(து - ம்.) என்பது, தலைவி கருதியவண்ணம் அவளை இரவிலே அழைத்துக்கொண்டு செல்லுந் தலைமகன் விடிந்தபின் சுரமும் இடையூறுங் கடந்து போகுழித் தலைமகளை நோக்கி நெறியெங்கும் பொழிலும் ஊர்களுமாயுள்ளனவாதலின், நீ வழிவிளையாடி வருந்தாதேகு எனக் கூறி மெல்லக்கொண் டேகா நிற்பது.
(இ - ம்.) இதனை “ஒன்றாத் தமரினும் பருவத்தும்” (தொல்-அகத்-41) என்னும் நூற்பாவின்கண் "அப்பாற்பட்ட ஒருதிறத்தானும்" என்னும் விதியின்கண் அமைத்துக் கொள்க.
இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர் பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தமைக்கு எடுத்துக்காட்டுவர் (தொல். அகத். 15. மேற்கோள்.)
| அழிவில முயலு மார்வ மாக்கள் |
| வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் |
| கலமரல் வருத்தந் தீர யாழநின் |
| னலமென் பணைத்தோ ளெய்தின மாகலின் |
5 | பொரிப்பூம் புன்கி னெழில்தகை யொண்முறி |
| சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி |
| நிழல்காண் தோறு நெடிய வைகி |
| மணல்காண் தோறும் வண்ட றைஇ |
| வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே! |
10 | மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் |
| நறுந்தண் பொழில கானங் |
| குறும்ப லூரயாஞ் செல்லும் ஆறே. |
(சொ - ள்.) வால் எயிற்றோயே - வெள்ளிய பற்களையுடையோய!்; யாம் செல்லும் ஆறு கானம் - யாம் செல்லும் நெறியில் உள்ள காடெல்லாம்; மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் நறுந் தண்பொழில - மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவி விளையாடும் நறிய தண்ணிய சோலையை யுடையன; குறும்பல் ஊர - அன்றியும் அடுத்தடுத்துள்ள பல ஊர்களையுமுடையன; அழிவு இல முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண் கண்டு ஆங்கு - சிதைவில்லாத செயலை முயல்கின்ற ஆர்வ மாந்தர் அக்காரியம் முற்றுப்பெறுமாறு தாம் வழிபடு தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டாற் போல; அலமரல் வருத்தந் தீர - யாம் நெடுங்காலம் நின்னைப்பெற முயன்றதனானாகிய சுழற்சியையுடைய வருத்தமெல்லாந் தீரும்படியாக; நின் நலம் மெல் பணைத்தோள் எய்தினம் ஆகலின் - நின் அழகிய மெத்தென்ற பருத்த தோள்களை அடைந்தனம் ஆதலினால்; பொரி பூ புன்கின் எழில் தகை ஒள்முறி - இனி நீ பொரியையொத்த பூக்களையுடைய புன்கினது அழகுமிக்க ஒள்ளிய தளிரை; சுணங்கு அணி வனமுலை அணங்கு கொளத் திமிரி - சுணங்கு நிரம்பிய அழகிய முலையிலே அதன் வீற்றுத் தெய்வம் சிறப்போடிருக்குமாறு அப்பி; நிழல் காண்தோறும் நெடிய வைகி - நிழலைக் காணுந்தோறும் நெடும்பொழுது ஆண்டுத் தங்கி; மணல் காண்தோறும் வண்டல் தைஇ - மணல்களைக் காணுந்தோறும் சிற்றில் புனைந்து விளையாடி; வருந்தாது ஏகு - நெறிவந்த வருத்தத்தைப் போக்கி விட்டு மெல்ல மெல்லச் செல்வாயாக; எ-று.
(வி - ம்.) அலமரல் - சுழற்சி, யாழ: முன்னிலையசை. முறி - தளிர். சுணங்கு - தேமல். வண்டல் - மெல்லிய வண்டற் புழுதியாற் சிற்றில் புனைந்து விளையாடுதல். வால் - வெண்மை. நனை-அரும்பு. கொழுதுதல் - கோதுதல்.
நகைநோக்கித் தன்வழிவரல் வருத்தம்போக்கி மகிழ்தலின், வாலெயிற்றோயென விளித்தான். இனி இடையீடில்லையெனக் கொண்டமையின் தொளெய் தினம் என்றதன்றி நெடிய வைகி வண்டலயர்ந்தேகென்றான். நெறி பொழில ஊரவென்றது நண்பகலும் மெல்லமெல்ல ஏகலாமென்றுணர்த்தியதாம். நெடியவைகி யென்றது முதல், சுரங்கடந்தனம் இனி அஞ்சாதேயென்று தெளிவித்தானுமாம். ஆர்வமாக்கள் தெய்வத்தைக்கண்டு தாம் முயன்றுவைத்த காரியத்தைப் பெறுதல்போல, யாம் நின்னைக்கண்டு நின்றோளை யெய்தினமென்க.
மெய்ப்பாடு - உவகை.
பயன் - தலைமகளை அயர்வகற்றல். இதனைப் பாலைத்திணையிற் புணர்ச்சி நிகழ்வதற்கும், தலைவியிடத்துக் தலைவன் கூற்று நிகழ்வதற்கு மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்;
(தொல்-பொ-15.41 உரை.) (பெரு - ரை.) அழிவிலர் முயலும் மாக்கள் என்றும், அழற்றகை யொண்முறி என்றும் பாடம். இவற்றிற்கு - அழிவிலராய் முயலும் மாக்கள் என்றும், தீப்பிழம்பை யொத்த ஒள்ளிய தளிர் என்றும் பொருள் கொள்க.
(9)