(து - ம்,) என்பது. களவொழுக்கத்தின்கண் எந்நாளும் இடையீடுபடாது தலைமகன் கூடுதலால் இன்பமுற்ற தலைமகள் ஒருநாள் அவன் சிறைப்புறத்தானாகக் கேட்டுமகிழ்ந்து விரையவருமாறு 'யான் எனது புணர்ச்சிநலனைப் புலப்படாது மறைத்துக்கொள்ளும்படியாக இங்ஙனம் தன்மார்பால் வருந்துமென்னியல்பை யறியாச்சேர்ப்பன் என்ன மகனெனக் கூறப்படுவா'னென்று தோழியைநோக்கி வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "மறைந்தவற் காண்டல்" (தொல்-கள- 20) என்னும் நூற்பாவின்கண் "ஏமஞ் சான்ற வுவகைக் கண்ணும்" என்னும் விதிகொள்க.
| நோயலைக் கலங்கிய மதனழி பொழுதின் |
| காமஞ் செப்பல் ஆண்மகற்கு அமையும் |
| யானென், பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக் |
| கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ |
5 | மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவியிணர்ப் |
| புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன் |
| என்ன மகன்கொல் தோழி தன்வயின் |
| ஆர்வ முடைய ராகி |
| மார்பணங்கு உறுநரை அறியா தோனே. |
(சொ - ள்.) தோழி நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் - தோழி ! காமநோயானது நிலைகுலைத்தலாலே கலக்கமுற்ற வலியழிந்த பொழுதில் அன்போடு வந்து அருகிலிருந்து நயமொழி கூறி ஆற்றுவித்தல் ஆண்மகனுக்குரிய சிறந்த பண்பாகும், அங்ஙனம் யான் காமநோயால் வருந்திய பொழுது நம் காதலன் அருகு வந்திருந்து ஆற்றினானுமல்லன்; கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப - கைத்தொழில் வல்ல கம்மியன் அழகு பொருந்தக் கழுவித் தூய்மை செய்யாத பசிய முத்து தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல; யான் என் பெண்மை தட்ப நுண்ணிதில் தாங்கி - யானும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கி என் பெண் தன்மையாலே தகைத்துக்கொள்ளும்படியாக; குவி இணர்ப் புன்னை புலவுநீர் அரும்பிய சேர்ப்பன் - அலராமற் குவிந்த பூங்ககொத்துக்களையுடைய புன்னையின் கண்ணே புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்தலான் மலர்ந்த கடற்கரைத் தலைவனாகிய; தன்வயின் ஆர்வமுடையராகி் மார்பு அணங்கு உறுநரை அறியாதோன் என்ன மகன் - முன்னமே அவன்பால் ஆர்வமுடையேனாக வேண்டி அவனது மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ ? எ - று.
(வி - ம்.) மண்ணாப் பசுமுத்தேய்ப்ப நுண்ணிதிற்றாங்கிப் பெண்மை தட்பவென மாறிக் கூட்டுக. தலைவியை முத்தோடொப்பக் கூறியது சிறப்பு நிலைக்களமாக முதலொடு முதலே வந்த பண்புவமம். சேர்ப்பனாகிய அறியாதோன் என்ன மகன்கொலென மாறிக் கூட்டுக. களவாதலின் நலனைப் புலப்படாமல் மறைக்கவேண்டியதாயிற்று. ஆண்மகனருகிருந்து காமஞ்செப்புதல் கற்புக்கன்றிப் பெறப்படாமையின், வரைவு விரும்பியவாறாயிற்று. என்ன மகன் என்றது காதல் கைம்மிகல். இஃது அழிவில் கூட்டத்திற்குத் தலைக்கீடு.
உள்ளுறை :-அலராமற் குவிந்த பூங்கொத்தையுடைய புன்னையின் கண்ணே புலவுநாற்றத்தையுடைய நீர் தெறித்தரும்பிய சேர்ப்பனென்றது, புன்னையிடத்துத் தோன்றிய புலவுநாற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறுபோல வரைந்துகொண்டு களவின்கண் வந்த குற்றம் வழிகெட வொழுகுவானாக வென்றதாம். மெய்ப்பாடு -வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - வரைவுடம்படுத்தல்.
(பெரு - ரை.) இனி, இச்செய்யுள் நோய் அலைக் கலங்கி மதன் அழி்பொழுதில் தன் காமத்தைப் பிறர் அறியும்படி வெளிப்படுத்துக் கூறுதல் ஆடவர்க்கு ஆயின் இயல்பாகும், பெண்டிர்க்கு அங்ஙனம் நோயலைக் கலங்கி மதனழி பொழுதில் தங்காமத்தைத் தாங்களே வெளிப்படுத்துச் செப்பல் இயல்பன்மையின் யான் என் பெண்மை தடுத்தலானே காமநோயினை நுண்ணிதில் தாங்கிக் கழாப் பசுமுத்துத் தனது ஒளியைப் புறத்தே காட்டாமல் இருப்பதுபோல இருப்பேனாக; தன்வயின் ஆர்வமுடையராகி, தன்மார்பு காரணமாக வருத்தமுற்றிருக்கின்ற மகளிர் நிலையைக் குறிப்பாலே உணரமாட்டாத நம் சேர்ப்பன் என்ன மகன் ? என்று தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தைமையும் தோன்றக் கூறியதெனக் கொள்க. உரையாசிரியர் இங்ஙனம் கூறவறியாது பொருந்தாது உரை கூறுதலும் உணர்க. இது களவின்பமேகாமுற்று வரைதலிற்கருத்தின்றி ஒழுகும் தலைவனை வரைந்து கொள்ளும்படி வற்புறுத்தக் கருதிய தலைவி களவொழுக்கத்தே கூடியிருக்குங் காலத்தினுங்காட்டிற் பிரிந்துறையும் காலமே நெடிதாதலின் அது பொறாத தலைவி வரைவினை விரும்பும் தனது விருப்பத்தை நுண்ணிதின் ஓதியபடியாம் என்க. யான் என் பெண்மை தட்பத் தாங்கிப் பசுமுத்து ஏய்ப்ப அதனை அவன் அறிகின்றிலன் என்று குறை கூறியவாறென்க.
இதன்கண் ஆர்வத்தைத் தன்கண் அடக்கியிருக்கும் தலைவி கழுவாமையினாலே தன் ஒளியைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் பசுமுத்தினைத் தனக்குவமையாக்கிக்கொண்ட நுணுக்கம் நினைத்தின்புறுக.
(")