(து - ம்,) என்பது, தலைமகன் இரவுக்குறி வருவதறிந்த தோழி அவன் கேட்டு விரைவின் வரைந்துகொள்ளுமாற்றானே தலைவியை நோக்கி, நீ வருந்துவதறிந்த வூரார் அலர் தூற்றினும், மலைநாடன் நின்பாலுள்ள விருப்பினாலே இரவில் கொடிய நெறியில் வருதல் ஏதமுடைத்தாகலின் வாரா தொழிவானாகவென்று கடிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும்பொழுதும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதனுள் வகை என்றதன்கண் அமைத்துக் கொள்க.
| ஆய்மலர் மழைக்கண் தெண்பனி யுறைப்பவும் |
| வேய்மருள் பணைத்தோள் விறலிழை நெகிழவும் |
| அம்பன் மூதூர் அரவ மாயினுங் |
| குறிவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக் |
5 | கன்றுடை வேழம் நின்றுகாத்து அல்கும் |
| ஆரிருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி |
| வாரற்க தில்ல தோழி சாரல் |
| கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை |
| தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி மகிழ்ந்துகொடு |
10 | காந்தளஞ் சிறுகுடிப் பகுக்கும் |
| ஓங்குமலை நாடன்நின் நசையி னானே. |
(சொ - ள்.) தோழி ஆய் மலர் மழைக்கண் தெள்பனி உறைப்பவும் வேய்மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும் அம்பல் மூதூர் அரவம் ஆயினும் - தோழீ ! அழகிய குவளை மலர்போன்ற குளிர்ச்சியையுடைய நின் கண்களினின்று தெளிந்த நீர் மிக வடிந்து விழவும் மூங்கிலை யொத்த பருத்த தோளிலணிந்த ஏனைய கலன்களை வெற்றி கொள்ளும் வளை நெகிழ்ந்து விழவும், அவற்றை நோக்கிப் பழிகூறும் இப்பழைய வூர் மிக அலர் தூற்றுமாயினும்; சாரல் கானவன் எய்த முளவு மான் கொழுங்குறை தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி மகிழ்ந்து கொடு - மலைச்சாரலிலே கானவன் எய்து கொணர்ந்த முட்பன்றியின் கொழுவிய தசைத் துண்டத்தைத் தேன் மணங்கமழும் கூந்தலையுடைய கொடிச்சி மகிழ்ந்தேற்றுக் கொண்டு; காந்தள் அம் சிறுகுடிப் பகுக்கும் ஓங்குமலை நாடன் நின் நசையினான் - காந்தள் மிக்க சிறு குடியுலுள்ளார் பலர்க்கும் பகுத்துக் கொடாநிற்கும் உயர்ந்த மலை நாட்டையுடைய நங்காதலன் நின்பாலுள்ள விருப்பத்தாலே; குறிவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக் கன்று உடைவேழம் நின்று காத்து அல்கும்-குறுகிய வரிகளையுடைய கரிய புலிக்கு அச்சமுற்று விரைந்து செல்லாத நடையையுடைய தன்கன்றைப் பிடியானை ஆண்டு நின்று காத்துத் தங்காநிற்கும்; ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி வாரற்க ! - நீங்குதற்கரிய இருண் மிக்க கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்ற சிறிய நெறியின் கண்ணே வாராதொழிவானாக; எ - று.
(வி - ம்.) உறைப்ப-மிகவிழ. விறல்-வெற்றி. இதனை "அருந்தவமாற்றியார்" என்னும் (30) பாலைக்கலியுள் 'விறலிழையவர்' என்பதற்கெழுதிய வுரையானுமறிக. குறிய என்பதன் அகரம் தொகும் வழித் தொக்கது. தில்: ஒழியிசை, முளவுமான் - முட்பன்றி. இஃதழிவில் கூட்டத் தவன் புணர்வு மறுத்தல்.
கண்ணீர்வடிதலெனத்தன்னாலே தேற்றத் தெளியாமை கூறினாள். பிரிந்த ஏக்கத்தால் உடம்பு வாடித் தோள்வளை நெகிழ்ந்தமை கூறுவாளாய் இனி இங்ஙனமிருப்பி னிறந்துபடுமெனவுங் குறிப்பித்தாளென்பது.
உள்ளுறை :- கானவன் தலைவனாகவும், கொடிச்சி தலைவியாகவும் பன்றித்தசை தலைவன் வரைந்துகொண்டு பொருளீட்டித் தலைவிபாலளிப்பதாகவும், சிறுகுடிப்பகுத்தல் அப்பொருளைக்கொண் டில்லறம் நடத்தற்பாலளாகவுங் கொள்க. இது வெளிப்படை.
இறைச்சி :- புலியையஞ்சிப் பிடியானை தன் கன்றைக் காத்துத் தங்குமென்றது பிரிவினாலே தலைவிக்கு வரும் ஏதத்தை யஞ்சி யான் அவளைக் காத்திருக்கின்றே னென்றதாம். கண்ணீர்வடிதலென்றது துன்பத்துப் புலம்பல். தோள்வளை நெகிழ்தலென்றது உடம்புநனிசுருங்கல். வாரற்கவென்றது அச்சத்தினகறலும், அவன் புணர்வு மறுத்தலுமாம். ஏனை மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த வெகுளி. பயன் -வரைவுடன்படுத்தல்.
(பெரு - ரை.) குறு வரி இரும்புலி, என்றும் கொடிச்சி கிழங்கொடு என்றும் பாடவேற்றுமை உண்டு. கொடிச்சி கிழங்கொடு பகுக்கும் என்னும் பாடமே சிறப்புடைத்து.
இனி, கானவன் காட்டில் எய்து கொணர்ந்த தசையைக் கொடிச்சி மனைப்படப்பையிலுள்ள கிழங்கோடு சிறுகுடியோர்க்கெல்லாம் பகுந்தளிக்குமாறு தலைவன் மறையிற்புணர்ந்த களவு மணத்தை இனிப் பலர் அறிமணமாக்கி அவன் நஞ்சுற்றத்தாரை யெல்லாம் மகிழ்விப்பானாக என்னும் உள்ளுறையாகக் கோடலுமாம்.
இனி, புலிக்கஞ்சுமாயினும் பிடியானை கன்றொடு நின்று அதனைப் பாதுகாக்குமாறு யாங்களும் காமநோய்க்கு அஞ்சுதுமேனும் தலைவன் இருளிடைவருதற்கு அஞ்சி அவன்திறத்தேமாய் அவனை வாராது பாதுகாக்கும் கடமையுடையே மாயினோம் என வாரற்க என்று வரவு மறுத்தமைக்குப் பிறிதோர்ஏது குறிப்பானும் உணர்த்தியபடியாம் என்க.
(85)