(து - ம்,) என்பது, தலைவன் இளவேனிற்பருவத்து வருவேனெனக் குறித்துச் சென்று வினைமுடித்து மீண்டுவந்ததைக் கேள்வியுற்ற தோழி, தலைவியை நோக்கி, நாம் முன்பனிக்காலத்து நடுங்கும்படி நம்மைப் பிரிந்து சென்று இளவேனிற்பருவத்தைக் கருதிவந்த தலைவர்தாம் அறநெறியுடையார் காணென உவந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" என்னும் நூற்பாவினுள் (தொல்-கற்- 23 ) 'மரபுடைஎதிரும் உளப்படப் பிறவும்' என்புழி பிற என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| அறவர் வாழி தோழி மறவர் |
| வேலென விரிந்த கதுப்பின் தோல |
| பாண்டில் ஒப்பின் பகன்றை மலருங் |
| கடும்பனி அற்சிரம் நடுங்கக் காண்தகக் |
5 | கைவல் வினைவன் தையுபு சொரிந்த |
| சுரிதக உருவின வாகிப் பெரிய |
| கோங்கங் குவிமுகை அவிழ ஈங்கை |
| நற்றளிர் நயவர நுடங்கும் |
| முற்றா வேனில் முன்னிவந் தோரே. |
(சொ - ள்.) தோழி மறவர் வேல் என விரிந்த கதுப்பின் தோல் பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம் - தோழீ, வீரர் கையிலுள்ள வேற்படைபோல விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய சிவதை வெள்ளி வட்டிலைப் போல மலரா நிற்கும் கடிய முன்பனியையுடைய அற்சிரக்காலத்து; நடுங்க - நாம் நடுங்குமாறு பிரிந்து பின்பு; காண் தக கைவல் வினைவன்தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகி - அழகு பொருந்தக் கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக்கற்களை இட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதக மென்னும் அணிபோன்ற வடிவினவாகி; பெரிய கோங்கம் குவிமுகை அவிழ - பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலர; ஈங்கை நல்தளிர் நயவர நுடங்கும் முற்றா வேனில் - ஈங்கையின் நல்ல தளிர்கள் கண்டார்க்கு விருப்பம் வருமாறு நுடங்கா நிற்கும் முதிராத இளவேனிற் காலத்து; முன்னி வந்தோர் அறவர் வாழி - இன்று நம்மைக் கருதி வந்தாராகலின் நம் தலைவர் அறநெறி தவறுநரல்லர் காண்; அவர் நெடுங்காலம் வாழ்வாராக !; எ - று.
(வி - ம்.) பாண்டில்-வட்டில். பகன்றை-சிவதை. அற்சிரம்-முன்பனிக்காலம். சுரிதகம்-திருகுபூப்போல அக்காலத்துப் பயின்ற தோரணி. கதுப்பின், இன் : அல்வழிச்சாரியை, ஆகிக்குவி முகையவிழவென்க. சிவதைமலர் வெள்ளிவட்டில் போன்றதென்பதனை "அகன்றுறை" என்னும் (73) கலியகத்து "பகன்றைப்பூ வுறநீண்ட பாசடைத் தாமரை, கண்பொர வொளிவிட்ட வெள்ளிய வள்ளத்தால்" என்பதனாலுமறிக. பிரிந்து என ஒருசொல் வருவித்து நடுங்கப் பிரிந்து என்க.
ஒன்றினேம் யாமென் றுரைத்தாரைத் தோள்நெகிழவிடாது குறித்தபருவத்து வந்தமையால் அறவரென்றாள். அறவர் வாழியென்றதனால் 'வாழ்த்தல்' என்னுமெய்ப்பாடு தோன்றிற்று. ஏனை மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல். கைகோள் - கற்பு.
(பெரு - ரை.) கோங்கம் குவிமுகையவிழ ஈங்கை நற்றளிர் நயவர நுடங்கும் முற்றாவேனிற் றொடக்கத்தே யான் மீண்டுவருவல், வருந்தற்க ! என்று தலைவன் கூறிப்போயினதையே தோழி ஈண்டுக் கொண்டு கூறுகின்றாள் ஆதலின், தாம் குறித்த பருவத்தை மறவாதே வந்தனர்காண் ஆதலால், அவர் அறவோரே என்று பாராட்டினள் என்க.
(86)