(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.)
 101.    
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் 
    
அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும் 
    
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே 
    
பூப்போ லுண்கட் பொன்போன் மேனி 
5   
மாண்வரி யல்குற் குறுமகள் 
    
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே. 

என்பது (1) தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

     (பாங்காயினார் - தோழி முதலியோர்.)

(2) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கிய தூஉமாம்.

    (வலித்தநெஞ்சு - பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த நெஞ்சு செலவு அழுங்கியது - செல்லுதலைத் தவிர்ந்தது.)

பரூஉமோவாய் (பி-ம். பருவ மோவாய்)ப் பதுமன்.

     (ப-ரை.) விரி திரை பெரு கடல் - விரிந்த அலையையுடைய பெரிய கடல், வளைஇய உலகமும் - வளைந்த பூவுலக இன்பமும், அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் - பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும், இரண்டும் - ஆகிய இரண்டும், பூ போல் உண்கண் - தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன் போல் மேனி - பொன்னைப் போன்ற நிறத்தையும், மாண் வரி அல்குல் - மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும் உடைய, குறுமகள் - தலைவியினது, தோள் மாறுபடூஉம் - தோளோடு தோள் மாறுபடத்தழுவும், வைகலொடு - நாளிற்பெறும் இன்பத்தோடு, தூக்கின் - ஒருங்குவைத்து ஆராய்ந்தாலும், எமக்கு-சீர்சாலா - அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா.

     (முடிபு) எமக்கு, குறுமகள் தோள் மாறுபடூஉம் வைகலொடு, கடல் வளைஇய உலகமும் புத்தேணாடும் ஆகிய இரண்டும் தூக்கிற் சீர் சாலா.

     (கருத்து) தலைவி பெறுதற்கரிய சிறப்பினள்.

     (வி-ரை.) விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமென்று சிறப்பித்தது நிலப்பரப்பின் பெருமையைக் கூறும் வாயிலாக அதன் உயர்வை உணர்த்தியபடி, தானம் தவம் முதலியன செய்தே அடைய வேண்டுதலின் அரிது பெறு சிறப்பிற் புத்தேணாடென்றான். உலகம், நாடு: ஆகுபெயர் (குறள். 247, பரிமேல்.) சீர் - கனம்; ‘சீர் தூக்கும் கோல் - பாரத்தை வரையறுக்கும் கோல்’ (குறள். 118, பரிமேல்.) ‘பூப்போலுண்கண் குறுமகள்’எனத் தலைவியின் உறுப்புக்களை அடைகளாற் சிறப்பித்துக் கூறியது அவள்பாற் பெற்ற இன்பத்தின் பயனாகத் தலைவன் உணர்ந்த இயல்புகளைப் புலப்படுத்தியபடி. தோள் மாறுபடுதலாவது ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும் ஒருவர் வலத்தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல். எமக்கென்றது தலைவியையும் உளப்படுத்தியபடி.

     தூக்கினு மென்ற வும்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரங்கள் அசை நிலை.

     இரண்டாவது கருத்து: பொருள் தேடும் பொருட்டுத் துணிந்த நெஞ்சை நோக்கி, “இவளைப் பிரிந்து பொருள் தேடலாற் பெறும் பயன் யாது? பொருளால் இல்லறமாகிய இம்மைப் பயனும் அவ்வறத்தான் வரும் சுவர்க்க இன்பமாகிய மறுமைப் பயனும் உண்டாமாதலின் அதனைத் தேடுதல் இன்றியமையாததெனின் இவளால் வரும் இன்பம் அவ்விருவகை இன்பத்தினும் உயர்வுடையது” என்று கூறித் தலைவன் செலவு தவிர்ந்தது. இக்கருத்து முன்னையதினும் சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.

     மேற்கோளாட்சி 1. பதினாறெழுத்தான் வந்த கட்டளையடி (தொல். செய். 50, இளம்.)

     மு. பொருளினும் காமம் வலியுடைத்தென உட்கொண்ட வழித் தலைவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 5, இளம். ); கரணத்தின் அமைந்து முடிந்தகாலை நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சிக்கண் இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலியவற்றால் தலைவன் மகிழ்ந்து (தொல். கற்பு. 5, செய். 187, ந.)

     ஒப்புமைப் பகுதி 2. புத்தேணாடு அரிதிற் பெறப்படுதல்: “அரிதிற் பெறு துறக்கம்” (பரி. 15:17.) ‘தவத்தானுந் தானத்தானு மன்றிப் புகலாகாச் சுவர்க்கம்” (இறை. 2, உரை.)

     1-3. ஒன்றன் பெருமைக்குப் பூவுலகத்தையும் வானத்தையும் ஒப்பிடுதல்: “செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும், வானகமும் மாற்ற லரிது” (குறள். 101.)

     4. பூப்போலுண்கண்:முல்லை. 23;நற். 20:6, 325:7;ஐங். 16:4. 101:4.

     பூவைப்போன்ற உண்கண்: குறுந். 5:5, 377:1.

     கண்ணிற்குப் பூ: குறுந். 72:1-5, ஒப்பு.

     பொன் போல் மேனி: குறுந். 319:6; நற். 10:2; ஐங். 230:4; அகநா. 212:1-2.

     5. மாண்வரி யல்குல்: குறுந். 180: 5-6.

     தலைவியைக் குறுமகளென்றல்: குறுந். 89:7, ஒப்பு.

     மு. ஒருவகைஒப்பு: குறுந். 267; பட். 218-20; குறள், 1103; திருச்சிற்.46

(101)