(து - ம்,) என்பது, சென்று வினைமுடித்த தலைவன் தேர்ப்பாகனை நோக்கி நம் அரசன் பகையைத் தணித்துவிட்டனனாதலால், நீ தேரைப் பூட்டிச் செலுத்துவாயாக; வருந்தியுறையும் நம் காதலி நம்மை நோக்கி விருந்தயர் விருப்பாலாகிய இன்னகையைக் காண்பேமென்று உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல்-கற்-5) என்னும் விதி கொள்க.
| இருநிலங் குறையக் கொட்டிப் பரிந்தின்று |
| ஆதி போகிய அசைவில் நோன்தாள் |
| மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி |
| கொய்ம்மயிர் எருத்தின் பெய்ம்மணி ஆர்ப்பப் |
5 | பூண்கதில் பாகநின் தேரே பூண்தாழ் |
| ஆக வனமுலைக் கரைவலம் தெறிப்ப |
| அழுதனள் உறையும் அம்மா அரிவை |
| விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய |
| முறுவல் இன்னகை காண்கம் |
10 | உறுபகை தணித்தனன் உரவுவாள்வேந்தே |
(சொ - ள்.) பாக உரவு வாள் வேந்து உறுபகை தணித்தனன் - பாகனே வலிய வாளையுடைய நம்மரசன் மிக்க பகையைத் தணித்து விட்டனன் இங்கு இனிக் காரியமில்லை; ஆதலின், இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று ஆதிபோகிய அசைவு இல் நோன்தாள் மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி - (அகன்ற) பெரிய நிலம் குழியும்படி தங்காலாலே கொட்டி நடந்து விரைந்து நேராக ஓடுகின்ற களைப்பில்லாத வலிய கால்களையுடைய அரசரால் நன்கு மதிக்கப்படுகின்ற மாட்சிமைப்பட்ட நடைத் தொழிலையுடைய குதிரையை; கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம்மணி ஆர்ப்ப நின் தேர் பூண்கதில் - கொய்யு மயிரையுடைய பிடரியிற் கட்டிய மணிகள் ஒலிப்ப நின் தேரிலே பூட்டிச் செலுத்துவாயாக !; பூண் தாழ் ஆக வனமுலைக் கரை வலம் தெறிப்ப அழுதனள் உறையும் - பூண்கள் தாழ்ந்த மார்பிலுள்ள அழகிய கொங்கை முகட்டிலே கண்ணீர் தெறித்து விழும்படியாக அழதனளாகியுறையும்; அ மா அரிவை விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன்நகை காண்கம் - அழகிய மாமை நிறத்தை யுடைய காதலி எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய் அட்டிற் சாலை புகுந்து விருந்துணவை வருந்தி யமைத்துக் களைப்படைந்துடைய மகிழ்ச்சியோடமைந்த இனிய நகையைக் கண்டு மகிழ்வோமாக !; எ - று.
(வி - ம்.) ஆதி - நெடிய செலவுமாம். அசைவு - களைப்பு. ஆகம் - மார்பு. கரைவலம் - முகட்டினிடம். உறுபகை - மிக்க பகை. உரவு - வலிமை. தில்: விழைவின்கண் வந்தது, வேந்து பகை தணித்தன னென்றதனாலே தலைமகன் வினைவலபாங்காயினானெனக் கொள்க.
காதலியின் அழுத முகத்தி லுடனே நகைகாண்டலின் காதலனுக்கு அளவையிலின்பந் தோன்றுமாதலின் அதனை யிவன் கருதலும் மகிழ்ச்சி மிக்குத் தன்வயங் கடந்து பாகன் பாலுங் கூறினா னாயிற்று. மெய்ப்பாடு - உவகை. பயன் - கேட்டபாகன் தேர்கடாவல்; மகிழ்தலுமாம்.
(பெரு - ரை.) இனி் இச்செய்யுளில் அழுதனள் உறையும், விருந்தாயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய அம்மா அரிவை முறுவல் இன்னகை காண்கம் என இயைத்துப்பொருள் கோடலே நேரிதாதல் உணர்க. பரிந்தின்று - பரிந்து. இன்று: அசை. ஆதிபோகிய குதிரை அசைவில் குதிரை. நோன்தாள் குதிரை, மதிக்கும் குதிரை, மாண்வினைக் குதிரை என அனைத்தையும் குதிரைக்கே தனித்தனி கூட்டுக.
தலைவன் தான் மீண்டு வருவதாகக் குறிப்பிட்டு வந்தநாள் அஃதாதலின் விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய அரிவை என்றான். தன்னைக் கண்டவுடன் அவட்கு முறுவல் இன்னகை தோன்றுதல் ஒருதலை என்னும் துணிவுபற்றி வருந்தினள் அசைஇய அரிவை முறுவல் இன்னகை காண்கம் என்றான் என்க.
(81)