திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரைவுகடாயது.

    (து - ம்,) என்பது, தலைவன் வரையாது களவொழுக்கத்துப் பலகாலும் பகற்குறி வந்தொழுகுதலை விலக்கித் 'தோழி யாம் சேரியின் கண்ணே செல்லுகின்றேம்; நீ வாழ்க; நின்னைப் பிரிதலினாலாற்றாளாய தலைவியின் மெய்முன்னமே மாமையுடையதாதலின், இனிநின் மணமுரசொலி கேட்குமுன் இறந்துபடுமதுகா'ணென அவன் வரையுமாற்றானே வெளிப்படையாக அவலித்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை “நாற்றமுந் தோற்றமும்” (தொல்-கள- 23) என்னும் நூற்பாவின்கண் “அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்” என்பதனால் அமைத்துக்கொள்க.

    
பிரசந் தூங்கப் பெரும்பழந் துணர 
    
வரைவெள் ளருவி மாலையின் இழிதரக் 
    
கூலம் எல்லாம் புலம்புக நாளும் 
    
மல்லற்று அம்மஇம் மலைகெழு வெற்பெனப் 
5
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட! 
    
செல்கம் எழுமோ சிறக்கநின் ஊழி 
    
மருங்கு மறைத்த திருந்திழைப் பணைத்தோள் 
    
நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் 
    
பூண்தாழ் ஆகம் நாணட வருந்திய 
10
பழங்கண் மாமையும் உடைய தழங்குகுரல் 
    
மயிர்க்கண் முரசின் ஒருமுன் 
    
உயிர்க்குறி எதிர்ப்பை பெறலருங் குரைத்தே. 

    (சொ - ள்.) பிரசம் தூங்க பெரும்பழம் துணர வரை வெள்அருவி மாலையின் இழிதர - கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; புலம் கூலம் எல்லாம் புக - சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாளும் இம் மலைகெழு வெற்பு மல்லற்று எனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் - நாட - எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி - யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் - பக்கங்கள் மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய பழங்கண் மாமையும் உடைய-பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; தழங்கு குரல் மயிர்க்கண் முரசின் ஓரும் முன் - ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; உயிர் குறிஎதிர்ப்பை பெறல் அருங்குரைத்து - இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்; எ - று.

    (வி - ம்.) கூலம் 16. :- நெல்லு, புல்லு, வரகு, சாமை, தினை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, துவரை, கடலை, மொச்சையென்ப; சோளமும் கம்பும் சேரப்பதினெட்டெனவுமுரைப்ப; "பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக" என்றார் பிறரும். மயிர்க்கண்முரசம் - மயிர்சீவாத தோலாற்கட்டிய முரசம்.

    பணைத்தோள் - முன்பு பருத்ததோ ளென்றவாறு. தோள் நெகிழ்ச்சி நீயறியாவாறு கலன்கள் மறைப்பனவென்பாள் மருங்கு மறைத்த இழைத்தோளென்றாள். தான்கொண்ட காதலை நின்பாற் கூறுதற்கு நாண் தன்னை வருத்துதலாலே பழங்கண்கொண்டன குறுமகளாக மெனவுமாம்.

    நின்னைப் புகல்புக்கேமைக் கைவிடுகின்ற நினது மலையாயிருந்தும் பிரிந்தோரிரங்குமாறு இன்னும் இங்ஙனம் வளனுடைத்தா யிரா நின்றது; இஃதென்ன வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது காண்க. மெய்ப்பாடு -அவலத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

    (பெரு - ரை.) துணர: செயவெனெச்சம். மாலையின் - மாலைபோல. புலம் - நிலம். மல்லற்று - மல்லலையுடையது. மலை - பக்கமலை. பழங்கண் - துன்பம். முரசின் - முரசினால்.

(")