திணை : குறிஞ்சி.

    துறை : இது, இரவுக்குறி வந்தொழுகுந் தலைவனைத் தோழி வரைவுகடாயது.

    (து - ம்,) என்பது, இரவுக்குறி இடையீடின்றி வருகின்ற தலைமகனை நோக்கித் தோழி, காவன் மிகுதியையும், அதனாலே தலைமகள் துயிலாது வருந்துதலையும், அவளது நெஞ்சம் தலைவனை விட்டுப்பிரியாத அன்பினிலையையுங் கூறுவாளாய், "நாடனே ! நீ இரவில் வருதலைக் காட்டிலும் தூங்காத என் கண்ணுங் கொடிது. மீளாத என்னெஞ்சமுங் கொடியது காணென" வருந்தி வரைவுகடாதல் தோன்றக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"(தொல்-கள- 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின்  
    
செய்ய்ம்ம் மேவல் சிறுகட் பன்றி  
    
ஓங்குமலை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி  
    
நூழை நுழையும் பொழுதின் தாழாது  
5
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென 
    
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன் 
    
கல்லளைப் பள்ளி வதியும் நாடன் 
    
எந்தை ஓம்புங் கடிப்புடை வியல்நகர்த் 
    
துஞ்சாக் காவலர் இகழ்பதம் நோக்கி 
10
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே 
    
வைகலும் பொருந்தல் ஒல்லாக் 
    
கண்ணொடு வாராஎன் நாரில் நெஞ்சே. 

    (சொ - ள்.) எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின் சிறுகண் செய் மேவல் பன்றி - முள்ளம் பன்றியின் முட்போன்ற பருத்த மயிரையுடைய பிடரும் சிறிய கண்ணும் வயலிற் சென்றுண்ணும் விருப்பமுமுடைய பன்றி; ஓங்குமலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில் - உயர்ந்த மலையிடத்துள்ள இடமகன்ற தினைக் கொல்லையிலே சென்று மேயும் பொருட்டுப் பெரிய இயந்திரமமைந்த புழைவழியிலே சென்று புகும்பொழுது; தாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென - தாழாது விரைந்து நல்ல பக்கத்திலிருந்து பல்லியடித்தலும் அதனை அறிந்து ஆங்குச் சென்றால் ஊறு நிகழும் என்று அஞ்சி; மெல்ல மெல்ல பிறக்கு பெயர்ந்து தன் கல் அளைப்பள்ளி வதியும் - மெல்ல மெல்லப் பின்னே மீண்டுவந்து தன் கல்முழையிலுள்ள பள்ளியிடத்தே தங்காநிற்கும்; நாடன் எந்தை ஓம்பும் கடிப்புடை வியல் நகர்த் துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி - மலைநாடனே ! எந்தையாலே பாதுகாக்கப்படுகின்ற காவலையுடைய அகன்ற மாளிகையிடத்துத் துஞ்சாமற் காக்குங் காவலர்தாம் சிறிது அயர்ந்திருக்கும் பருவமறிந்து; இரவின் வரூஉம் அதனினும் வைகலும் பொருந்தல் ஒல்லாக் கண் (கொடிது) - நீ இரவின்கண் வந்து முயங்கிச் செல்லும் அதனினும் காட்டில் நாள்தோறும் நீ வரும் நெறியின் ஏதத்தைக் கருதுவதனாலே துயிலப் பெறாது என்கண்ணும் கொடிதாயிராநின்றது; வாரா என் நார் இல் நெஞ்சு கொடிது - அன்றியும் நின்பாற் சென்று வாராத என்பால் அன்பற்ற என்னெஞ்சமும் கொடிதாயிராநின்றது காண் !; எ - று.

    (வி - ம்.) எய் - முட்பன்றி : மேவல் - விரும்புதல். நூழை - துவாரம். கடிப்பு - காவல். நார் - அன்பு. நகர் - மாளிகை. கொடிதென்னுங் குறிப்புமுற்றைக் கண்ணுக்கும் நெஞ்சுக்குந் தனித்தனி கூட்டுக. நாடன் : அண்மை விளி, எந்தையோம்பு நகர்-காவன்மிகுதி. பொருந்தலொல்லாக்கண்-கண்டுயில் மறுத்தல். வாராவென்னெஞ்சு - அன்பினிலே இது தலைவி கூற்றைத் தன்கூற்றாகத் தோழிகொண்டு கூறியது. அஃறிணையாகிய பன்றியும் கரவிற் சேறற்கஞ்சி மீளுநாடனாயிருந்தும் நீ அஞ்சாது புகுதலின் என்கண்ணுறங்கிலதென்றிரங்கினாள்.

    உள்ளுறை :-பன்றி தினையை யுண்ணவேண்டி இயந்திரமமைத்த புழையிற்புகும்போது பல்லியடிப்பக்கேட்டு ஏதமுடைத்தென்று மீண்டு தன் அளைபுகுமென்றது, தலைமகன் தலைமகளது இன்பந்துய்ப்பக் காவன் மாளிகையுட் கரவிற்புகும்பொழுது நிலவு வெளிப்படன் முதலாய இடையீடு நிகழக் கண்டு ஏதமுடைத்தாமென்று மீண்டும் தன்பதி புகுதவும் அமையு மென்றதாம். இதனான், இடையீடின்றித் துய்க்க வேண்டி வரைந்தெய்துக வென்றதாயிற்று. மெய்ப்பாடு - அவலத்தைச் சார்ந்த பெருமிதம் பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) செய்ம்மேவல் எனற்பாலது இசைநோக்கி யகரமும் மகரமும் தனித்தனி அளபெடுத்துச் செய்ய்ம்ம் மேவல் என்றாயிற்று. பிறக்கு-பின்புறம். நீ இரவின் வருதல் கொடிது. அதனினும் பொருந்தல் ஒல்லாக் கண் கொடிது; அதனினும் வாரா நெஞ்சு கொடிது என்றவாறு. 'கடியுடை வியனகர்' என்றும் பாடம்.

(98)