(பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில் வேண்டியஇடத்துத் தோழி, ‘‘ஏற்றுக் கோடற்குத் தகாத கொடுமையை உடையனாயினும் அதனை மனங்கொள்ளாமல், கற்பொழுக்கத்தின் சிறப்பினால்தலைவன் கொடுமையை மறைத்து அவன் நாணும்படி தலைவி தானேஅவனை ஏற்றுக் கொள்ள வருகின்றாள்’’என்று கூறியது.)
 10.   
யாயா கியளே விழவுமுத லாட்டி  
    
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் 
    
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் 
    
காஞ்சி யூரன் கொடுமை 
    
கரந்தன ளாகலி னாணிய வருமே. 

என்பது தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

ஓரம்போகியார் (பி-ம். ஓரம்போதியார்).

     (பி-ம்.) 2. ‘படீய’, ‘பறீஇயர்’.

     (ப-ரை.) யாயாகியள்-தலைவியாயவள், விழவு முதலாட்டி-தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவு வதற்குக் காரணமாக உள்ளாள்; பயறு போல் இணர பைந்தாது -பயற்றின் கொத்தைப் போன்ற பூங்கொத்தில் உள்ளன வாகிய பசிய பூந்தாதுக்கள், படீஇயர்-தங்கள் மேலே படும்படி, உழவர் வாங்கிய - உழவர்கள் வளைத்த,கமழ் பூமென் சினை-கமழ்கின்ற பூக்களை உடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட, காஞ்சி ஊரன்- காஞ்சி மரத்தை உடைய ஊரனது, கொடுமை கரந்தனள் ஆகலின்-கொடுமையை நாம் தெரிந்து கொள்ளாதபடி மறைத்தாள் ஆதலின்,நாணியவரும்- அவன் நாணும்படி எதிர்கொள்ள வருகின்றாள்.

     (முடிபு) விழவு முதலாட்டி, தலைவனது கொடுமையை வெளி யிடாமல் மறைத்தாளாதலால் அவன் நாணும்படி வாரா நின்றாள்.

     (கருத்து) தலைவி தலைவனது கொடுமையை மறைத்து அவனை ஏற்றுக் கொள்வாளாயினாள்.

     (வி-ரை.) யாயாகியள்: 9-ஆம் செய்யுளின் விசேட உரையைப் பார்க்க. விழவு முதலாட்டி என்றது தலைவி இல்லறம் நிகழ்த்த வந்த பின்பே தலைவனுக்குச் செல்வம் உண்டாயிற்று என்பதைத் தெரிவிக்கின்றது; இந்நூல் 295-ஆம் செய்யுளாலும் இது விளங்கும். முதல்-காரணம் (தொல். வேற்றுமை.10.) காஞ்சித்தாது முதலியன இளைய மகளிரால் விரும்பப்படுவனவாதலால், அவர் பொருட்டு உழவர் வளைத்தனர்; அதனை மகளிர் விரும்புவதை, ‘‘ ததைந்த காஞ்சி’’ (பதிற். 23: 19) என்பதற்கு, ‘விளையாட்டு மகளிர் பலரும் தளிரும் முறியும் தாதும் பூவும் கோடலால் சிதைவுபட்டுக் கிடக்கின்ற காஞ்சி’ என்று எழுதப்பட்டுள்ள உரையினால் அறியலாகும். உழவர் காஞ்சிச் சினையை வளைத்தமையைத் தாதாகிய அடையாளம் புலப்படுத்துதல் போலத் தலைவனுடைய பரத்தைமையை அவன் உடம்பின்பாற் காணப்படும் சந்தனம் முதலியன புலப்படுத்தும் என்பது குறிப்பு; கலி.72,78-ஆம் பாடல்களாலும் இது விளங்கும். கொடுமை என்றது தலைவனது பரத்தைமையை. தான் கொடுமை செய்த காலத்தும் அதனைப் பொருட்படுத்தாமல் எதிரேற்றுக் கொள்ளும் தலைவியின் செயல் தலைவனுக்கு நாணத்தை உண்டாக்கும்; ‘‘இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண, நன்னயஞ் செய்து விடல்’’(குறள,314.) நாணிய-யாம் நாண வென்றுமாம்; இப்பொருளுக்கு, தலைவியைப் பின்பற்றி யொழுகும் யாம் பன்முறையும் அவன் கொடுமையைச்சுட்டி அவனுக்கு வாயில் நேர்தல் முறையன்றென்று கூறி நிற்ப, அவன் கொடுமையை அறிந்து வருந்திய தலைவி அதனை மறந்து தன் கற்பொழுக் கத்தினால் எம்மை நாணச் செய்தாள் என்பது கருத்தாகக் கொள்க.

     ஒப்புமைப் பகுதி 1. யாயாகியள்: குறுந்: 9:1.

     2-4. 1காஞ்சிப் பூந்தாது: ‘‘கோதையிணர குறுங்காற் காஞ்சிப், போதவிழ் நறுந்தா தணிந்த கூந்தல்’’, ‘‘குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லிணர்ப், பொற்றகை நுண்டா துறைப்ப’’ (அகநா.296:1-2,341:9-10.) இணர காஞ்சி; ‘‘வீழிணர்க் காஞ்சி’’ (அகநா.336;8-9.)

     4. தலைவன் கொடுமை: குறுந். 9;7 ஒப்பு. மு. குறுந்.9.

(10)
 1.  
சீவக. 648 - 50.