திணை : குறிஞ்சி.

    துறை : இது, தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்தென வுரைத்தது.

    (து - ம்,) என்பது, பாங்கற் கூட்டத்துத் தோழன் அஃது எவ்விடத்து எவ்வியற்றென்றாற்குத் 'தலைமகன் குன்றகத்தது சீறூர், அச்சீறூர்க்கண்ணுள்ளாளொரு கொடிச்சி, அவள் கூந்தல்நறுநாற்றத்தது; அத்தகையாள் கையில் என்னெஞ்சு சிக்குண்டது; அஃது அவளன்றிப் பிறரால் விடுத்தற்கரியாதுகா'ணென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "மெய்தொட்டுப் பயிறல்" (தொல்-கள- 11) என்னும் நூற்பாவினுள் "குற்றங்காட்டிய வாயில் பெட்பினும்" என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க 
    
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று 
    
அதவத் தீங்கனி அன்ன செம்முகத் 
    
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் 
5
2கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து 
    
குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக் 
    
குன்றகத் ததுவே 3 கொழுமிளைச் சீறூர் 
    
சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி 
    
கொடிச்சி கையத் ததுவேபிறர் 
10
விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே. 

    (சொ - ள்.) பாடு கழை இரங்கப் பல்இயம் கறங்க ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று - பக்கத்திலே குழலொலிப்பப் பலவாச்சியங்களு முழங்க ஆடுகின்ற கழைக்கூத்தி நடந்த முறுக்குண்ட புரியை யுடைய வலிய கயிற்றின் மீது; தீம் அதவக் கனி அன்ன செம் முகம் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க - இனிய அத்திப் பழம் போன்ற சிவந்த முகத்தையும் பஞ்சுபோன்ற தலையையுமுடைய குரங்கினது வலிய குட்டி பற்றித் தூங்காநிற்ப; குறக் குறு மாக்கள் இரும் பொறைக் கழைக்கண் விசைத்து எழுந்து ஏறித் தாளம் கொட்டும் அக் குன்றகத்தது - அதனைக் கண்ட குறச்சாதியாரின் இளமகார் பெரிய பாறையின்கணுள்ள மூங்கிலின்மேல் விசைத்து எழுந்து ஏறி நின்று தாளங் கொட்டாநிற்கும் அந்தக் குன்றின் இடத்துளதாகும்; கொழு மிளைச் சீறூர் - கொழுவிய காவற்காடு சூழ்ந்த சீறூர்; நாறு மயிர்க்கொடிச்சி சீறூரோள்-என்னாற் காதலிக்கப்பட்ட நறுமணங் கமழுங் கூந்தலையுடைய கொடிச்சி அச் சீறூரின் கண் இருப்பவளாவாள்; பிணித்த என் நெஞ்சம் கொடிச்சி கையகத்தது-அவளாலே பிணிப்புண்ட என்னெஞ்சமும் அக் கொடிச்சியின் கையகத்ததாயிராநின்றது; பிறர் விடுத்தற்கு ஆகாது-அவள் இரங்கி விடுத்தாலன்றி என்னெஞ்சம் பிறரால் விடுவித்தற்கும் இயலாதாகுங்காண்; எ - று.

    (வி - ம்.) அதவம் - அத்தி. துய் - பஞ்சு. மிளை - காவற்காடு. சீறூர் - இவ்விடம் என்றவாறு. நாறுமயிர் - இவ்வியற்றென்றவாறு, நெஞ்சம் பிணித்ததும் ஆகாததும் தன்னிலை.

    நீ செல்லுதற்கியலாதென்பான் குன்றகத்தது குழுமிளைச் சீறூரென்றும், அங்ஙனஞ் சென்றாலும் என் நெஞ்சம்நின்னாற் காண்பதற்கியலாதவாறு கொடிச்சி கையகத்துப் பிணிப்புண்டதென்றும், ஒருவழி நீ காணிலும் அவள் அருள்செய்து விடுத்தாலன்றி நின்போல்வார் விடுத்தற்கரிதென்றுங் கூறினானாம். தாளங்கொட்டுமென்ற சொற் சிறப்பானே ஆசிரியர் கொட்டம்பலவனாரெனப் பெயர் பெற்றனர் போலும்.

    இறைச்சி :- கூத்தி நடந்த கயிற்றின்மேல் மந்தியின்பறழ் ஏறியாடக் கண்ட குறமாக்கள் தாளங்கொட்டா நிற்குமென்றது, காப்பன காத்துக் கடிவன கடிந்து மன்பதை யோம்புதலை மேற்கொண்ட என்னுள்ளத்து ஒரு கொடிச்சி சென்று தங்குவதனை யறிந்த நீ கை கொட்டி நகையாடி யழுங்கச் செய்தனை யென்றதாம். மெய்ப்பாடு - வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனிடத்துரைத்தல்.

    (பெரு - ரை.) பாடு - பக்கம். ஆடுமகள் என்றது கழைக்கூத்தியை. இரும்பொறைக் கழைக்கண் என மாறுக. என்னெஞ்சு கொடிச்சி கையகத்தது என மாறுக. 'குறுமிளைச்சீறூர்' என்றும் பாடம்.

(95)
  
 (பாடம்) 1. 
கோட்டம்பலவனார்.
 2. 
பறைக்கண்.
 3. 
குழு.