்கின்றான் நின் அடிகள் நோவாதிருத்தற் பொருட்டு ஆலமரத்தின் கீழே தங்கி இளைப்பாறி, மேலும் செல்லும்போது எங்கெங்கே தங்க விரும்பினும் அஞ்சாது அங்கங்கே தங்கி இளைப்பாறியும் வருந்தாதே கெனக் கூறி மெல்லக்கொண் டேகாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஒன்றாத் தமரினும்" என்னும் நூற்பாவின் கண் 'இடைச்சுரமருங்கின். . . . . . .அப்பாற்பட்ட ஒருதிறத்தானும் (தொல்-அகத்- (41) ) என்புழி அப்பாற்பட்ட ஒருதிறம் என்பதன்கண் அமைத்துக் கொள்க.
    
வருமழை கரந்த வால்நிற விசும்பின்
    
நுண் துளி மாறிய உலவை அம்காட்டு
    
ஆல நீழல் அசைவு நிக்கி
    
அஞ்சுவழி அஞ்சாது அசைவுழி அசைஇ
5
வருந்தா தேகுமதி வாலிழைக் குறுமகள்
    
இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை
    
வீமலர் உதிர்ந்த தேனாறு புலவின் 
    
கானல் ஆர்மணல் மரீஇக் 
    
கல்லுறச் சிவந்தநின் மெல்லடி உயற்கே. 

    (சொ - ள்.) வால் இழை குறுமகள் - தூய கலன்களை யணிந்த இளமடந்தாய்!; இம் மெல் பேர் அலர் நும் ஊர்ப் புன்னைவீ மலர் உதிர்ந்த தேன்நாறு புலவின் கானல்-இந்த மெல்லிய பெரிய பழிச்சொல்லைத் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண் உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக வுதிர்ந்ததனாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய கழிக்கரைச் சோலையின்; ஆர் மணல் மரீஇக் கல்உறச் சிவந்த நின் மெல்அடி உயற்கு - மிக்க மணலிலே நடந்து இப்பொழுது கற்கள் பதிதலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாதிருத்தற்பொருட்டு; வருமழை கரந்த வால் நிற விசும்பின் நுண் துளி மாறிய - வருகின்ற மழை பெய்யாதொழிந்த வெளிய நிறத்தையுடைய விசும்பினின்று விழுகின்ற நுண்ணிய துளிகளும் இல்லையாகிய; உலவை அம் காட்டு ஆல நீழல் அசைவு நீக்கி-காற்றுச் சுழன்று வீசும் அழகிய காட்டு நெறியகத்து ஆலமரத்தின் நிழலிலே தங்கி இளைப்பாறி; அஞ்சுவழி அஞ்சாது அசைவுழி அசைஇ வருந்தாது ஏகுமதி - அஞ்சுமிடங் காணினும் ஆங்கு அஞ்சாது மற்றும் எவ்வெவ் விடத்தே தங்கவேண்டினும் அவ்வவ்விடத்தே தங்கிச் சிறிதும் வருத்தமுறாமல் ஏகுவாயாக !; எ - று.

    (வி - ம்.) வானிறவிசும்பு - மேகம் போன்ற கரியநிறமுடைய விசும்புமாம். உலவை - காற்று. அசைதல் - தங்குதல். அஞ்சுவழியென்றது மறவர் குழாம், ஆளி, எண்கு முதலிய காணாதன கண்ட விடத்தஞ்சுதல்.

    தன் விறலைத் தெரிப்பான் அஞ்சுவழியஞ்சா தென்றான். நெடுந்தூரம் போந்தனமாதலி னினித் தமர்தொடர்ந்து வருவர்கொலென்னும் அச்சமில்லை யெனக் கொண்டு அசைவழி யசைஇ யென்றான். புன்னை மலர்ப் பரப்பி னியங்கிய அடிகளாதலிற் கல்லினிடத்துச் சிவந்தவே யென்றிரங்கி வருந்தாதே கென்றான். இது நெய்தலிற்களவு.

    மெய்ப்பாடு - உவகை. பயன் - அயர்வகற்றல்.

    (பெரு - ரை.) உலவையங்காட்டு என்புழி உலவை என்பது பாலை நிலக் கருப்பொருளாகிய ஒருவகை மரம். இதனை, "ஓமையும் உழிஞ்சிலும் உலவையும் உகாயும்" (பெருங்- 1 - 52 : 57 ) எனவரும் பெருங்கதையானும் உணர்க. எனவே, உலவை மரமிக்க காடு என்பதே பொருளாகக் கொள்க.

வீமலர் : வினைத்தொகை. இருபெயரொட்டுமாம். உலவையங்காடு என்புழி அம் சாரியை. கள்ளியங்காடு என்பது போன்றென்க.

(76)