திணை : குறிஞ்சி.

    துறை : இஃது, இரவுக்குறிவந்த தலைவன் சிறைப்புறத் தானாகத் தோழி சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைமகன் இரவுக்குறியின்கண் ஒருபால் வந்திருப்பதைக் குறிப்பினாலறிந்த தோழி கூகை குழறிச் சேரியிலுள்ளாரைத் துயிலெழுப்புதலையும், அதனா லிடையீடுபடுமென்பதையும் அறிவுறுத்தப்பட்டு அவன் வரைந்துகொள்ள வேண்டிக் கூகையைக் கூறுவாளாய்க் கூகாய் நினக்கு ஊனுணவு தருகிற்பேம்., எங்காதலர் வருகின்றதனை விரும்பித் துஞ்சாது யாம் வருந்தியிருக்குங்காலை அஞ்சும்படி நீ கத்தி ஊராரை யெழுப்பாதேயென இரந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்." (தொல்-கள-23) என்பதன்கண் வகை என்றதனால் அமைத்துக் கொள்க.

    
எம்மூர் வாயில்1ஒண்டுறைத் தடைஇய 
    
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய 
    
தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர் 
    
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை 
5
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் 
    
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் 
    
எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத் 
    
துஞ்சாது அலமரு பொழுதின் 
    
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே. 

    (சொ - ள்.) எம ஊர் வாயில் ஒண் துறை தடைஇய கடவுள் முதுமரத்து- எமது ஊர்முகத்தின் ஒள்ளிய பொய்கைத் துறையருகிலே பருத்த கடவுள் ஏறியிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து, உடன் உறை பழகிய தேயா வளைவாய்த் தெள் கண் கூர் உகிர் வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை - எம் மருகு ஒருசேர உறைதலானே பழக்கமுற்ற தேயாத வளைந்த வாயையும் தெளிந்த கண்ணையும் கூரிய உகிரையும் உடைய வாயாகிய பறையோசையாலே பிறரை வருத்தாநிற்கும் வலிமை மிக்க கூகையே !; மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் வான் எலி சூட்டொடு மலியப் பேணுதும் - யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு, நின்னை விரும்பி நிரம்பக் கொடாநிற்பேம்; எம் எஞ்சாக் கொள்கை காதலர் வரல் நசைஇத் துஞ்சாது அலமரு பொழுதின் - எம்பால் அன்பிற் குறைவு படாத கோட்பாட்டுடனே எம் காதலர் வருதலை விரும்பி யாம் இரவிலே துயில் கொள்ளாது உள்ளம் சுழன்று வைகும் பொழுது; அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீ - யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக நின் கடிய குரலை எடுத்துக் குழறி எம்மை வருத்தாதே கொள் ! எ - று.

    (வி - ம்.) தடைஇய - பருத்த. கூகைக்கு எலியிறைச்சியில் விருப்பமிகுதி; 'இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை' என்றார். அகத்தினும்; (122) மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய அசைவுபற்றிய அழுகை. பயன் - வரைவு கடாதல்.

    (பெரு - ரை.) இதன்கண் "தேயாவளைவாய்த் தெண்கன் கூருகிர் வாய்ப்பறை அசா அம் வலிமுந்துகூகை" என்னும் தொடர் கூகைக்குச் சொல்லோவியமாக நின்று ஓதுவார்க்கு இன்பம் பயத்தலுணர்க. தடைஇய - வளைந்த எனினுமாம். வால் எலி என மாறுக. வெள்ளிய சூட்டொடு எனினுமாம்.

(83)
  
 (பாடம்) 1. 
உண்டுறைத்.