(து - ம்,) என்பது, வினைவயிற் பிரிந்துசென்ற தலைமகன் குறித்த பருவத்து வாராமையால் அக்காலத்துண்டாகிய கருப்பொருண் முதலாயவற்றைக் கண்டு வருந்திய தலைவி, ஆற்றுவிக்குந் தோழியை நோக்கிக் குயில்கூவுமோசையும்., யாற்றுநீர்ப் பெருக்கும், நறுமலர்விற்கு மகளும் எனக்குக் காமநோயைத் தோற்றுவித்துக் கொடுமை செய்தலின், யான் எவ்வாறுய்வேனென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியுமாகலின்" (தொல்-கற்- (9) ) என்னும் நூற்பாவினுள் 'ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா |
| எவ்வ நெஞ்சத்து எஃகெறிந் தாங்குப் |
| பிரிவில புலம்பி நுவலுங் குயிலினுந் |
| தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே |
5 | அதனினுங் கொடியள் தானே மதனின் |
| துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு |
| பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென |
| வண்டுசூழ் வட்டியள் திரிதரும் |
| தண்டலை உழவர் தனிமட மகளே. |
(சொ - ள்.) அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு - தோழீ ! நெடுங்காலம் முன்னுண்டாகி ஆழ்ந்த பெரிய புண்ணின் வாய் நிணங் காயாத துன்பத்தையுடைய மார்பினிடத்தில் வேற்படையைக் குற்றிப்பாய்ச்சினாற் போல; பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் தேறுநீர் கெழீஇய யாறு நனி கொடிதே - என் அருகிலிருந்து பிரியாதனவாய் வருந்திக் கூவுங் குயிலினுங் காட்டில் நன்றாகத் தெளிந்த நீர் கெழுமி வருகின்ற யாறு மிகக் கொடியதாயிரா நின்றது; மதனின் துய்த்தலை இதழ பை குருக்கத்தியொடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என - அழகுடைய பஞ்சு போன்ற மேலே புறவிதழையுடைய பசிய குருக்கத்திமலருடனே விரவிய சிறு சண்பக மலரையும் விலைக்குக் கொள்ளீரோ ? என்று; வண்டு சூழ் வட்டியள் திரிதரும் - அம்மலர்களை இட்டு வைத்தலால் வண்டுகள் சூழ்கின்ற கடகப் பெட்டியைக் கைக்கொண்டு திரியாநிற்கும்; தண்தலை உழவர் தனி மடமகள் தான் - சோலையின்கணுள்ள உழுதுண்ணு மாக்களின் ஒப்பற்ற இளமகளாவாள்தான்; அதனினும் கொடியள் - அவ் யாற்றினுங்காட்டில் மிகக் கொடியளாயிராநின்றாள்; இங்ஙனமாகையில் யான் எவ்வாறு ஆற்றியுய்குவன் ? எ - று.
(வி - ம்.) வழும்பு - நிணம். மதன் - அழகு. பித்திகை - சிறுசண்பகம். வட்டி - கடகப் பெட்டி. தலைவன் குறித்த காலம் குயில் கூவி, யாற்றில் நீர்பெருகி, குருக்கத்தி சிறு சண்பக முதலாயின மலருங் கார்ப்பருவத்தில் வருவேனென்றானென்பது. குயிலோசைக்கு எஃகெறிந்ததைக் கூறியது கிழக்கிடுபொருள் நிலைக்களமாக முதலுஞ் சினையும் விராய்வந்த பண்புவமம். குயிலோசை முதலியன இன்பத்தை வெறுத்தலும் துன்பத்துப் புலம்பலுமாம். குயிலோசை செவியளவே யின்பஞ்செய்ய, ஏனைப்புலன்க ளின்பம் பெறாமையிற் குயில்கொடி தென்றாள். யாற்றுநீர் குளிர்ச்சிசெய்தலின் அக்குளிருக்குத் தனிக்கிடை வருத்துவதேயென யாறு கொடிதென்றாள். ஆடவனது மெய் தோயப்பெற்று அம் மெய்ம்மணம் நுகர்ந்தவழி நறுமலரின் மணஞ் சிறக்குமாதலின் அது காரணமாகப் பூவிலை மடந்தை கொடியளென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) தலைவன் கார்ப்பருவத் தொடக்கத்தே மீண்டு வருவல் கவலாதேகொள் என்று தேற்றிப் போயினனாக, இடையிடையே குயிலோசை கேட்குந் தோறும் காமநோய் உரம்பெற்றுத் தன்னை வருத்துதலான், இக் குயிலின்றேல் ஒருவாறு ஆற்றியிருப்பேன்மன் என்று வருந்துவாள், என்னைப் பிரியாதே அயலிலிருந்து கூவுங்குயில் கொடி தென்றாள் யாற்றுநீர் வரவு கார்ப்பருவம் வந்துவிட்டமையையுணர்த்துதலின், அப்பருவங்கண்டு நம் பெருமான் இன்னும் வந்திலனே வருவானோ வாரானோ என்றும், இப்புதுநீர்ப் பெருக்கின்கண் அவனொடு ஆடப் பெற்றிலேனே என்றும் பல்வேறு துன்ப நினைவுகளைக் தோற்றுவித்தலான் குயிலினும் யாறு நனிகொடி தென்றாள். இனிக் கார்ப்பருவம் நிகழ்ந்து முதிராநிற்றலை அப்பருவத்தே அரும்பிமலரும் குருக்கத்தி முதலிய மலர்களை விற்போள் கூக்குரல் அறிவித்தலின் அக்குரல் கேட்டலும் எம்பெருமான் குறித்த பருவத்தே வந்திலன். நம்மை மறந்து மாறினனோ மலர் பொதுளிய இப்பருவத்தே பூம்பொழிலில் எம்பெருமான் மலர் பறித்து எங்குழலில் சூட்ட ஆடும் ஆட்டும் பெற்றிலேனே ! இனி என்செய்தாற்றுகேன் எனக் கையறுநிலை எய்துதலான் மலர் கொள்ளீரோ என வட்டியுடன் திரிதரும் உழவன் மகள் அதனினும் கொடியாள் என்றாள். இங்ஙனமாக நான் ஆற்றியிருத்தல் எங்ஙனம் என்பது குறிப்பெச்சம். அழுந்து என்பது ஆழ்ந்து என்பதன் குறுக்கல் விகாரம்.
(97)